எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இது என்ன ஒப்பீடு என்று சிலர்  நினைக்கக்கூடும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்றால், சுதந்திரப் போராட்டவீரர்-இடதுசாரி போக்குள்ளவர், காந்தியாரின் மித வாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்.

வெளிநாடு சென்று படையைத் திரட்டி பிரிட்டீஷ் ஆட்சியை இந்தியாவிலிருந்து வெளியேற்றத் திட்டம் போட்டவர் என்பது போன்றவைதான் எல்லோருக்கும் பரவலாகத் தெரிந்தவை.

அவரின் இன்னொரு பக்கம் எத்தகையது என்பது பெரும்பாலும் தெரியாதுஎன்பதைவிடஅவை வெளிச்சத்துக்குக்கொண்டுவரப் படாதவை என்பதுதான் கலப் படமற்ற உண்மை!

ஒருக்கால் அது வைதீகத்துக்கும், மூடத்தனத்துக்கும் எதிரான முற்போக்குச் சுணை கொண்டது என்பதால் இருட்டடிக்கவும் பட்டி ருக்கலாம்.

ஒடிசாவின் கட்டாக்கில் இந்து வங்காளி குடும்பத்தில் இவருடன் பிறந்தவர்கள் எட்டு பேர் - இவர் ஒன்பதாவதாக பிறந்த வைரமணி (23.1.1897). இவரின் தந்தை பிரபலமான வழக்குரைஞர். ஆச்சாரமும், ஆன்மீகமும் இவர் வீட்டில் சதா வழிந்தோடிக் கொண்டே இருக்கும்.

இரைச்சல் மிகுந்த வீடு என்று தம் நண்பர்களிடம் நேதாஜி கூறுவதுண்டாம்.

அமைதி தேவையா? ராம கிருஷ்ண மடத்திற்குப் போகும்படி வீட்டில் வற்புறுத்தியதுண்டாம். படிப்பிலும் படுசுட்டி. இலண்டன் வரை சென்று அய்.சி.எஸ். தேர்வில் நான்காம் மாணவனாக வெளிவந்தார் (1920).

தந்தைபெரியாரோடு எப்படி ஒப்பிடத்தகுந்தவர் என்ற கேள் விக்கு வரலாம்; தனது 16 ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களுடன் வட இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார். காசி, அரித்துவார், பிருந்தாவனம் எனப் பல இந்து தலங்களுக்கெல்லாம் சென்றார். அந்த இடங்களில் அவர் கண்ட காட்சிகளும், கேவலங்களும் - மதத்தின்மீதும், ஆன்மீகத்தின்மீதும் அவரிடத்தில் பெரும் அதிர்ச்சியையும், வெறுப் பையும் ஏற்படுத்தின.

சந்நியாசிகள் என்று கூறிக் கொண்டு விபச்சாரிகளுடன் கூடிக் குலவியதையும், பணம், சொத்து காரணங்களுக்காக சதா சண்டையிட்டுக் கொள்வதும், ஒருவருக்கொருவர் கொலை செய்து கொள்வதும் போன்ற கொடூரங்களைக் கண்டு ‘சீ... இப்படியும் ஒரு பிழைப்பா? இதற்கு மதம் என்ற முகமூடியமா?’ என்று சிந்திக்க ஆரம்பித்தார். ஜாதி, மத காழ்ப்புணர்ச்சிகளை நேரில் கண்டு தனது ஆன்மீக ஆசைக்கு முழுக்குப் போட்டார்.

(தந்தை பெரியாரும் வட நாடு சென்று நேரில் பார்த்து அறியவில்லையா?

ஜாதிபற்றி அவரின் கருத்து என்ன? அதற்கு ஆதாரம் தந்தை பெரியார் அவர்களின் ‘குடிஅரசு’ இதழிலேயே (26.10.1930, பக்கம் 7) கிடைக்கிறது.

‘‘ஜாதியைஒழிப்பதில்நான் அதிக தீவிர நம்பிக்கை கொண் டவன். அது சம்பந்தமாக நான் என்னனாலான பிரச்சாரமும் செய்து வருகிறேன். சமத்துவம், நியாயம் போன்ற கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டு உண்டாக்கப்படும் புதிய சமூகம், சுதந்திர இந்தியாவுக்குரியதாகும். சிலர் தீண்டாமையை மட்டும் வெறுக்கிறார்களேயொழிய, சமபந்தி போஜனத்தையும், கலப்பு மணத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். (தந்தை பெரி யாரைப் போலவே இந்த இடத்தில் காந்தியாரிடமிருந்து மாறு படுவதைக் கவனிக்கவேண்டும்) அத்தகைய மனோபாவம் கொண் டவனல்ல நான். நாம் எல்லோரும் ஒன்று என்றால், மனிதனுக்கு மனிதன் எவ்வித வேற்றுமையும் இருக்கலாகாது!’’ என்கிறார் நேதாஜி.

தந்தை பெரியார்- நேதாஜி ஒப் பீடு சரியானதுதானே!

- மயிலாடன்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner