எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய அரசமைப்புச் சட்டம் 29(1) இன்படி ஜல்லிக்கட்டு நடத்திட தமிழர்களுக்கு உரிமை உண்டு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை..........

மாணவர்களின் தன்னெழுச்சி அறப்போர் வரவேற்கத்தக்கது - கி.வீரமணி

1. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்துள்ளது என்று ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்து, அதையே மத்திய, மாநில அரசுகள் கண்டு அச்சத்துடன் செயல்படும் நிலை சட்டப்படி சரியானதல்ல.

2. 2011 ஆம் ஆண்டு சட்டம் தமிழக சட்டம் செல்லாது என்றுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூறியதே தவிர, ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்துத் தெளிவாக, திட்டவட்டமான தீர்ப்பு அதுஅல்ல.

அதுபற்றிய புரிதல்தான் இந்நிலை.

3. இதுஒரு புறமிருக்க, தமிழ்நாடு அரசு இதனை நடத்த ஒரு அவசரச் சட்டம் கொண்டு வருவது கூட, நமது அடிப்படைஉரிமை (Fundamental Rights) யின் இந்திய அரசியல் சட்டம் 29(1) பிரிவின்படி நாம் தமிழர்கள் - நமது கலாச்சார உரிமையைப் பயன்படுத்துவதை எவரும் பறிக்க முடியாது. இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் உள்ள 29(1) பிரிவு கூறுவதாவது:

Any section of the citizens residing in the territory of India or any part thereof having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same.

இந்தியாவின் எல்லைக்குள் வாழும் அல்லது எந்த பகுதியில் வாழும் ஒரு பிரிவு மக்கள் - அவர்களுக்கென உரிமையான தனித்தமொழி எழுத்து, கலாச்சாரம் உடையோர், அவற்றினைப் பாதுகாக்கும் அடிப்படை உரிமைஉடையவர்கள் ஆவார்கள் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம்.

இதன்படி மொழி, எழுத்து, கலாச்சாரம் ஆகியவைகளைப் பாதுகாக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனின் பறிக்கப்படமுடியாத ஜீவாதார உரிமையாகும் என்பதே அதன் விளக்கம் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பண்டைய காலந்தொட்டு தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவில் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் என்பது நமது பண்பாட்டுத் திருவிழாவாகும். அதனுடைய தத்துவம், உழைக்கும் காளைகளுக்கும் ஓய்வு கொடுத்து, உற்சாகப்படுத்தி, புதிய உணர்ச்சியினை அவைகளுக்குத் தருவதற்கே இந்த ஏறுதழுவுதல்- மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என்று பல பெயர்களில் நடக்கும் பல்வேறு ஊர்களில் நடக்கும் விழாக்கள் ஆகும்!

இது மாட்டுப் பொங்கல் என்பதன் உள்ளடக்கம் - தொடர்ச்சியான கலாச்சாரத் திருவிழா! ஆகவே தமிழ்நாடு மாநில அரசு அந்த அடிப்படையில் ஒரு புதிய அவசர சட்டத்தை- இயற்ற வேண்டும். -இதை பண்பாட்டு விழாவாக நடத்திடும் உரிமை, பறிக்கப்பட முடியாத அடிப்படை உரிமை என்பதால் கொண்டாட எவ்விதத் தடையும் இல்லை ஆங்காங்கே வழமைபோல கொண்டாடலாம் இதற்குச் சட்டம் அனுமதிக்கிறது.

இதில் எந்த மிருகவதையும் இல்லை என்பதோடு, அதற்குப் புத்தாக்கம் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் ஒரு சிறந்த விழாதான் என்பதால், தமிழக அரசு இது பண்பாட்டுப் பாதுகாப்பினை அறிவிக்கிறது என்று கூறி உடனே நடத்திட தடை ஏதும் இல்லை என்று பிரகடனம் செய்யலாம்.

இதில் மற்ற சங்கதிகளைப் போட்டு குழப்ப வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

குறிப்பு: 29வது அரசியல் சட்டப் பிரிவு - “ Protection of interests of minorities. “ என்ற தலைப்பில் உள்ளதே, இது சிறுபான்மையினருக்கு மட்டுமே பொருந்தக்கூடியது, பெரும்பான்மையாக உள்ள திராவிடர் - தமிழர்களுக்கு எப்படி பொருந்தும் என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம்.

இதற்கும் விடையே உச்சநீதிமன்றமே 1974ல் அகமதாபாத் செயின்ட் சேவியர் கல்லூரி சொசைட்டி ஸ் குஜராத் அரசு என்ற வழக்கில் அன்றைய தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் ரே (C.J) தந்துள்ளார்.

(AIR 1974 S.C. 1389) 1 Sec 717 (1975), Although Commonly article 29(1) is assumed to relate minorities its scope is not necessarily so confined as it is available to any sections resident is the territory of India this may well include the majority.

இதன்படி பெரும்பான்மையோருக்கும் இந்த மொழி, எழுத்து, கலாச்சார பாதுகாப்பு உரிமை பறிக்கப்பட முடியாத அடிப்படை உரிமையாகும்.

தமிழக அரசின் சட்டத்துறை ஆலோசகர்கள், வல்லுனர்கள் இந்தக் கோணத்தில் பார்த்து செயல்பட்டால், உடனடியாக மாட்டுப் பொங்கலின் பகுதியாக அதனைக் கொண்டாடி மகிழ எந்தத் தடையையும் யாரும் ஏறபடுத்தவே முடியாது!

இதுபற்றி உடனடியாக சரியான வெளிச்சத்தோடு தமிழ்நாடு முதல் அமைச்சரும், அமைச்சரவையும சிந்திக்க, காலந்தாழ்த்தாது செய்ய முன்வர வேண்டும்.

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

சென்னை20.1.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner