எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் பண்பாட்டினை மீட்க மாணவர்களின் தன்னெழுச்சி அறப்போர் வரவேற்கத்தக்கது

பழைய அரசு என்ன செய்தது என்று

பி.ஜே.பி. கூறுவது திசை திருப்பும் வேலை

சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவருவதுதான் முக்கியம்

தமிழக அரசு சட்டப்பேரவையில் வெறும் ஜல்லிக்கட்டுக்கு மாத்திரமின்றி தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் உரிமைப் பிரச்சினைகளும் இடம்பெறட்டும்!

டில்லி சென்று பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர் வெற்றியுடன் திரும்பட்டும்!

மத்திய அரசின் அரசியல் தூண்டில் சூழ்ச்சியிலும் கவனம் இருக்கட்டும்!

தமிழர் தலைவர்  விடுத்துள்ள துல்லியமான அறிக்கை

தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தும் கீழடியில் தொல்பொருள் ஆய்வை நிறுத்துவதா?

ஜல்லிக்கட்டினை நடத்திட தமிழக மாணவர்கள் தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்பி நடத்திவரும் போராட்டத்தின் உணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு மத்திய - மாநில அரசுகள் செயல்படவேண்டும்; தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிப்பு என்ற கொந்தளிப்பும் இந்தப் போராட்டத்தின் அடித்தளத்தில் உள்ளது என்பதையும் புரிந்துகொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு அரசு கொண்டு வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் மாட்டுப் பொங்கல் திருநாளையொட்டி, பழைய ஏறுதழுவுதல் என்பது ஜல்லிக்கட்டாக தமிழ் நாட்டு முக்கிய சிற்றூர் பேரூர்களில் காலங்காலமாக நடைபெறுவதை, மிருகவதை என்று தவறாக விளங்கிக் கொண்டது - மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் சரியாக விளக்காமை, பீட்டா (Peta) என்ற மிருக நலப் பாதுகாப்பு அமைப்பு, திருமதி மேனகா காந்தி போன்றவர்களின் அழுத்தம் போன்றவைகளால், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறி தடை விதித்துவிட்டது!

பழைய கதைகள் வேண்டாம்!

அரசியல் கட்சிகளின் வழமைபோல், ‘இது சென்ற காங்கிரஸ் - தி.மு.க. ஆட்சியின் அலட்சியத்தால்தான் ஏற்பட்டது; அதற்கு அவர்கள்தான் மூல காரணம், என்று பழியைப் போட்டு, தற்போதுள்ள மத்திய ஆட்சியிலுள்ள பா.ஜ.க.வினர் கூறித் தப்பிக்கப் பார்க்கின்றனர்.

விவாதத்திற்குரிய இக்குற்றச்சாட்டினை திரும்பத் திரும்ப கீறல் விழுந்த கிராமஃபோன் தட்டுபோல் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தால், இதன்மூலம் இப்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எந்த அனுதாபமும், ஆதரவும் கிடைத்துவிடாது.

முந்தைய ஆட்சி (காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி  அரசு) இதை செய்யவில்லை என்றுதானே, உங்களின் பொய்யான வாக்குறுதிகளை மனமார நம்பி உங்களைப் பதவியில் அமர்த்தினார்கள்; பின் ஏன் இந்த எடுபடாத அந்த திசை திருப்பும் வேலையில் ஈடுபடவேண்டும்?

மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டம்!

அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளையெல்லாம் தாண்டி, மாணவத் தோழர்கள் தன்னெழுச்சியாக வரலாறு காணாத வகையில் கடந்த சில நாள்களாக மாநிலமெங்கும் திரண்டு, அறப்போரை நடத்தி வருகிறார்கள். நமது தமிழர்களின் - திராவிடர்களின் பண்பாட்டின் அடை யாளமாக - இளைஞர்களின் வீரத்தினை ஊக்குவிக்கும் ஜல்லிக்கட்டினை நடத்திடவேண்டும் என்பது உள்பட  தமிழரின் உரிமைகள் அனைத்தும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.

மத்திய அரசின் சார்பாக இங்குள்ள அக்கட்சி அமைச்சர் கடந்த மூன்று ஆண்டுகளாக,  ‘‘பொங்கல் திருநாளில்  ஜல்லிக்கட்டு நடக்கும்‘’ என்ற வாக்குறுதியைத் தொடர்ந்து தந்து வந்தார்; வருகிறார். அதுபோல, தமிழகத்தில் ஆளுங்கட்சியும், அதன்  முதலமைச்சரும் உறுதி கூறினர்.

இது இப்போது மிகப்பெரும் ஏமாற்றத்தினை உருவாக்கியதால், தமிழ்நாட்டு மாணவர்கள் அணி அணியாகத் திரண்டு அறப்போர் நடத்துகிறார்கள். எந்தவித வன்முறை, பொதுச்சொத்து நாசமும் இன்றி - தேவையற்ற கலவரங்களுக்கு இடம் தராமல், தங்களது உணர்வுகளை மத்திய - மாநில அரசுகளுக்கும், ஏன் உச்சநீதிமன்றத்திற்கும்கூட காட்டுகின்றனர்.

அவர்களின் உணர்வுகளும், ஒற்றுமையும் பேருரு (‘‘விஸ்வரூபம்‘‘) எடுத்துள்ளது பாராட்டத்தக்கது. அதை நாம் வரவேற்கிறோம்.

மாணவர்களின் இந்த எழுச்சி மிகுந்த போராட்டத்தினை, உணர்வுகளை, அடிநீரோட்டத்தினை மத்திய அரசு தெளிவாகப் புரிந்துகொண்டு இனி செயல்படவேண்டும்.

வெறும் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல!

வெறும்ஜல்லிக்கட்டுக்காகமட்டும்இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு வெடித்துக் கிளம்பிவிட வில்லை. இதனுள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கடமை தவறியதோடு, வறட்சி நிவாரணம் உரிய வகையில் அளிக்காத மத்திய அரசு, தமிழ்நாட்டின்மீது சமூகநீதிக்கு எதிராக ஏழை - எளிய கிராமப்புற - முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவம் போன்ற தொழிற்படிப்பைப் படிக்க முடியாது தடுக்கும் ‘‘நீட்’’ (NEET) என்ற நுழைவுத் தேர்வுத் திணிப்பு, மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கை, அண்டை மாநிலங்கள் தத்தம் நதிகளில் தமிழ் நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் கொடுமை, சமஸ்கிருதத் திணிப்பு - நமது பண்பாட்டின் வேர்களில் வெந்நீர் ஊற்றி அழிக்க முயலும் பல்வேறு நடவடிக்கைகளாலும் தமிழக மாணவப் பட்டாளத்தின் மனதுள் கொதித்த எரிமலை வீச்சுதான் இது என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும்.

மாநில அரசும் இந்த எழுச்சியினைத் தக்கதோர் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, தாமதமின்றி செயல்படவேண்டும்.

வெறும் ஒருமைப்பாட்டுக் கூப்பாடு உள்ள உணர்வு களை உருவாக்காது; மத்திய அரசின் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். திட்டங்களின் தாக்கம் இளைய தலைமுறைகளைக்கூட எதிர்கொள்ளும் மனநிலையை உருவாக்கிடும்.

அடிப்படையில் இது பெரியார் மண் - சமூகநீதி - இன உணர்வு - மொழி உணர்வு - பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்ப்பது தமிழ்நாட்டு மண்ணின் மனோபாவம்!

சட்டப்பேரவைத் தீர்மானத்தில் இடம்பெற வேண்டியவை!

தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து,  ஜல்லிக்கட்டு நடைபெற அவசரச் சட்டம் - தீர்வு காண பிரதமரைச் சந்திக்க இன்று (19.1.2017) செல்லும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது முயற்சி வரவேற்கத்தக்கது!

அவர் வெற்றியுடன் திரும்பவேண்டும்; இன்றேல் என்ன என்ற அடுத்த கட்டத் திட்டத்தையும் தமிழக அரசு விழிப்புடன் தயாரித்து வைக்கவேண்டும்.

மாணவர்களின் உணர்வுகள்தான் தங்களுடைய உணர்வுகள் என்று அமைச்சர்களும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும் கூறியுள்ளது ஒரு நல்ல அணுகு முறை. இது விரிவுப்படல் வேண்டும்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும்போது, வெறும் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உறுதியாய் எதிர்ப்போம் என்று சட்டமன்றத்தில் வாக்குறுதி அளித்த, நுழைவுத் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் பழைய குலக்கல்வித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்பது, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல், சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு - இவை போன்றவைகளை உள்ளடக்கியதாக இருப்பது முக்கியம்.

1. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக - ஆளுங்கட்சிக்கு ஒத்துழைப்புத் தரும் தி.மு.க.வின் ஆதரவினை இணைத் தும், ஒற்றுமை  உணர்வுடன் தமிழ்நாடு உள்ளது எனக் காட்டவேண்டும்.

தேவை அனைத்துக் கட்சிக் கூட்டம்

2. அனைத்துக் கட்சி கூட்டத்தினையும் கூட்டி, சட்டமன்றத்திற்கு வெளியே உள்ள கட்சிகள், முக்கிய சமூக அமைப்புகளையும் அழைத்து, அவர்களின் கருத்தறிந்து, தமிழ்நாட்டின் ஆதரவு நிலையை டில்லிக்கு உணர்த்த தவறிவிடக்கூடாது!

இதில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆளுங்கட்சிகளின் அணுகுமுறையைப் பார்க்கவேண் டாமா?

இதன்மூலம் அரசியல் அணுகுமுறையினை இப்போது மாண்பமை ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் உள்ள ஆட்சி உருவாக்கட்டும்!

‘நான்’ ‘எனது’  இனி வேண்டாம் - ‘நாம்‘ ‘நமது’ என்ற மாற்றம் தேவை!

இனி, ‘‘நான் - எனது’’ என்பதைத் தவிர்த்து, ‘‘நாம் - நமது’’ என்பதே தமிழக அரசின் அணுகுமுறையாக அமைதல் வேண்டும்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்ற வெகுமக்கள் - மாணவர்கள் போராட்டங்களை வெறும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகளாகப் பார்க்கக் கூடாது; மாறாக, மக்களின் உணர்வுகள் என்பதைப் புரிந்து, பொறியாகக் கிளம்பும்போது அதனை அணைத்துவிடாது - தீர்வு காண - முன்வருதல் வேண்டும், தமிழக அரசு.

பி.ஜே.பி.யின் அரசியல் தூண்டில்!

சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை என்று கூறிப் ‘பூதாகரமாக்கித்’ தூண்டில் போட்டுப் பிடிக்க வடக்கே இருந்துவரும் திட்டமிட்ட சூழ்ச்சி வியூகங்களைப் புரிந்து,  அதனைத் தோற்கடிக்க வேண்டியது அவசரம் - அவசியமுமாகும்.

 

கி.வீரமணி
தலைவர்,     திராவிடர் கழகம்.

சென்னை

19.1.2017

---------------

கழகத் தலைவரின் கருத்து

பிரதமரை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (19.1.2017) காலை சந்தித்த நிலையில், பிரதமர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:

பந்து இப்போது முழுவதும் மத்திய அரசிடம் - பிரதமர் மோடியிடமே உள்ளது.

இனி ஜல்லிக்கட்டு நடப்பதற்கும், நடக்காததற்கும் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டியது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுதான்.

இரட்டை வேடம் நீண்ட காலம் செல்லாது!

தமிழ்நாட்டு முதல்வர் ‘நல்லதே நடக்கும்‘  பொருத் தருள்க என்று அருள்வாக்குபோல் கூறுகிறார்!

இனிமேல் தமிழ்நாடும், கருநாடகத்தைப் பின்பற்ற வேண்டும் (உச்சநீதிமன்ற தீர்ப்பைப் புறக்கணிப்பது)  என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதோ என்றே கேட்கத் தோன்றுகிறது!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner