எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தி.மு.க. பொருளாளராக விருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களின் முதுமையின் காரணமாக உடல்நலம் குன்றிய சூழ்நிலையில், இயக்கப் பணிகள், மக்கள் நலப் பணிகளில் அதன் தாக்கத்தால் பழுதுபட்டு விடக்கூடாது, தொய்வின்றித் தொடர் ஓட்டமாக நடைபெறவேண்டும் என்ற பொதுநோக்கில் தி.மு.க. பொருளாளராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் என்ற கூடுதல் பொறுப்பு அளித்து, கட்சித் தலைவருக்குரிய அத்தனை உரிமைகளையும் தந்து,  இனமானப் பேராசிரியர் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் முன்மொழிய, முதன்மைச் செயலாளர் துரை.முருகன் அவர்கள் வழிமொழிய, தி.மு.க. பொதுக்குழு ஒருமனதாகத் தேர்வு செய்து ஒரு திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. இது ஒரு திருப்பம் என்று தாய்க்கழகத்தின் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தம் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டது அடிகோடிட்டுக் கவனிக்கத்தக்கதாகும்.

இதற்கு முன் கட்சியின் பொறுப்புகளைத் தாம் ஏற்றுக் கொண்டபோது மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததாகவும், தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்குரிய பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகக் குறிப்பிட்டது -புரிந்துகொள்ளத்தக்கதே!

இதனை தாம் ஒரு பதவியாகக் கொள்ளாமல், பொறுப்பாகவே கருதுகிறேன் என்று சொன்னது - அவரது முதிர்ச்சிக்கும், கடமை உணர்ச்சிக்குமான பிரகடனம் என்றே கருதப்படவேண்டும்.

பதவி என்றால் வாகனம் போகும் பாதைகளில் மலர் படுக்கைகள் விரிக்கப்பட்டிருக்கும் - ‘பராக்குகளின்’ முழக்கங்கள் விண்ணை முட்டும் - இத்தியாதி இத்தியாதி செயற்கை வண்ணக் கலவைகள் உண்மை உருவத்தை மாற்றிக் காட்டும்;  ஒருமுறை கலைஞர் அவர்களேகூட இந்தப் பதாகைகள், வளைவுகள்பற்றி ஆழ்ந்த கருத்துடன் தவிர்க்கவேண்டும் என்று அறிக்கையே கூட வெளியிட்டதுண்டு. பொதுமக்கள் அதீதமான வெற்று ஆரவாரங்களை மகிழ்ச்சியோடு பார்ப்பதில்லை - முகம் சுளிக்கும் நிலைதான்.

எளியது என்பதுதான் வலிமை - இதனை தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் நம் கையில் ஒரு ‘கை விளக்கை’ கொடுத்ததுபோல் வாழ்ந்தும் காட்டினர். அதுபோலவே காலில் விழும் கலாச்சாரமும் நமது சுயமரியாதை இயக்க அகராதியில் இல்லாத ஒன்று.

தளபதி மு.க.ஸ்டாலின் கட்சியையும் கடந்து தமிழ்நாட்டின் ஒரு தலைவராக உருவாகிக் கொண்டு இருக்கிறார்;  திராவிடர் இயக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியில் இந்த ‘‘இளம் தலைவர்’’ முகிழ்த்துக் கிளம்புகிறார்.

அவரை உச்சிமோந்து வரவேற்க நாடு காத்துக் கொண்டிருக் கிறது. அவர் தி.மு.க.வின் செயல் தலைவர் என்பது - பார்ப்பதற்கு ஒரு கட்சிப் பிரச்சினையாகத் தோன்றக்கூடும். ஆனால், அதனையும் தாண்டி எதிர்காலத் தமிழகத்திற்கு ஒரு தலைமை என்கிற ‘‘சூட்சமமும்‘’ அதற்குள் சூள் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே கட்சி அமைப்பு - கடைகோடி வரை ஒழுங்காக வேர்ப்பரப்பி,  அடையாறு ஆலமரம்போல் கிளை பரப்பி எழுந்து நிற்கும் ஒரே அரசியல் கட்சி தி.மு.க. மட்டுமே!

அதனால்தான் ‘மிசா’க்களைச் சந்தித்தும், ரணம் இல்லாமல்  கம்பீரமான ‘நந்தனாக’ எழுந்து நிற்க முடிகிறது. 13 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பு இல்லாமல் மீண்டும் ‘பீனிக்ஸ்’ பறவையாக திட்பமாக - திடமாக சிறகடித்துப் பறக்க முடிந்தது.

ஒரு போராட்டம் என்றால் பல்லாயிரக்கணக்கில் மார்புப் புடைத்து சிறைக்கோட்டம் புகப் புன்முறுவலுடன் ஓடோடி வரும் தொண்டர்களின் பலம் உடைய மிகப்பெரிய - சமுதாயக் கொள்கையுடைய அரசியல் பாசறை தி.மு.க.வே!

அவர் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது கண்டு, கட்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் சுருதிப் பேதமின்றி ஒரே முகத்தில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் குவித்ததோடு மட்டுமல்ல; தளபதி ஸ்டாலின் அவர்கள் அந்தப் பொறுப்புக்கு மிகவும் பொருத்தமானவரே என்பதை பொருள் பொதிந்த சொற்களால் பூணாரம் சூட்டியதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

அந்தப் பொறுப்புகளை ஏற்ற சூட்டோடு சூட்டாக தமிழக முதலமைச்சரைச் சந்தித்ததும், விவசாயிகள் பிரச்சினை உள்பட நாட்டு நலன், உரிமைப் பிரச்சினைகளை எடுத்து வைத்ததும் சரியான அடியைப் பதிக்கும் தொடக்கமாகவே கருதப்பட வேண்டும்.

பொதுக்குழுவில் செயல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர், பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப்  பெற்றார். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியதும் அவர்தம் திராவிட இயக்கப் பாரம்பரியத்தின் பரிணாம நற்குணத்தின் நீட்சியைக் காட்டுகிறது.

தந்தை பெரியார் நினைவிடத்திற்கு வருகை தந்த தி.மு.க. செயல் தலைவர் அவர்களை வரவேற்று, உச்சிமோந்து பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களையும் தந்து, தாய்க்கழகத்தின் ‘சீதனத்தை’ அளித்து மகிழ்ந்தார் தமிழர் தலைவர் அவர்கள்.

அந்த ஒரு கணம், அந்த ஒரே ஒரு கணம் நெகிழ்ச்சியின், உணர்ச்சியின் சங்கமம்தான்!

திராவிடர் கழகம் கலப்படமற்ற சமுதாய முழுப் புரட்சிக் கான ஒரு மாபெரும் அமைப்பாகும். ஆளும் கட்சிகளை எதிர்ப்பதும், பாராட்டுவதும் என்பதெல்லாம் கொள்கையின் அடிப்படையில்தான்.

ஆட்சிகளின் போக்குகளையே மாற்றியதுண்டு. உடம்பெல் லாம் மூளை என்று பேசப்பட்ட ஆச்சாரியாரையே பதவியை விட்டு விரட்டிய இயக்கம் இது.

பிற்படுத்தப்பட்டவருக்கு வருமான வரம்பு கொண்டு வந்ததால் அதுவரை தேர்தலில் தோல்வியையே கண்டிராத எம்ஜி.ஆர்., மக்களவைத் தேர்தலில் பெரும்தோல்வியைச் சந்திப்பதற்குக் காரணமான கழகம் இது. இதனை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே ஒப்புக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மன்றம் செல்லாமலேயே முதல் சட்டத் திருத்தத்தையும் - 76 ஆவது சட்ட திருத்தத்தையும் (69 சதவிகித உறுதிப்பாடு) கொண்டுவரக் காரணமாக, சுக்கானாக இருந்த இயக்கம் திராவிடர் கழகம்.

முதலமைச்சர் காமராசரை பச்சைத் தமிழர், கல்விக் கண் திறந்த ரட்சகர் என்று தந்தை பெரியார் அவர்கள் பாராட்டிக் கொண்டே - அதே காலகட்டத்தில்  கடுமையான கனல் வெடிக்கும் போராட்டங்களைத் தந்தை பெரியார் நடத்தவில்லையா? ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் குறிப்பிட்ட பகுதியை எரித்து மூன்றாண்டுகள் வரை கடுந்தண்டனையை ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வெஞ்சிறை ஏகவில்லையா? பலரும் சிறையில் செத்து மடிந்ததுண்டே!

பச்சைத் தமிழர் காமரசர் ஆட்சிக் காலகட்டத்திலேயே இது நடந்தது - அவர் ஆற்றிய அரும்பெரும் கல்விப் பெரும்பணிக்காக சிறையிலிருந்து வந்தும் நாட்டுக்குத் தேவை காமராசர் ஆட்சியே என்று உரக்கக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா - திராவிடர் கழகம் அல்லவா!

சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் கருத்துகள், அறிவிப்புகள் சில நேரங்களில்  அந்தத் தாய்க் கழகத்தால் ஆதரிக்கப்பட்டுவரும் கட்சிக்கு மாறுபட்டதுபோலத் தோன்றக்கூடும். அதன் காரணமாக ஏதோ உறவில் பிளவுவந்துவிட்டது என்று நினைக்கத் தேவை யில்லை; திராவிடர் கழகத்தின் அத்தகு தனித்தன்மையான செயல்பாடுகள்தான் - அதனால் ஆதரிக்கப்படும் கட்சிக்கேகூட பலமாகும்.

திராவிடர் கழகத்திற்கும் - தி.மு.க.விக்கும் சில நேரங்களில் இத்தகு நிலைகள் ஏற்பட்டாலும், அந்தக் ‘‘கசப்பு’’ மருந்தாக உட்கொள்ளப்பட்டு ‘ஆரோக்கியம்‘ பெற்றதுண்டு - கடந்த காலங்களிலும் அப்படி நடந்திருக்கிறது.

அதுபோல, தமிழர் தலைவர் சில நாள்களுக்குமுன் வெளியிட்ட இரு அறிக்கைகள் வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், அந்த வேறுவிதப் புரிதல் ஒரு 24 மணிநேரத்தில் சரியான புரிதலாக மலர்ச்சி பெற்றது - நல்லதாகப் போய்விட்டது. இல்லையெனில் இதுதான் சந்தர்ப்பம் என்று சிலர் மகிழக்கூடும். அத்தகு வாய்ப்புகளை தற்காலிகமாக சுவைத்தவர்களும் நிதானமாக சிந்திக்கும்பொழுது எந்த இடத்தில் தவறு செய்தோம் என்பதை  உணரக்கூடும். திருத்தம் பெற்றால் நல்லதே!

களைகள் கலைகளாகி விட முடியாதல்லவா!

திராவிட இயக்க உணர்வாளர்கள் பதறிப் போனார்கள்;  தங்கள் மன வலியை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி கூறுவோம்! பாராட்டுவோம்!!

பெரியார் திடலுக்கு வந்த தளபதி அவர்களும், தமிழர் தலைவர் அவர்களும் ஒருவருக்கொருவர் மனந்திறந்து பேசி, இரண்டொரு நாள் தேவையில்லாமல் பறந்த பலூன் வெடித்துச் சிதறும் நிலை ஏற்பட்டதானது - கட்சிகளையும் கடந்து நாட்டுக்கு நல்லதே!

இன்று நம்மிடையே வாழும் திராவிட இயக்க - தன்மான இயக்க மூத்த தலைவர்கள் மும்மணிகள் கலைஞர் - இனமானப் பேராசிரியர் - தமிழர் தலைவர் ஆகியோர்தானே. இவர்களின்  அனுபவச் சுரங்கங்களிலிருந்து எடுத்துக்கொள்ள ஏராளமாக இருக்கின்றனவே!

மகிழ்ச்சியும், குதூகலமும் போட்டிப் போட்டுக் கொண்டு நடனம் ஆடும் அதேநேரத்தில், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடல்நலம் குன்றியிருப்பது கட்சிகளின் கவலை என்பதைவிட, நாட்டின் ஒட்டுமொத்த பெருங்கவலையாகும்.

ஒரு எழுபத்தைந்து ஆண்டுகாலம் அந்த மய்யப் புள்ளியை வைத்தே தமிழக அரசியல் உலக உருண்டை சுழன்று கொண்டிருக்கிறது. அவர்கள் நலம்பெற்று வழிகாட்டவேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவரின் விருப்பமே - ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பெருவிருப்பமாகும்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே எந்த மாநில - மத்திய ஆட்சிகளும் செய்ய முடியாத சமுதாய மாற்ற சாதனைகளைச் செய்தது தி.மு.க. ஆட்சியே!

சுயமரியாதைத் திருமணச் சட்டம், பெரியார் நினைவு சமத்துவ புரம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம், பெண்களுக்கான மறுமலர்ச்சித் திட்டங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவைதான் தி.மு.க.வின் தனித்தன்மை. இடதுசாரிகளின் ஆட்சிகளிலும் காணக்கிடைக்காதவை இவை!

இவ்வாட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று அறிவித்தவர் முதலமைச்சர் அண்ணா.

இது சூத்திரர்களுக்காக சூத்திரர்களால் ஆளப்படும் ஆட்சி என்று பிரகடனப்படுத்தியவர் முதல்வர் கலைஞர்.

இந்த அடித்தளத்தின்மீது கம்பீரமாக காரியங்களை ஆற்றும்போது - தளபதி என்ற தகுதிக்கான உச்சக்கட்ட பொருளோடு ஒளிவீசப் போகிறவர்  மு.க.ஸ்டாலின் - இந்த அத்தியாயத்தில் திராவிடர் கழகத்தின் பெருந்துணை மிக முக்கியமானதாகவேயிருக்கும்.

தொடங்கட்டும் தளபதியின் புதிய அத்தியாயம்!

 

- நமது சிறப்புச் செய்தியாளர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner