எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேகாலாயா ஆளுநர் மாளிகையில்

‘கிருஷ்ண லீலா’ நடத்திய

ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் வெளியேறினார்!

- ஊசி மிளகாய்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பணியாற்றிய ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்தவர் வி.சண்முகநாதன் என்பவர்.

இவர் பிறகு டில்லி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன், வடகிழக்குப் பகுதி யில் உள்ள மேகாலாயா மாநில ஆளுநராக நியமனம் செய்யப் பெற்றார்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஆளுநராகி, தமிழ்நாட்டின் மதுரை, பழனி போன்ற பல ‘திவ்ய சேத்திரங்களுக்கெல்லாம் சென்று (அரசு செலவிலேயே) ‘க்ஷேத்திராடனம்' எல்லாம் செய்து முடித்ததோடு, தமிழ் நாட்டிலுள்ள பல பள்ளி, கல்வி நிலையங்களுக்கு வந்து ஒழுக்க உபதேசம் செய்யத் தவறாதவர்!

2015 ஆம் ஆண்டு மே மாதம் மேகாலாய ஆளுநராக நியமிக்கப்பட்டவர், 2016 ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேச ஆளுநர் பதவி காலியானபோது, அதையும் கூடுதலாக கவனித்து வரும் பொறுப்பை மோடி அரசு  அவருக்கு வழங்கியது!

அவர்மீது மேகாலாயா ஆளுநர் மாளிகை ஊழியர்கள், ஆளுநர் மாளிகையின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாக புகார் கூறி, 98 ஊழியர்கள் கையெழுத்திட்டு, குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் புகார் கடிதம் அனுப்பினர்.

ஊழியர்கள் அனுப்பிய அந்தப் புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இதோ:  (‘தினத்தந்தி’, 27.1.2017).

‘‘ஆளுநர் சண்முகநாதன், ஆளுநர் மாளிகையின் கண்ணியத்தைக் காக்கத் தவறிவிட்டார். ஆளுநர் மாளி கையை, ‘இளம் பெண் கிளப்’பாக அவர் மாற்றி விட்டார். அவரது நேரடி உத்தரவின் பேரில், பெண்கள் இஷ்டம்போல் வந்து செல்லும் இடமாக ஆளுநர் மாளிகை ஆகிவிட்டது. பல பெண்கள் அவரது படுக்கை அறைக்கே செல்லும் உரிமை பெற்றுள்ளனர்.

ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பு விஷயத்திலும் சண்முகநாதன் சமரசம் செய்துகொண்டுள்ளார்.

இரண்டு மக்கள் தொடர்பு அதிகாரிகள், ஒரு சமையல் காரர், ஒரு நர்ஸ் எனப் பெண்களாக நியமித்து, அவர்களை இரவுப் பணியில் நியமித்துள்ளார்.

தனக்குப் பணியாற்ற பெண்களை மட்டுமே நியமிக் கிறார்; ஆண் தனி உதவியாளரை தனது செயலகத்திற்கு மாற்றிவிட்டார்.

நேர்முகத் தேர்வுக்கு வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்.

ஆகவே, பிரதமர் உடனே தலையிட்டு, ஆளுநர் மாளிகையின் கண்ணியத்தைக் காக்க, ஆளுநர் சண்முக நாதனை நீக்கவேண்டும்‘’ என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.

விஷயம் நாறிப்போனவுடன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சண்முகநாதன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டாராம்! நியாயமாக வழக்குத் தொடரவேண்டும்.

என்னே தேசிய அவமானம்! அதுவும் 68 ஆவது இந்தியக் குடியரசு விழாவின்போதா இப்படி ஒரு செய்தி!

அது எப்படி தவறு? அவர் பகவான் கிருஷ்ணனின் லீலைகள்பற்றி ஆளுநர் மாளிகையில் பாடம் படித்துள்ளார்!

இந்துக் கடவுள்களில் இப்படி நடக்காத ஒரு யோக்கியமான கடவுளையாவது காட்ட முடியுமா?

அவர்கள் கும்பிடும் கடவுள்களின் லீலைகளை இவர்கள் பின்பற்றினால், தவறு ஆகாது என்பது அவர்களின் வாத மாக இருந்தால், யார்தான் அவர்களுக்குப் பதில் அளிக்க முடியும்?

இந்த ஒழுக்க சீலர்கள்தான் உலகத்திற்கே ஒழுக்கப் பாடப் போதகர்களாம்! அட வெட்கங்கெட்டவர்களே!

அர்த்தமுள்ள இந்து மதம் - அதனைக் காப்பாற்றும் ஆர்.எஸ்.எஸ். - அதன் புடம்போட்ட தங்கங்களின் நிலை இப்படியா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner