எழுத்துரு அளவு Larger Font Smaller Font

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில்

ஆதாயம் காணவே இந்த முடிவு!

இது அரசமைப்புச் சட்டத்துக்கும் - மரபுக்கும் முரணானது!

தேர்தல் முடிந்தபின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்க!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

 

அய்ந்து மாநிலங்களில் ஒரு குட்டி பொதுத் தேர்தல்போல மார்ச் முதல் வாரத்தில் நடத்திட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மத்திய பட்ஜெட் தேர்தலுக்குமுன் பிப்ரவரி  முதல் தேதியன்று தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது - அரசியல் லாப நோக்கத்தோடுதான்; இது அரசமைப்புச் சட்ட விதிக்கும், மரபுக்கும் முரணானது என்பதால், 5 மாநில தேர்தலுக்குப் பின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதிமுதல் மார்ச் 8 ஆம் தேதிவரை உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளுக்குப் பாதகம்!

இதன்படி இந்த அறிவிப்பு வந்த நொடியிலிருந்து, குறிப்பிட்ட மாநிலங்களில் எந்தவித சலுகை, லாபம் ஆளும் கட்சிக்கு ஏற்படுத்தும் - எதிர்க்கட்சிகளுக்குப் பாதகத்தை உண்டாக்கும் என்பது முக்கியமானது. எந்த சலுகைகளும் அரசு தரப்பிலிருந்து செய்யப்படக்கூடாது என்பது அரசியல் சட்ட விதி!

இந்திய அரசியல் சட்ட விதி 12 இன்படி, ‘அரசு’(State) என்பது அரசு, நாடாளுமன்றம், மாநில அரசுகள், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் எல்லாவற்றையுமே குறிக்கும்.

இந்தத் தேர்தல் தேதிகள் அறிவிப்புகளுக்குப் பின், மத்திய நிதியமைச்சர் இவ்வாண்டு புதுமையாக, முன்பிருந்த முறையை மாற்றி, (மார்ச் 31 ஆம் தேதிக்குமுன் முன்கூட்டியே மத்திய பட்ஜெட் தாக்கல் இருக்கும்) பிப்ரவரி ஒன்றாம் தேதியே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

நடக்கவிருப்பது ஒரு குட்டி பொதுத் தேர்தல்

ஒரு குட்டி பொதுத் தேர்தல் (Mini General Election) போல 5 மாநிலங்களில் தேர்தல் (அதிலும் உ.பி. மிகப்பெரிய மாநிலம்) நடைபெறும் நிலையில், மத்திய ஆளுங்கட்சி பட்ஜெட்டில் பல வரிச் சலுகைகள், பிற சலுகைகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளபடியால், அது அரசியல் சட்ட விரோதமாகிவிடும்; அந்த 5 மாநில தேர்தல் களில் அதன் தாக்கம் பிரச்சாரத்திற்கு - நேரிடையாகவோ - மறைமுகமாகவோ பயன்படுத்தப்படும் என்பது வெளிப்படை!

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை

ஜனநாயகத் தத்துவப்படியும், அரசியல் சட்ட நெறிமுறைப்படியும், பட்ஜெட் தாக்கலை மார்ச் மாதத்திற்குத் தள்ளி வைக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், அய்க்கிய ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ், தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம் உள்பட 12, 13 கட்சிகள் அணியாகத் திரண்டு தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, இந்த பட்ஜெட் தாக்கல் தேதியை தள்ளி வைத்து ஜனநாயக அரசியல் சட்ட நெறிகளைச் செயல்படுத்தும் வகையில் உரியது செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.

வெறும் மரபு மட்டுமல்ல -சட்டமும் உண்டு

இது முற்றிலும் நியாயமான கோரிக்கையே! அதுமட்டுமல்ல; இது அரசியல் சட்ட மரபினையும் காப்பாற்றிட உதவும் - வெறும் மரபு மட்டும் அல்ல ; சட்ட அடிப்படையும் இதில் அடங்கியுள்ளது. நாம் முதல் பத்தியில் சுட்டிக்காட்டியுள்ளதுபோல, ‘அரசு’ என்றால், நாடாளுமன்றத்தையும் உள்ளடக்கியது என்பது இந்திய அரசியல் சட்டத்தின் 12 ஆவது பிரிவு வற்புறுத்தும் ஒன்றாகும். அப்படி இருக்கையில், இந்த பட்ஜெட் தாக்கல் சரியானதாக இருக்க முடியாதே!

இவ்வாண்டு இந்த முறையைப் பின்பற்றுவதைத்  தள்ளி வைத்து, வரும் அடுத்தாண்டு முதல் புதிய முறையில் செயல்படுத்தலாமே!

பட்ஜெட் தாக்கல் தேதியைத் தள்ளி வைத்திடுக!

அரசு இதில் பிடிவாதம் காட்டத் தேவையில்லை.

அமைச்சரவை கூடி முடிவு எடுப்பதே சரியானதல்ல. அதில் எந்தச் சட்டச் சிக்கலும் ஏற்பட வழியில்லையா?

எதிர்க்கட்சிகள் கேட்பதை நாம் ஏற்பதா என்ற வீம்போ, தன்முனைப்போ மத்திய அரசுக்குத் தேவையில்லை.

எனவே, எதிர்க்கட்சிகளின் இந்த ஜனநாயகப் பாதுகாப்பு நடவடிக்கையை ஏற்று பட்ஜெட் தாக்கலை மார்ச் 8 ஆம் தேதிக்குமேல் நடத்துவதே சரியானதாகும்.

கி.வீரமணி  
தலைவர்,   திராவிடர் கழகம்.


சென்னை
6.1.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner