எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் பண்பாடான ஏறு தழுவுதலை நடத்திட கொண்டுவரப்பட்ட சட்டம் வரவேற்கத்தக்கதே!

ஒரு நாள் பொறுத்திருந்து காவல்துறை செயல்பட்டிருந்தால் வீண் கலவரங்களும், அசம்பாவிதங்களும் நடந்தேறி இருக்காதே!

தமிழ்நாட்டின் உரிமைகள் - கேட்பாரற்றவை என்ற ஆணவத்திற்கு சரியான பாடம் -

புரிந்துகொள்ளவேண்டியவர்கள் புரிந்துகொள்ளட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள  அறிக்கை

சிறு அசம்பாவிதமும் இல்லாமல் இராணுவக் கட்டுப்பாடாக அறப்போர் நடத்தும் மாணவர்களுக்குப் பாராட்டு - தலைதாழ்ந்த வணக்கம்!

தமிழர்களின் பண்பாடான ஏறு தழுவுதலை அங்கீகரிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு சட்டம்வரவேற்கத்தகுந்தது.காவல்துறைஒருநாள் பொறுமைகாட்டியிருந்தால்வன்முறைகள்ஏற்பட்டிருக்காது; அதேநேரத்தில், தமிழ்நாட்டின் உரிமை களை அலட்சியப்படுத்தி விடலாம் என்று கருதும் ஆணவத்திற்கு மாணவர்கள்,இளைஞர்கள் அறவழிப் போராட்டம், பாடம் கற்பித்துள்ளது;  இதனைப் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று (23.1.2017) சட்டமன்றம் கூடுதல் நேரத்தை எடுத்து, சில நாள் முன்பு கொணர்ந்த ஏறுதழுவுதல் என்ற நம் பண்டைய திராவிடர் கலாச்சார நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க அவசர சட்டம் அறிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற நடவடிக்கைகளால் ஏற்பட்ட தடையை நீக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தையே - சட்டமன்றத்தில் முழு சட்ட வடிவாகக் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

1. பொதுப் பட்டியலில் உள்ளதுதான மிருக நலன் பற்றிய மாநில அரசின் சட்டத் திருத்தத்தை இப்பொழுது கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதை தமிழ்நாடு முன்கூட்டியே யோசித்து, தக்க சட்ட ஆலோசகர்களை வைத்து செயல்பட்டிருந்தால், போராட்டம் வெடிக்க வேண்டிய அவசியமே எழுந்திருக்காது.

தமிழக சட்டமன்றத்தை சில நாள்கள் முன்கூட்டியே கூட கூட்டி நிறைவேற்றி, மக்களின் தெளிவான நம்பிக் கையை தமிழக அரசு பெற்றிருக்கலாமே!

வருமுன்னர் காத்தல் ஓர் அரசுக்கு முக்கிய மல்லவா?

2. அதுபோலவே, உணர்ச்சிபூர்வ இளைஞர் எழுச்சி - ஏறுதழுவுதலுக்கான தடையை உடைக்க, பண்பாட்டைக் காக்க, தன்னெழுச்சியாக ஏற்பட்டு, அது வரலாறு காணாத வெற்றியைத் தந்த நிலையில், அதனைச் சுவைத்து, மேலும் இந்த பலத்தை ஒரு தேக்கிய அணையாக எதிர்காலத்திலும் கொண்டு செல்லவேண்டிய இளைஞர் பட்டாளம் அதில் இறுதியில் முழு வெற்றி அடையவில்லையே என்பது வருத்தமளிக்கிறது.

3. துவக்கத்தில் காணப்பட்ட காவல்துறை - போராட்டக்காரர்களின் நல்லிணக்கம் குலைந்தது ஏன்? சட்டம் நிறைவேற்றப்பட்டு அதை தக்கபடி உரியவர்களால் முதலமைச்சர் அல்லது அரசின் அதிகாரபூர்வ பொறுப்பாளர்களால் போராட்டக்காரர் களிடம் கூறப்பட்டு இருக்கலாம். மேலும், ஒரு நாள் அவசரப்படாமல் இருந்திருந்தால் இது ஒரு நாட்டிற்கே முன்மாதிரி போராட்டம் என்று ஆகியிருக்குமே!

ஆனால், இறுதியில் வலுக்கட்டாயமாக காவல்துறை, சரியான அவகாசம் கூடத் தராது அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை வெளியேற்றியது - அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்ததாகி விட்டது!

4. சமூக விரோத சக்திகள் புகக்கூடிய வாய்ப்பு - எந்த பெருந்திரளுக்குள்ளும் நடந்துவிடக் கூடியதுதான் - அதுவும் குறிப்பிட்ட தலைமை என்பது இல்லாத ஒரு மக்கள் கூட்டத்திற்கு எது பலமோ அதுதான் அதன் பலவீனமும்!

இதனால், சற்றும் விரும்பத்தகாத வன்முறை, தடியடி, அராஜகம் ஏற்பட்டு கறை படிந்துவிட்டது!

ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்கத் தவறிய நிலைதான் இது!

மேலும், இந்தப் புண்ணைக் குத்திக் குத்திக் கிளறக்கூடாது.

போராட்டம் இனியும் நீடிக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட இலக்கை அடைந்ததால், அதன் நோக்கம் நிறைவேறிய நிலையில், உடனடியாக முடித்துக் கொள்வதுதான் சாதுரியமாகும்.

இதனையொட்டி மேலும் அடக்குமுறை கைவிடப் பட வேண்டியதாகும்.

அதேநேரத்தில், தமிழ்நாட்டின் உரிமைகள் கேட் பாரற்ற நாதியில்லாதவை என்ற ஆணவத்திற்கு இது சரியான பாடம் கற்பித்த ஒன்று.

புரிந்து செயல்படவேண்டும் - அனைத்துத் தரப்பினரும்!!

 

கி.வீரமணி 
தலைவர்,  திராவிடர் கழகம்.

சென்னை

24.1.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner