எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கருத்துரை

சென்னை, ஜன.12 ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் பி.ஜே.பி. இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கி, மாநில ஆட்சியைக் கவிழ்க்கலாமா? என்று பி.ஜே.பி. நினைக்கிறது  என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வீர்களா?

செய்தியாளர்: திராவிடர் நாகரிகத்தை மறைப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது என்று சொல்கிறீர்கள்; உங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பீர்களா?

தமிழர் தலைவர்: சட்ட ரீதியான நடவடிக்கையை நீதிமன்றங்களில் நடத்துவோம். சட்டத்திற்கு அப்பாற்பட்டு, அதேநேரத்தில், சட்டத்தை கையில் எடுக்காத - வரம்பிற்குட்பட்டு வெளியில் போராட்டங்களை நடத்துவோம். எனவே, நீதிமன்றத்திலும் இதற்குரிய பரிகாரம் தேடப்படும். அதைவிட மக்களுடைய ஆதரவு இருப்பதை காட்டுவதற்காக, மக்கள் மத்தியிலும் இந்தப்  பிரச்சினையை எடுத்துச் செல்வோம்.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்பற்றி

உங்கள் கருத்து....

செய்தியாளர்: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதே, அதுபற்றி உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: இப்பொழுது பந்து யாரிடத்தில் இருக்கிறது என்றால், ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறும்; சாதகமான தீர்ப்பு  வரும் என்றெல்லாம் சொன்ன பி.ஜே.பி.யினுடைய தோட்டத்திலே பந்து இருக்கிறது. எப்படியும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு எப்படியும் நடந்தே தீரும் என்று நம்முடைய முதலமைச்சர் சொல்லியிருக்கிறார், தமிழக அரசின் சார்பாக.

எனவே, இந்த இரண்டு பேருடைய தோட்டத்தில் அந்தப் பந்து இருக்கிறது. அதனை எப்படி அடிக்கப் போகிறார்கள் என்பது மிக முக்கியம்.

வேண்டுமென்றே இந்த உணர்வு இளைஞர்கள் மத்தியில்கூட மிக அதிகமாக சில நாள்களாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு,  இந்த நிலைக்குச் சரியானப் பரிகாரம் தேடவில்லையானால், இதனை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் நாங்கள் ஆதரிப்போம் என்று தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. தலைவர் ஒருவர் சொல்கிறார் என்றால், அவரே சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துங்கள் என்று மறைமுகமாக சொல்கிறார். அதன்மூலமாக தமிழக அரசிற்கு, ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்குவதற்கு, இதுவே ஒரு சிறந்த திட்டமாக பா.ஜ.க. உருவாகியிருக்கிறதோ என்கிற சந்தேகம், எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, பொதுவானவர்களுக்கும் இருக்கிறது.

எனவே, இதற்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு - மோடி அரசுக்கு உண்டு.  அதேநேரத்தில், இந்த ஆண்டு உறுதியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று சொன்ன நம்முடைய முதலமைச்சருக்கும் உண்டு.

எனவே, அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேளுங் கள்; விடை என்னவென்று பாருங்கள். இதில் அரசியல் உள்நோக்கமும் இருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. இந்தக் காளை மாட்டின்மூலமாக கவிழ்த்துவிடலாம் என்கிற சந்தேகம் இப்பொழுது வந்திருக்கிறது.

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை சரியாகக் கையாள்கிறதா தமிழக அரசு

செய்தியாளர்: தமிழக அரசு இந்தப் பிரச்சினையை சரியாகக் கையாண்டு இருக்கிறதா?

தமிழர் தலைவர்: தமிழக அரசு சரியாகக் கையாளப் போகிறதா? இல்லையா? என்பது இனிமேல்தான் தெரிய வரும். இதுவரையில் கையாண்டது முக்கியமல்ல; இனிமேல் சரியாகக் கையாளப் போகிறதா? என்பதுதான் முக்கியம். ஏனென்றால், உறுதியாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார் முதலமைச்சர்.  அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவரி டம் கேளுங்கள்.

மக்களுக்காகத்தான் சட்டம்;

சட்டத்திற்காக மக்கள் அல்ல.

செய்தியாளர்: பல்வேறு அமைப்பினர் தடையை மீறி ஜல்லிக் கட்டினை நடத்துவோம் என்று சொல்லியிருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: மக்களுடைய உணர்வுகள்தான் முக்கியம். மக்களுக்காகத்தான் சட்டம்; சட்டத்திற்காக மக்கள் அல்ல. தலைக் குத்தான் குல்லா; குல்லாவிற்காக தலை இல்லை.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர்கள் அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறினார்.

- கீழடியில் தொல்பொருள் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியை நிறுத்தியதைக் கண்டித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் (சென்னை, 12.1.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner