எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆய்வைத் தொடரும் வரை எங்கள் போராட்டமும் தொடரும்!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எச்சரிக்கை!!

சென்னை, ஜன.12 சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்பொருள் ஆய்வு நிறுத்தப்பட்டதற்குக் காரணம், அந்த ஆய்வின் முடிவு வெளிவந்தால், திராவிடர் நாகரிகம் - ஆரிய நாகரிகத்தைவிட தொன்மையானது என்ற உண்மை வெளியாகிவிடும் என்ற அச்சத்தினால்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஆய்வைத் தொடங்காவிட்டால், திராவிடர் கழகத்தின் போராட் டம் தொடரும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று (12.1.2017) நடைபெற்ற - கீழடி தொல்பொருள் ஆய்வை முடக்கியதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தமிழ்நாட்டினுடைய பண்பாடு, நாகரிகம், மொழி உணர்வு, அதே போல, ஜாதி ஒழிப்பு உணர்வு இவைகளையெல்லாம் முன்னிறுத்தக் கூடிய இந்த இயக்கம், அதற்கு ஆபத்து வரும்பொழுதெல்லாம் எச்சரிக்கையைத் தருவதோடு, அதனை எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிற இயக்கம் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகம்.

திராவிடர் கழகம் மட்டும் இந்த உணர்வைப் பிரதிபலிக்கவில்லை. இயக்க ரீதியாக திராவிடர் கழகம் இதனைச் சொன்னாலும், நடைமுறையில் இந்த உணர்வு என்பது தமிழகத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாக இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

மத்திய அரசு விஷமத்தை செய்துகொண்டே இருக்கிறது

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டை, தமிழ் மக்களை, திராவிட மக்களுடைய உரிமைகளைப் பறித்து, சோதித்து, அவர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்களா? அல்லது  தூங்கிக் கொண்டிருக்கின்றார்களா? என்று பார்க்கக் கூடிய வேலையில், மோடியினுடைய தலைமையில் இருக்கக்கூடிய, ஆர்.எஸ்.எஸால் இயக்கப்படக்கூடிய பா.ஜ.க. அரசு, மத்தியில் அதனுடைய பணியை அமைதியான முறையில் விஷமமாக செய்துகொண்டே இருக்கிறது.

அவ்வப்போது தமிழ் மக்களுக்கு அறைகூவல்களை விட்டுக் கொண்டிருக்கிறது.  இரண்டு நாள்களுக்கு முன்புகூட, பொங்கல் கட்டாய விடுமுறை அல்ல என்று கூறி, தமிழகம் ஆர்த்தெழுந்து ஒரு சுனாமிபோல கிளம்பி எழும்பியதைப் பார்த்தவுடன், 24 மணிநேரத்திற்குள்ளாக அவர்கள் தங்களுடைய உத்தரவை, ஆணையைப் பின்வாங்கினார்கள்.

இது எதைக் காட்டுகிறது என்று சொன்னால், தமிழ்நாட்டில் அவ்வப்பொழுது சமஸ்கிருதத்தைப் புகுத்துவது, குலக்கல்வித் திட்டத்திற்கு நிகரான ஒரு திட்டத்தைப் புகுத்துவது போன்ற பணிகளையெல்லாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றார்கள்; அண்மையில், கீழடி என்று சொல்லக்கூடிய சிவகங்கை மாவட்டம் மதுரை அருகே இருக்கக்கூடிய அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினார்கள்.

மத்திய தொல்பொருள் அமைப்பு அதனை செய்ய ஆரம்பித்த நேரத்தில், அது மிகப்பெரிய விரிவான ஒன்றாகத் தென்பட்டது. சிந்துவெளி நாகரிகத்திற்குச் சமமாக, திராவிடர் நாகரிகத்திற்குச் சமமாக, அரப்பா மொகஞ்சதாரா நாகரிகத்திற்குச் சமமாக,  நகரிய நாகரிகம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது நமது தொன்மையினை உலகுக்கு அறிவிக்கக்கூடிய நல்வாய்ப்புக் கிட்டியது.

அந்தப் பகுதிகளில், 2013-2014 ஆம் ஆண்டுகளில் வைகை நதிப் படுகையில் உருவான நகரிக நாகரிகத்தைப்பற்றிய விரிவான கள ஆய்வை நடத்தியது மத்திய தொல்பொருள் துறை.

293 கிராமங்களில்

மிகப்பெரிய அளவிற்கு  ஆய்வுகள்

வைகை நதியில் தொடங்கிய இடத்திலிருந்து, அந்நதி கடலில் கலக்கும்வரையில், நதியின் இரண்டு பக்கமும் மூன்று கிலோ மீட்டர் தொலைவுவரை உள்ள அனைத்துக் கிராமங்களையும் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். 293 கிராமங்கள் அதில் முக்கியத்துவம் பெற்றது. அந்த 293 கிராமங்களில் மிகப்பெரிய அளவிற்கு  ஆய்வுகளுக்கு தளமாகக் கிடைத்தது கீழடி என்ற ஊரில்.

எனவேதான், அந்தக் கீழடியை அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.  ஆனால் என்ன  நடந்தது? ஆய்வை நிறுத்திவிட்டார்கள். காரணம், அவர்களுடைய இந்துத்துவா கொள்கைக்கு, திராவிடர் நாகரிகம், பழமையான நாகரிகம், தொன்மையான நாகரிகம், வடக்கே சிந்துவெளியில் மட்டுமல்ல, தெற்கிலேயும் இப்பொழுது இருக்கிறது என்று வந்துவிட்டால், தங்களுடைய அடிப்படை கொள்கை  தோற்றுவிடுமே - திராவிடர் நாகரிகத்தினுடைய தொன்மை வரலாறு நிலை நிறுத்தப்பட்டுவிடுமே, ஆரிய நாகரிகத்திற்கு முந்தியது என்பது தெரிந்துவிடுமே என்பதற்காகத்தான் அதனை அப்படியே இப்பொழுது கிடப்பில் போட  நினைத்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்

இதுவரையில் அனுமதி கொடுக்கவில்லை. அனுமதியை இந்த ஆண்டில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நம்முடைய நாட்டில் உள்ள எல்லா கட்சியினரும், குறிப்பாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி கேட்டிருக்கிறார். அதற்கும் அவர்கள் உடனடியான பதிலை இன்னும் தரவில்லை.

ஒவ்வொரு துறையிலும் அவர்கள் வம்பு செய்வதுபோல, வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இதற்குப் போதிய நிதியை தமிழக அரசு ஒதுக்கவில்லை. ஆரம்பத்திலே அது சாதாரணம் என்று நினைத்திருக்கலாம். மற்ற இடங்களில் ஏராளமான அருங்காட்சியகங்கள்  இருக்கின்றன. கேரளாவில், குஜராத்தில், ஆந்திரா போன்ற இடங்களில்.

ஆனால், இங்கே இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைத்த நேரத்தில், ஒரே ஒரு அருங்காட்சியகம் சென்னை கோட்டையில் இருக்கிறது. இந்த அருங்காட்சியகம் இரண்டாவதாக வரக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது.

இந்தப் போரட்டம் ஏன்?

கேரளாவில், 15 ஆண்டுகாலமாக சங்க கால முசிறிப்பட்டணம் என்கிற இடத்தில் ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதேபோல, ஆந்திராவில் மிகப்பெரிய அளவிற்கு ஆய்வு தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆனால், இங்கே மட்டும், ஒரு குறைந்த காலத்தில்தான், குறைந்த அளவில்தான் நடைபெற்றது.

எனவே, இதனைக் கண்டித்து மீண்டும் மிகப்பெரிய அளவிற்கு அந்த அகழ்வாய்வு தொடரவேண்டும் என்பதை நாம் வலியுறுத்தத்தான் இந்தப் போராட்டம்.

திராவிடர் நாகரிகத்தை வஞ்சிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்

வேண்டுமென்றே, தமிழர் நாகரிகத்தை, திராவிடர் நாகரிகத்தை வஞ்சிக்கவேண்டும், மறைக்கவேண்டும் என்பதற்காகத்தான் திட்டமிட்டு, இந்துத்துவாவை கொள்கையாக கொண்டிருக்கிறவர்கள் நடந்துகொள்கிறார்கள்.

இன்னுங்கேட்டால், நடந்த நாகரிகம், அதனுடைய வெளிச்சம் பாய்ந்தால், சங்க இலக்கியங்கள், சங்க காலத்தில் எப்படியிருந்தன? தமிழர்கள் நாகரிகத்திற்குரியவர்கள், திராவிடர் நாகரிகம் எவ்வளவு தொன்மையானது என்பதெல்லாம் புரியும்.

அதுமட்டுமல்ல நண்பர்களே, அதைவிட மிக முக்கியமானது - இலக்கியங்களில் வரக்கூடிய ஆதாரங்கள் மட்டுமே போதுமா? என்று கேட்டார்கள். இல்லை, இல்லை இதோ வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன என்று காட்டக்கூடிய வாய்ப்பும், இந்தக் கீழடி அகழ்வாய்வினை விரிவுபடுத்துவதன்மூலமாக, தொடர்வதன் மூலமாக ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.

கற்பனையான சரசுவதி நதி இருக்கிறதா, இல்லையா என்று  தெரியாது - அதற்காக கோடிக்கணக்கான ரூபாயினை வடபுலத்தில் அவர்கள் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் அதனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

கற்பனையான, நடவாத ஒன்றுக்கெல்லாம் நிதிகளை ஒதுக்குகிறார்கள்!

அதுபோலவே, அயோத்தியில் இராமாயணக் கண்காட்சிக்காக 150 கோடி ரூபாயினை ஒதுக்கியிருக்கிறார்கள். கற்பனையான, நடவாத ஒன்றுக்கெல்லாம் இவ்வளவு பணத்தினை ஒதுக்கிக் கொண்டிருப்பவர்கள், இந்த ஆய்வுக்காக ஒரு சொற்ப நிதியைக் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழக அரசிற்கு எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால், இந்த அகழ்வாராய்ச்சிக்குப் போதிய நிதியை  இப்பொழுது அவர்கள் ஒதுக்கியாகவேண்டும். அதுமட்டுமல்ல, அந்த ஆய்வு தொடரப்படவேண்டும்; தொடர்வதற்கு, மத்திய அரசும், அதனுடைய பங்களிப்பினை உடனடியாகத் தரவேண்டும்.

இந்தப் போராட்டம் இதோடு நிற்காது; மக்களுடைய உணர்வுகள் - இதில் கட்சியில்லை. எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் எழுதியிருக்கிறார்; ஆளுங்கட்சியும் இதனை வலியுறுத்தவேண்டும். வருகின்ற 23 ஆம் தேதியன்று தொடங்கும் சட்டமன்றத்தில், இதற்கென்று விவாதங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்பு உண்டு.

சிந்துவெளி நாகரிகத்திற்குச் சமமாக  - ஒரு கீழடி  நாகரிகம் - தமிழர்கள் திராவிடர் நாகரிகம் இங்கே இருக்கிறது என்று தெளிவாக சொல்லவேண்டிய கால கட்டம் இது.

அரசமைப்பு அடிப்படை உரிமை காப்பாற்றப்படவேண்டும்

எனவேதான், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது முதலில் ஒரு அடையாளமாகத் தொடங்கினாலும்கூட, ஏற்கெனவே, இதனை எதிர்க்கக்கூடியவர்கள் யாருமில்லை. தமிழகத்து மக்களின் உணர்வுகள் ஒன்றுதான் என்பது மிகமிக முக்கியம். அதுமட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே மிகத் தெளிவாக பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு நாகரிகங்களைப் பாதுகாக்கவேண்டியது அடிப்படை கடமைகள் மட்டுமல்ல; அடிப்படை உரிமை என்பதையும் தெளிவாக்கியிருக்கிறார்கள்.

எனவேதான், அந்த அடிப்படை உரிமை காப்பாற்றப்படவேண்டும் என்பதற்கு திராவிடர் கழகம் இந்தப் பணியினை இன்றைக்குத் தொடங்கியிருக்கிறது. இதில் வெற்றி பெறுகின்ற வரையில், கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மாநில அரசு அதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். மத்திய அரசுக்கு அதனை வலியுறுத்தி எழுதுவதோடு, ஏற்கெனவே அதற்காக ஒதுக்கிய நிதியைவிட, பல மடங்கு அதிகமாக அதற்காக நிதியை ஒதுக்கவேண்டும்.

தமிழக அரசு நிலத்தை ஒதுக்கியதுபோலவே - அதிக நிதியையும் ஒதுக்கவேண்டும்

ஏற்கெனவே தமிழக அரசு, பாராட்டத்தகுந்த ஒன்றை செய்திருக்கிறார்கள். நிலத்தை ஒதுக்கவேண்டும் என்று கேட்டபொழுது, முதலில் தயங்கியவர்கள், பிறகு நாம் வற்புறுத்தியவுடன், நிலத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். நிலத்தை ஒதுக்கியது நல்லது. ஆனால்,  நிலத்தை ஒதுக்கிவிட்டு, நிதியை ஒதுக்கவில்லையானால், அது பயன்படாது. ஆகவேதான், நிலத்தை ஒதுக்கியதுபோலவே, நிதியையும் ஒதுக்கவேண்டும். அதற்காக மத்திய அரசினை வற்புறுத்தவேண்டும். இந்த அகழாய்வு நிறுத்தப்படக் கூடாது, தொடரவேண்டும். இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை. ஒன்றுபட்டு நிற்கிறோம்.

இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகள் உடனடியாக ஏற்கப்படாவிட்டால், இது விரிவுபடுத்தப்பட்ட போராட்டமாக, தமிழ்நாடு முழுக்க தொடர் போராட்டமாக நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்படும். அந்த நிர்ப்பந்தத்தை மத்திய அரசு கொடுக்கக்கூடாது.

கீழடி அகழ்வாய்வில் இன்னொரு பாடத்தைக் கற்றுக்கொள்ளும் மத்திய அரசு

எப்படி பொங்கல் விடுமுறையில், அவர்கள் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டார்களோ, அதுபோல, கீழடியும் இன்னொரு பாடம் என்று அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய காலம் இப்பொழுது வந்துவிட்டது.

ஆகவேதான், மிக நெருக்கமாக                வந்திருக்கக்கூடிய அவர்களுக்கு, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக, மத்திய அரசு இந்த உணர்வினைப் புரிந்துகொள்ளவேண்டும். இதனை அலட்சியப்படுத்தக்கூடாது என்பதை எடுத்துச் சொல்கிறோம்.

இதற்காகத்தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner