எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு ஆய்வாளரான தமிழர்  அமர்நாத் இராமகிருஷ்ணனை அனுப்ப மறுப்பது ஏன்?

ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது திராவிட நாகரிகம் என்பதை இருட்டடிப்பதா?

கீழடியில் அகழ்வாராய்ச்சியில் மேற்கொண்டு, திராவிட நாகரிகத்தின் தொன்மையை வெளி யில் கொண்டு வந்த ஆய்வாளர் அமர்நாத் இராம கிருஷ்ணனை கீழடியிலிருந்து முன்பு இடமாற்றம் செய்ததோடு மத்திய அரசு, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சிறப்புக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள  அறிக்கை வருமாறு:

கீழடி அகழாய்வு ஆராய்ச்சி 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மூத்த குடி தமிழ்க்குடி' என்ப தற்கான வரலாற்று ஆவணம் கீழடியில் கிடைத்திருப் பது உலகத் தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை! மிகவும் தொன்மையான கீழடி ஆய்வு, இன்றைக்குப் பாதியோடு நிறுத்தப்பட்டு இருக்கிறது. இங்கே மனி தர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம் என்ற ரீதியில் மழுப்பலான அறிக்கையைக் கொடுத்து, மண் ணைப் போட்டு மூடுவிழா கண்டிருக்கிறார், இதன் கண்காணிப்பாளரான சிறீராமன்.

தமிழர்களின் நாகரிகத்தை, தொன்மையை இருட் டடிப்பு செய்வதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இப்பொழுது ஏற்கெனவே தோண்டப் பட்ட 9 குழிகளையும் மூடும் பணி நடைபெற்று வருகிறது.

2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகம்

சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில், கடந்த 2015-2016 ஆம் ஆண்டுவரை தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில், 2,500 ஆண்டுகள் பழைமையான தமிழர்களின் நாகரிகம், 5000-த்துக்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் என முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய் வில்கண்டுபிடிக்கப்பட்டன.ஆரியநாகரிகத்திற்குமுந் தையது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த அகழ் வாராய்ச்சியைக் கீழடி அகழாய்வுக் குழுவின் தலைவராக அப்போது இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மிகுந்த ஆர்வத்துடன், முழுமையாக ஆய்வை மேற்கொண்டார்.

மூன்றாம் கட்ட ஆய்வுப் பணிகள் முடிவடைந்துள்ளன. நீதிமன்றம் நான்காம் கட்ட ஆய்வுக்கு, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தொல்லியல் துறை தொடர்ந்து ஆய்வு செய்ய அனுமதி வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அதிகாரிகள் யாரும் அங்கு இல்லாததாலும், கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களைப் பார்க்க முடியாமலும் சுற்றுலாப் பயணிகள் கீழடிக்கு வந்து ஏமாற்றத்துடனும் திரும்பிச் செல்கின்றனர். நான்காம் கட்ட ஆய்வு நடக்குமா? நடக்காதா? என்கிற சந்தேகம் சமுக ஆர்வலர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. 110 ஏக்கரிலும் ஆய்வு செய்யப்படவேண்டும். மக்களோடு மக்களாக இருக்கும் ஆய்வாளர்கள் வரவேண்டும். அப்போதுதான் நாங்கள் நிலம் கொடுப்போம் என்று விவசாயிகள் ஒரு பக்கம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந் நிலையில்தான் குழிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதோடு நின்றுவிடுமா கீழடி அகழாய்வு ஆராய்ச்சிப் பணி? இந்தக் கேள்வி, ஒவ்வொரு தமிழரின் கேள்வியாக இன்று எழுந்து நிற்கிறது.

ஹரப்பா திராவிடர் நாகரிகம் பாதுகாக்கப்படுகிறது

140 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்பா திராவிடர் நாகரிக அடையாளங்கள், இன்றும் பாகிஸ்தானின் அழகு குலையாமல் காக்கப் படுகின்றன. கீழடியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட கீழடி ஆய்வு முழுமையாக ஆய்வு முடியாத நிலையில் குழிகள் மூடப்படுவது அதிர்ச்சிக்குரியது.

தமிழரான ஆய்வாளர் மாற்றப்பட்டார்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வினை மேற்கொண்ட தமிழரான அமர்நாத் இராமகிருஷ்ணன் திடீரென அசாம் மாநிலத்திற்கு மத்திய அரசு மாற்றியதே உள் நோக்கம் கொண்டது என்று கடும் எதிர்ப்பு தமிழ்நாட்டில் வெடித்துக் கிளம்பியது.

அந்த அதிகாரி தொடர்ந்திருந்து, ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்நேரம் மிகப்பெரிய உண்மைகள் வெளிப்பட்டிருக்கும்.

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் அழைப்பும் -

அமர்நாத் இராமகிருஷ்ணனுக்குத் தடையும்!

இந்நிலையில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்ட மைப்பின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள 50 தமிழ்ச் சங்கங்கள் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. கூட்டமைப்பின் ஆண்டு விழாவையொட்டி இந்த சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை ஒன்றாம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது.  அவ்வமைப்பின் அழைப்பின் பேரில் இதில் பங்கேற்க, இதற்கான அனுமதி கோரி, பயண ஆவணங்களுடன் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் கடிதம் எழுதினார். ஆனால், இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று அதன் துணை இயக்குநர் தாரா சந்தரிடமிருந்து மே 25 ஆம் தேதி பதில் கடிதம் வந்துள்ளது. இதற்கான காரணம் தெரிவிக் கப்படவில்லை.

ஆரியர் - திராவிடர் போராட்டம்

இது மத்திய அரசின் மிகவும் கீழ்த்தரமான ஓர் உள்நோக்கம் கொண்ட முடிவாகும்.  இவரை அமெ ரிக்கத் தமிழர்கள் அழைப்பது தமிழர் நாகரிகம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான். அதற்கு இந்திய அரசு பெருமைப்பட வேண்டுமே தவிர, ஆத்திரப்பட்டு இம்மாதிரி தவறான உரிமைப் பறிப்பு செய்கைகளில் ஈடுபடக்கூடாது. இவர் அமெரிக்கா சென்றால், கீழடி அகழாராய்ச்சிபற்றிய  உண்மை நிகழ்வு கள் தமிழர் மாநாட்டில் வெளிப்படுத்திவிடுவார். இதனால், அந்நிய மண்ணிலும் தமிழர் பழைமை நாகரிகம் குறித்த பேச்சு எழும் என்னும் எண்ண ஓட்டத்தினாலேயே மத்திய அரசின் சூழ்ச்சிதான் இந்த அனுமதி மறுப்பு ஆகும். தொன்று தொட்ட தமிழர் நாகரிகம் உலகுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் இந்திய மத்திய அரசு முனைப்பாக உள்ளது. அரசமைப்புச் சட்ட உரிமையைப் பறிக்கலாமா?

நாட்டில் நடப்பது ஏதோ அரசியல், அரசாட்சி என்று கருதக்கூடாது. ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் என்பதற்கு மேலும் இது ஓர் எடுத்துக்காட்டே!

திராவிட' பெயரைக் கட்சியில் வைத்துள்ள அதிமுக அரசு - இதில் தலையிட்டு திராவிட நாகரிகத்தை உலக அரங்கில் கொண்டு செல்லக் கிடைத்த வாய்ப்பிற்கு முட்டுக்கட்டை போடும் மத்திய அரசிடம் வற்புறுத்தி, தமிழரான ஆய்வு அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களை அமெரிக்க மாநாட்டிற்கு அனுப்பி வைக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.


கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

13.6.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner