எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- கவிஞர் கலி.பூங்குன்றன்

ஓ, தமிழா

திராவிடத் தமிழா!

உன் பெயர் என்ன

அது தமிழா?

உன் ஊர்ப்பெயர் என்ன?

அது தமிழா?

உன் கோவில் பெயர் என்ன?

அது தமிழா?

உன் கோவிலுக்குள் மொழி எது?

அது தமிழா?

கோவில் கருவறைக்குள் யார்?

அவன் தமிழனா?

உன் ‘சுப முகூர்த்தத்தில்’

தமிழ் உண்டா?

உன் ‘கிரகப் பிரவேசத்தில்’

தமிழ் உண்டா?

உன் ‘உத்திரகிரியையில்’

தமிழ் உண்டா?

உன் வீட்டு ‘விசேஷத்தில்’

தமிழ் உண்டா?

நீ கொண்டாடும் பண்டிகை எது?

தமிழர்க்குரியதா?

எங்கே ஒழிந்தது

ஒளிந்தது

நம் தமிழ் -

நம் பண்பாடு?

சிந்து சமவெளி

சிறைக்குள்ளா?

கீழடி

சிறகுக்குள்ளா?

ஆதிச்சநல்லூர் - அடி

வயிற்றுக்குள்ளா?

கொற்கைக் கடலின்

குடலுக்குள்ளா?

கொடுமணம் மண்ணின்

குகைக்குள்ளா?

அழகர்குளம்

அனலுக்குள்ளா?

மீண்டும் வருது

சமஸ்கிருதம்!

மீசை முறுக்குது

மனுதர்மம்!

தேசியக் கல்வி

தீ வட்டி

குலக்கல்வியின்

சூட்சம சுவரொட்டி!

ஆரியக் கலாச்சார

மோகினி

அதன் பின்னால்

அரசியல் கூட்டணி!

ஏமாந்துவிடாதே

எம் தமிழா!

எச்சரிக்கின்றோம்,

எச்சரிக்கின்றோம்!

ஏடா தமிழா

எழுந்து நில்!

மூடா இமையோடு

முழு வாழ்வின்

வெளிச்ச மூலிகையை

காடாய்க் கிடந்த - நம்

மூளையின் இருட்டுக்குள்

மூச்சடக்கி மூச்சடக்கி

செலுத்திய மருத்துவர் - மூலக்

கிருமியை அழித்தவர்

முழு மதியாய்த் தமிழர்க்குக்

கிடைத்தவர் பெரியார்!

கரை சேர்க்க வந்த

கலங்கரை விளக்கு

திராவிடப் பண்பாட்டை

மீட்க வந்த கிழக்கு!

சுயமரியாதை தந்த

பெரியாரின்

சூரிய ஆயுதத்தால்

சுட்டெரிப்போம் - பகை

சூலறுப்போம்!

வீரமணி துணையுண்டு

வீங்கு தோள் புடைப்போம்!

பொங்கட்டும் - திராவிடர்ப்

புரட்சிப் பொங்கல்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner