எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 12- டில்லியில் 30 அடி ஆழத்தில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது 18 வயதிலிருந்து 30 வயதுக் குள்ளான தொழிலாளர்கள் அய்ந்துபேர் உயிரிழந்தார்கள்.

டில்லி மேற்கு பகுதியில் மோதி நகர் குடியிருப்புப்பகுதியில் பி டவர், டிஎல்எஃப் கழிவுநீர்த்தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த தொழிலாளர்கள் அய்ந்துபேர் விஷவாயு தாக்கியதால் சுவாசிக்க முடியாமல் திணறினார்கள்.

விஷால், சர்ஃபரஸ் பங்கஜ், ராஜா, உமேஷ் ஆகிய அய்ந்து பேர் விஷவாயுவை சுவாசித்து மயக்கமடைந்த பிறகு, டில்லி ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே அவர்களில் நால்வரின் உயிர் பிரிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். விஷால் என்பவர் மட்டும் தொடர்ந்து சிகிச்சைக்க சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேவையான பாதுகாப்பு கருவிகளை அணியாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொட்டியில் இறங்கி பணியாற்றவேண்டிய பணி அவரு டையதல்ல, ஆனால், மற்றவர்களின் கட்டாயத்தின்பேரிலேயே விஷால் தொட்டிக்குள் இறங்கியிருக்கக்கூடும் என்று விஷா லின் சகோதரி சத்யா கூறினார். விஷால் மருத்துவமனைக்கு சென்றபோது உயிரோடு இருந்துள்ளார். சுவாசிக்க முடியாமல் இருப்பதை அவர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பிறகு காலம் கடத்தியே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்கிறார் விஷாலின் சகோதரர் அங்கத்.

ஜித்தேந்தர் என்பவர் கூறியதாவது: “நான் அப்போது வேறு பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தேன். என்னுடன் வேலை செய்துவருபவரான கபில் என்பவர்தான் என்னிடம் தொட்டிக்குள் அய்ந்துபேர் சிக்கிக்கொண்டார்கள் என்று கூறினார். அப்போது சிலர் காவல்துறைக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின்னரே ஒருவர்பின் ஒருவராக தொட்டியிலிருந்து வெளியே கொண்டு வந்தார்கள். குடியிருப்பு பகுதியில் வேலைசெய்வோரை சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்ய சொல்கிறார்கள். அதனால்தான் இதுபோன்ற நிகழ்வு நடந்து விடுகிறது’’ என்றார்.

சேலம் 8 வழிச்சாலை திட்டம் 6 வழிச்சாலையாக குறைக்க முடிவு

சென்னை, செப். 12- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்றம் உள்ளிட்ட பல மாற்றங்களுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய வரைவு அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளது.

சென்னை, சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் குறித்து செய்தி வெளியானதில் இருந்தே அதற்கு ஏராளமாக எதிர்ப்புகள் கிளம்பியது. ஏராளமான மரங்கள் வெட்டப் படுகிறது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், வனப் பகுதிகள் கையகப்படுத்தப்படும் உள்ளிட்ட ஏராளமான காரணங்களை சுட்டிக்காட்டி அதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வந்தன.

இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இந்த திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவந்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக மாற்றங்களை கொண்ட புதிய அறிக்கையை சமர்பித்துள்ளது.

அதன்படி, இந்த திட்டம் முதல் கட்டமாக 8 வழிச் சாலையில் இருந்து 6 வழிச்சாலையாக குறைக்கப்படுகிறது. வருங்காலத்தில் போக்குவரத்துத் தேவைக்கு ஏற்ப அது 8 வழிச்சாலையாக மாற்றப்படும். அதனால், இந்த திட்ட மதிப்பீடு ரூ.10,000 கோடியில் இருந்து ரூ. 7210 கோடியாக குறைக்கப்படுகிறது.

சேலத்தில் உள்ள கல்வராயன் மலைக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு செங்கம், சேலம் என வழிமாற்றம் செய்யப்படவுள்ளது. வனப்பகுதிகளில் 70 மீட்டர் அகலத்துக்கு அமைக்கப்பட இருந்த சாலைகள் 20 மீட்டர் குறைக்கப்பட்டு 50 மீட்டர் அகலமாக அமைக்கப்படும்.

வனப்பகுதியில் 13.2 கிலோ மீட்டருக்கு பதில் 9 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே சாலை அமைக்கப்படும். வனப்பகுதியில் 300 ஏக்கருக்குப் பதிலாக 103 ஏக்கர் வனப்பகுதி மட்டுமே கையகப்படுத்தப்படும்.

திறந்தவெளி சிறைகளில் பெண்களுக்கு அனுமதி

அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை, செப். 12- மதுரை, சின்னசொக்கிகுளத்தை சேர்ந்த கே.ஆர்.ராஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சென்னை (புழல்), திருச்சி, வேலூர் மற்றும் மதுரையில் பெண்களுக்கான தனிச்சிறைச்சாலைகள்  உள்ளன. ஆண் கைதிகளுக்கு சிவகங்கை, சிங்காநல்லூர் மற்றும் சேலத்தில் திறந்தவெளி சிறைகள் உள்ளன.

இங்கு விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவர். இதனால், மன ரீதியாக தன்னம்பிக்கை ஏற்பட்டு தங்களது எதிர்காலத்தை சிறப்பாக எதிர்கொள்ள முடியும். எனவே, தமிழகத்தில்  பெண்களுக்கான திறந்தவெளி சிறைகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். சிறைத்துறை கூடுதல் ஏடிஜிபி அசுதோஸ் சுக்லா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தில் பெண்களுக்கு என தனியாக 5 மத்திய சிறைகள், 10 சிறப்பு மற்றும் சப்-ஜெயில்கள் உள்ளன. சிறைத் துறை விதிகளின்படி பெண்கள், மூன்றாம் பாலினத்தோர், அரசியல் கைதிகள் உள்ளிட்டோரை திறந்தவெளி  சிறையில் அனுமதிக்க முடியாது. பெண் கைதிகளை திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதில் பாதுகாப்பு பிரச்சினை உள்ளது என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், சிறைத்துறை விதிகளில் பெண்களை திறந்தவெளி சிறைக்கு மாற்ற அனு மதி மறுப்பது ஆண், பெண் இடையே பாகுபாடு காட்டுவதை போல உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

எனவே,  திறந்தவெளி சிறைக்கு பெண்களை அனுமதிக்க மறுக்கும் விதியை ரத்து செய்வது, பெண்கள், அரசியல் கைதிகள், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்டோரை அனுமதிக் கும் வகையில் விதிகளை மறுபரிசீலனை செய்வது குறித்து  அரசு 12 வாரத்திற்குள் முடிவெடுக்க உத்தரவிட்டு விசார ணையை ஒத்திவைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner