எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழையும் மத்திய ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அறிவிக்கவேண்டும்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திடுக!

தமிழ்நாட்டுக்கு வேண்டாம் நுழைவுத் தேர்வு!

தேசிய புதிய கல்விபற்றிய கருத்து

ஆளுநர் அறிக்கையில் இடம்பெறவில்லை

சென்னை, ஜன.23- தமிழ்நாட்டுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு (நீட்) வேண்டாம் என்று ஆளுநர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகவும் முக்கியமான தேசிய புதிய கல்வித் திட்டம் குறித்து எந்தவிதக் கருத்தும் ஆளுநர் அறிக்கையில் இடம் பெறவில்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ் இன்று (23.1.2017) காலை உரை நிகழ்த்தினார்.

அதில் இடம்பெற்ற தகவல்கள் சில வருமாறு:

தமிழ் - ஆட்சி மொழி

தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அறிவிக்கவேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, இந்த அரசு தொடர்ந்து தனது முயற்சிகளைச் செய்து வருகிறது. இந்தக் கோரிக்கையை ஏற்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழ்மொழியையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். மக்களவையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட முன்வடிவில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய, தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1.8.2016 அன்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவையில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் துரிதமாக மேல் நடவடிக்கை எடுக்கவேண்டு மென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் அயராத முயற்சிகளால், முதலில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசால் அறிவிக்கை செய்ய வைத்து, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்ற ஆணையை பெற்று, இந்த அரசு தமிழ்நாட்டிற்குக் கிடைக்கவேண்டிய முறையான உரிமைகளை நிலை நாட்டியுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பினை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்காக, காவிரி மேலாண்மை வாரியத் தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமைக்கவேண்டும் என்று மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.

வேண்டாம் அகில இந்திய நுழைவுத் தேர்வு

2005 ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகள் உள் பட அனைத்துத் தொழில்முறைக் கல்லூரிகளுக்கான சேர்க்கையை முறைப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொழில்முறைக் கல்வி நிலையங்களுக்கான நுழைவுச் சட்டத்தை இயற்றி, தொழில்முறைக் கல்விக்கான தனி நுழைவுத் தேர்வுகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. ஊரக, ஏழை, எளிய, சமூகப் பொருளாதார நிலையில் நலிவடைந்த குடும்பங்களில் இருந்துவரும் மாணவர்களால் நகர்ப்புரங்களில் பயிலும் மாணவர்களோடு பொது நுழைவுத் தேர்வுகளில் போட்டியிட இயலாது என்பதால், அத்தகைய மாணவர்களின் நலனிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவக் கல்விக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதோடு மட்டுமல்லாமல், சிறப்பாகச் செயல்பட்டுவரும் வெளிப்படையான சேர்க்கை முறையைப் பின்பற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பெரும் அநீதி இழைப்பதாகவும் உள்ளது. எனவே, மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறையையே தொடர்ந்து பின்பற்ற இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

ஆதிதிராவிடர் உள்ளிட்டோருக்கு

உயர்கல்விக்கு நிதி உதவி

ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் போன்ற சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரைப் பாதுகாத்து, அவர்களது நலனுக்காக இந்த அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. உயர்கல்விக்கான கல்வி உதவித் தொகைத் திட்டத்தை, தனியார் கல்வி நிறுவனங்களில் பயில்கின்ற ஆதிதிராவிட, பழங்குடியின மாணாக்கர்களுக்கும் விரிவுபடுத் தியது குறித்து இந்த அரசு பெருமிதம் கொள்கிறது.

அன்று எதிர்ப்பு - இன்று ஆதரவு

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) உதய்  (மின்) திட்டம் இவற்றிற்கு மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், அவற்றிற்கு அ.இ.அ.தி.மு.க. அரசு பச்சைக் கொடி காட்டியிருப்பது - ஆளுநர் அறிக்கையிலிருந்து புலனாகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner