எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்து எடுத்த முடிவின்படி
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வரவேற்கத்தக்கது!

8 ஆம் தேதிக்குப் பிறகும் பிரதமர் சந்திக்க மறுத்தால் தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் ராஜினாமா!

தமிழர் தலைவர்
ஆசிரியர் முக்கிய வேண்டுகோள் அறிக்கை

 

தமிழ்நாடு முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் இன்று (3.3.2018) சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்ட முடிவு வரவேற் கத்தக்கது; மத்திய அரசு காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லையென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் ராஜினாமா செய்யவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டு அறிவித்தது (16.2.2018). இரண்டு வாரம் கடந்துவிட்ட நிலையிலும், மத்திய அரசு அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதா?

தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் (22.2.2018) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்துக் கட்சித் தலைவர்களும், முதலமைச்சர் தலைமையில் பிரதமரை சந்திப்பது என்றும், அதற்கான தேதியைப் பிரதமர் ஒதுக்கித் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை யில் நடைபெற்ற விழாவிற்கு (24.2.2018) வருகை தந்த பிரதமரிடமும் தமிழ்நாடு முதலமைச்சர் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவேண்டும் என்று கேட்டுக்கொண்டும், பிரதமர் எந்தப் பதிலும் கூறவில்லை.

முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு வரவேற்கத்தக்கது!

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதன் அடிப் படையில், இன்று (3.3.2018) காலை அரசு தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த அணுகுமுறை வரவேற்கத்தகுந்தது - பாராட்டத்தகுந்ததாகும்.

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதா?

பிரதமர் இதுவரை சந்திப்புக்கான தேதியை அறி விக்காததோடு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தியுங்கள் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இத்துறை அமைச்சரான நிதின் கட்காரி, காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க இயலாது என்று ஏற்கெனவே தமிழ்நாட்டிற்கு வந்து, தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும்  போக்கில் மத்திய பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெகு உறுதியாக இருப்பது இதன்மூலம் தெளிவாகி விட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பையோ, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் வேண்டுகோளையோ சற்றும் மதிப்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்று இதன்மூலம் தெரிய வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்
தீர்மானம்

இது கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கும் அடாத செயலாகும். மாநில அரசின் உரிமைக் குரலை உதாசீனப்படுத்தும் ஜனநாயக விரோத - அரசியல் சட்ட விரோதப் போக்காகும்.

கருநாடக மாநில சட்டமன்றத் தேர்தலை மனதிற் கொண்டு அரசியல் லாபக் கண்ணோட்டத்தோடு மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்படுவதாகத்தான் இதைக் கருதவேண்டும்.

இந்த நிலையில், இன்று தமிழக முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்து ஆலோசித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது குறித்துத் தீர்மானம் நிறைவேற்றுவது என்ற முடிவு பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.

அனைத்துக் கட்சி தமிழக எம்.பி.,க்களும் ராஜினாமா

அதற்குப் பிறகும் மத்திய அரசு அசைந்து கொடுக்க வில்லையெனில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழியே இல்லை.

இதில் அனைவரும் ஓரணியில் இறுதிவரை நிற்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் ஒன்றாய்த் திரண்டு

ஆதரவு தருவர்!

இதற்குத் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக் களும் உறுதியாக ஆதரவுக்கரம் நீட்டுவார்கள் என் பதில் அய்யமில்லை; இதில் யாராவது முரண்படு வார்களேயானால், தக்க நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் தண்டனையை வழங்குவார்கள் என்பதில் அய்யமில்லை.

சென்னை                                                                        தலைவர்
3.3.2018                                                                    திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner