எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எம்.ஜி.ஆர். காண விரும்பிய  சமத்துவ - சமூகநீதி  சமுதாயத்தினைப் படைத்திட  அவர் நூற்றாண்டில் சூளுரைப்போம்!

மறைந்தும் மறையாமல் மக்கள் உள்ளத்தில் நிறைந்து, தொண்டர்கள் குருதியில் உறைந்து வாழுபவர் வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வில் அவர் காண விரும்பிய சமத்துவ - சமூகநீதி சமுதாயத்தினைப் படைத்திட  சூளுரைப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவரும், ஒப்பற்ற கொடை வள்ளலுமான எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நூறாவது ஆண்டு பிறந்த நாள் விழா இன்று (17.1.2017).

‘‘அய்யாவின் லட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் மாறாக ஒருபோதும் கட்சியைக் கொண்டு செல்லமாட்டேன்!’’

திராவிட இயக்கத்தில் ஓர் பிளவு, பிரிவு ஏற்படுகிறதே, அதனால் திராவிட இயக்கம் பலவீனப்பட்டு, நம் இன எதிரிகளின் கை ஓங்கி, திரும்பிய அரசியல் வரலாறு மீண்டும் பழைய ஆதிக்கவாதிகளிடமோ மற்ற தேசியப் போர்வையில் ஒரு வகையான வல்லாண்மைக்கு வழி வகுத்து விடுமோ என்று அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கவலையும், அக்கறையும் கொண்டபோது,

‘நான் தனிக்கட்சி தொடங்கினாலும், அய்யாவின் முக்கிய லட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் மாறாக ஒருபோதும் கட்சியைக் கொண்டு செல்லமாட்டேன்’ என்று நம்மிடம் கூறி, அய்யாவிடம் சொல்லச் சொன்ன வர் நூற்றாண்டு விழா நாயகர் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்கள்.

அதற்கேற்ப தந்தை பெரியாரும், அன்னை மணியம் மையாரும் மறைந்த பிறகு, தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் ஓர் ஆண்டு முழுவதும் கொண்டாடும்படிச் செய்து, அதில் திராவிடர் கழகம் கொடுத்த பல ஆலோசனைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி, தந்தை பெரியார் விழாவை, ஆக்கபூர்வ சாதனைச் சரித்திரமாகப் படைத்தார்!

தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசின் ஆணையாகக் கொண்டு வந்தவர்

செம்மொழித் தமிழ் உலகில் எங்கும் பரவவேண் டுமானால்  அதில் அதிக எண்ணிக்கை உடைய எழுத்துகளைக் குறைக்கவேண்டும் என்று, எந்த தமிழ் அறிஞரும் கூறாத பயனுறு சுதந்திரச் சிந்தனை தந்தை பெரியாரிடம் உதித்தது. (அறிவிப்பு 1934

டிசம்பர் 30 - ‘பகுத்தறிவு’ இதழில்; செயல்படுத்தியது 13.1.1935 ‘குடிஅரசு’ இதழில்) எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசின் ஆணையாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறப்பித்தார். (ஆணை எண்: 449 நாள்: 19.10.1978). அதுமட்டுமா?

மாவட்டந்தோறும் தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகர சிந்தனைகளைக் கல்வெட்டுகளாக ஆக்கி காலத்தை வென்ற கருத்தொளிகளாக அவைகளை ஆக்கிய பெருமைக்குரியவர்!

அரசியல் காழ்ப்புணர்வு காட்டாத  பெரு உள்ளத்திற்குச் சொந்தக்காரர்!

பெரியார் நூற்றாண்டினையொட்டி கல்வி நிறு வனங்களை, பெரியார் அறக்கட்டளைகள் தொடங்க முயற்சித்தபோது, அவருக்கு மாறுபட்டு திராவிடர் கழகம் சில பல நிலைப்பாடுகளை எடுத்ததைப் பொருட்படுத்தாது - எவ்வித அரசியல் காழ்ப்புணர்வும் காட்டாது அனுமதி தந்து, ஊக்கப்படுத்திய பெரு உள்ளத்திற்குச் சொந்தக்காரர்  - இப்படி எத்தனையோ கூறலாம்.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக அவரது பங்களிப்பு, விடுதலைப் புலிகளுக்கு அவர் தந்த பேராதரவு வரலாற்றில் என்றென்றும் மாறாத வரலாற்றுக் கல்வெட்டுகளாக நிலைத்திருக்கும்!

அண்ணா வழியில்
அயராது பாடுபட்டவர்

அவர் மக்களை ஈர்த்த ஒரு நடிகர்; கலைஞர் என்பதைத் தாண்டி, பசியையும், வறுமையையும் அனுபவித்த ஒரு மனிதர் என்பதால், தனது ஆட்சியை, பசிப் பிணி போக்கி, வறுமையின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காக்க அண்ணா வழியில் அயராது பாடுபட்டவர் - ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி புரிந்தபோதும்!
அவர் வறுமையை உணர்ந்து வதிந்ததால், பிற்காலத்தில் அவர் பெற்ற வளமையை பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுச்சொத்தாகவே ஆக்கியவர்!
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் திராவிட மதம் என்றே கூறியவர்!

சமூகநீதி சரித்திரத்தில்
அரிய சரித்திர சாதனை படைத்தவர்

எல்லாவற்றிற்கும் மகுடமாக, சமூகநீதி சரித்திரத்தில் அவர் ஒரு அரிய சரித்திர சாதனை செய்தார்.

9000 ரூபாய் வருமான வரம்பு பிற்படுத்தப் பட்டவர்களுக்குக் கொண்டு வந்த நிலையில், திராவிடர் கழகம் - தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜனதா  போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்துப் போராடிய பின், உண்மையை உணர்ந்த அவர், தனது தவறை உணர்ந்து, திருத்திக் கொண்டதோடு, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி, தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவிகிதம் வர அடித்தளமிட்டவர். (இதில் ஒரு சதவிகிதம் மலைவாழ் மக்களுக்குக் கலைஞர் ஆட்சியில் அளிக் கப்பட்டது).

தந்தை பெரியாரின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலையில், அதனை செயல்படுத்த ஆயத்த மாக்கிக் கொண்டு உறுதி கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

புது யுகம் படைக்க  சூளுரைப்போம்!

இதுபோன்று  அவர் புரிந்த சாதனைகளை ஏராளம்  பட்டியலிடலாம்!

மறைந்தும் மறையாமல் மக்கள் உள்ளத்தில் நிறைந்து, தொண்டர்கள் குருதியில் உறைந்து வாழும் அவர்தம் நூற்றாண்டு விழாவில் அவர் காண விரும்பிய சமத்துவ சமுதாயம் பூத்துக் குலுங்க புது யுகம் படைக்க சூளுரைப்போம்!சென்னை                                                  தலைவர்,
17.1.2017                                              திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner