எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்'' - திராவிடர் பண்பாடு

‘‘விவசாயம் பாவத் தொழில்'' - இது ஆரியர் பண்பாடு

விழுவோர் மறுபடியும் எழுவார்!

அனைவருக்கும் அன்பார்ந்த பொங்கல் வாழ்த்து!

தமிழர் தலைவர்  விடுக்கும் பொங்கல் செய்தி

தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தும் கீழடியில் தொல்பொருள் ஆய்வை நிறுத்துவதா?

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்  என்பது திராவிடர் பண்பாடு; ‘விவசாயம் பாவத் தொழில்' என்பது ஆரியர் பண்பாடு - தமிழர் இல்லமெல்லாம் சோகப் பொங்கல் ஒழிந்து இன்பப் பொங்கல் பொங்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள பொங்கல் செய்தி வருமாறு:

நம் நாட்டு விழாக்களில், பண்பாட்டுப் பரப்புதலையும், பாதுகாப்பும் உள்ள ஓர் இயற்கையையொட்டி, ஜாதி, மத பேதங்கள் கடந்த பெருவிழா - திருவிழா - பொங்கல் என்ற ஆண்டுதோறும் உழவரும், உறுபயன் அடைவோரும் கொண்டாடும் திராவிடர் திருவிழாவாகும்!

எல்லாவற்றிலும் ஓர் பண்பாட்டு அடிப்படை உள்ளதால், அதையொட்டிய விருப்பும் - வெறுப்பும் அடிநீரோட்டமாக அமைந்துள்ளதை தந்தை பெரியாரின் இனமானக் கண் ணோட்டத்தோடும், பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடும் ஆராய்ந்தால்தான் எவருக்கும் விளங்கும்!

ஆரியப் பார்ப்பனர்கள், தீபாவளி போன்ற பண்டிகைகளை தங்களது புராணக் கற்பிதங்களுக்கு ஏற்ப இன்றும் பெரிய விளம்பர வெளிச்சத்தினால் பாய்ச்சிக் கொண்டாடுகின்றனர்; ஆனால், அதே அளவுக்கு அவர்கள் பொங்கல் விழாக் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனரா என்றால், ‘இல்லை’ என்பதே சரியான விடையாகும்!

இதற்குக் காரணம் வெளிப்படை! பொங்கல் - ‘உழவர் திருநாள்’ என்பது உழவுக்கு முன்னுரிமை கொடுத்து வேளாண் பெருமக்களை உயர்த்தி, உழைப்போரை உயர்த்திடும் திராவிடர் பண்பாட்டுத் திருவிழா!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பது திராவிடர் பண்பாடு.

ஆரியப் பண்பாட்டுப்படி,

உழவு - விவசாயம் எப்படிப்பட்டது?

இதோ அவர்களது ஆரியச் சட்ட நூலான ‘மனுதர்மம்‘ ஆதாரம்:

மனு 10ஆவது அத்தியாயம்

84 ஆவது சுலோகம்

‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள்; அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெ னில், இரும்பை முகத்திலுடைய கலப்பையும், மண்வெட்டியும் பூமியையும், பூமியிலுள்ள பற்பல ஜந்துக்களையும் வெட்டுகிறது அல்லவா?’’

- பாவகரமான தொழிலாம் அது! (ஆனால், பச்சரிசியும், தலைவாழை இலையும் இந்த ‘பாவகரமான’ தொழில் இல் லாமல் எப்படி அவர்களுக்குக் கிடைக்கும் என்று யாரும் கேள்வி கேட்டுவிடாதீர்கள்!)

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நம் நாட்டில் எந்த ஆட்சி யிலும் உழவர்கள் நிலை உயராமல், உழவர்கள் தற்கொலை, வாழ்வாதாரமில்லாமல் வாடிய பயிர்களாக மட்டுமில்லாமல், உடம்பை விட்டு ஓடிய உயிர்களாகிவிட்ட பரிதாப நிலைக்கு இன்றும் ஆளாகி வருவதற்கு மூலகாரணம் - ‘மனுமுறை தவறாத ஆட்சியாளர்கள்’ உழவனை உச்சத்தில் வைத்துப் பார்க்கவே இல்லாததினால்தான்!

1949 ‘குடிஅரசு’ வார ஏட்டில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தில் - பொங்கல் பற்றிய ஒரு பகுதி இதோ:

‘‘உழவை, உழவுத் தொழில் செய்பவனைப் போற்றும் இந் நாள் உண்மையில் பாவனையாய்ச் சடங்காகப் பரம்பரைப் பழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறதே தவிர, மேலும் இந்தச் செய்நன்றி நாளுக்கு மிகமிக ஆபாசமான கதைகள் வேறு பின் நாள்களில் கற்பிக்கப்பட்டு இருக்கின்றனவே தவிர வேறு என்ன?

இன்று யார் யார் உழவுத் தொழிலைச் செய்கின்றார்களோ, சேற்றிலும், பனியிலும் கிடந்து சீரழிகின்றார்களோ, அவர் களுக்கு நிலத்திலே உரிமையில்லை. ஒரு சிலருக்கு ஏதோ ஓரளவுக்கு உண்டு என்றாலும், அது இறங்குமுகமாக, நாளுக்கு நாள் கரைந்து கொண்டுதான் வருகிறது’’ ஏன் இந்த நிலை? என்று கேட்கிறார் தந்தை பெரியார்!

ஏமாந்தவர்களும், ஏமாற்றியவர்களும் நிலவுடைமைக்கார ராயினர். நமது சோழ, சேர, பாண்டிய, பல்லவ ‘முட்டாள் அரசர்கள்’ பலரும் வரி கட்டத் தேவையில்லை என்று ஆரியப் பார்ப்பனர்களுக்கு, வேதபுரங்களை அன்பளிப்பாக - பரிகாரங்களாகக் கொடுத்தார்கள். சதுர்வேதி மங்கலங்கள் - (நாலு வேதம் சொன்னவர்கள்) வேதங்களை முழுமையாகப் படிக்காதவர்களுக்குக்கூட ‘கிராமங்கள்’ என்பவை பார்ப்பன ருக்குத் தாரை வார்க்கப்பட்டன!

இவைகளைத் துணிச்சலுடன் திரும்பி எடுத்து சமதர்ம சமுதாயம் அமைக்க எந்த அரசுக்கும் முதுகெலும்பில்லையே!

நீதிக்கட்சி காலத்தில் - வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் - தாழ்த்தப்பட்ட உழைக்கும் தோழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட ‘பஞ்சமி’ நிலங்கள்கூட மீட்கப்பட முடியாத நிலை அல்லவா உள்ளது!

எனவே, இதனை எண்ணினால் மகிழ்ச்சியா பொங்குகிறது? இல்லை, இல்லை. என்றாலும், துயரத்தையும், துன்பத்தையும் துச்சமென மதித்து விரட்டும் துணிவினை இதுபோன்ற பொங்கல் விழாக்கள் தந்தாகவேண்டும் என்பதற்குக் கொண் டாட்டம் (ஓரளவு) தேவையே!

நம் புரட்சிக்கவிஞர் அன்று எழுதியது அய்யாவின் அடியொற்றியதால் இன்றும் பொருந்துகிறதே!

‘‘ஏர்தட்டா துழுதுழுது பயன்விளைக்கும் உழவர்

எழில்நாட்டின் முகத்தினிலே அழகில்லை, நாட்டை

ஓர்தட்டாய்த் தட்டிப்போய்த் தாம்வாழ எண்ணும்

ஆளவந்தார் செய்கையினால் உற்றதிந்தத் தொல்லை

போர் தட்டும் முரசொலிக்கத் தமிழ்நாட்டில் இந்நாள்

பொதுத்தொண்டு வெல்கவே வெல்கவே என்று

மார்தட்டி வந்தாய்நீ தைப்பொங்கல் நாளே

வறுமையறத் துன்பமற மகிழ்ச்சிகொண்டு வாவா!’’

அதுமட்டுமா?

‘‘மனுவின் மொழி அறமானதொரு நாள்

அதை மாற்றியமைக்கும் நாளே தமிழர் திருநாள்!’’

என்று சூளுரைத்து, சொரணையோடு

சொந்த விழாவை - சோகம் கப்பினாலும்

சோர் வடையாது கொண்டாடுவோமே!

பொங்கலோ - பொங்கல்!

விழுவோர் நிச்சயம் எழுவார்!

இது வரலாறு - மறவாதீர்!

அனைவருக்கும் பொங்கலோ, பொங்கல்!

கி.வீரமணி    
தலைவர்,   திராவிடர் கழகம்.


சென்னை
13.1.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner