எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜன. 30``சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் உயர் கல்வியை பெற முடியாமல் தடுத்து, இடஒதுக்கீட்டுக் கொள்கையை முடக் குவதற்கும், உயர் ஜாதியினரும், மேல்தட்டு வர்க் கத்தினரும் பயன்பெறவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது!

இதை முழுமையாக எதிர்ப்பதே நாம் கொள் கையாக இருக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு பற்றிய தீர்மானத்தின் மீது பேசிய திமுகழக உறுப்பினர் இரா.சிவா வலியுறுத்தினார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நீட் தேர்வு சம்பந்தமாக அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் மீது திமுக சட்டமன்ற கட்சி தலைவர் இரா.சிவா  அவர்கள் பேசியதாவது:-

மருத்துவக் கல்லூரி நுழைவிற்காக தேசிய அளவில் நீட் எனும் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு அவசியம் என்ற மத்திய அரசின் சட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்பது புதுச்சேரி மாநில மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. நமது மாநிலத்தில் இதுவரை பின்பற்றி வரும் சென்டாக் தேர்ச்சி முறையில் புதுச்சேரி மாநில மாணவர்கள் முறையான பயன்களை பெற்றுவரும் நிலையில் ‘நீட்’ தேர்வு முறை குழப்பத்தை விளைவிப்பதுடன் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

நமது பாட முறை சமச்சீர் கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டுள்ள நிலையில் சி.பி.எஸ்.இ. பாட முறையில் நடத்தப்படும் நீட் தேர்வு நமது மாணவர்களுக்கு பின்னடைவை உருவாக்கும். புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீட்டு இடங்கள் நமது மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாறி விடும் அபாயம் உள்ளது. நமது மாநில ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனத்து மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி என்பது வெறும் கனவாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

இட ஒதுக்கீடு என்பதும், சமூக நீதிக் கோட்பாடு என்பதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர்நாடிக் கொள்கையாகும். தந்தை பெரியார் காலம்தொட்டு பேரறிஞர் அண்ணா, திமுக தலைவர் கலைஞர் காலங்களிலும் தொடர்ந்து இதற்கான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது. அரசியல் சாசனம் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்து அதன் தொடர்ச்சியாக சமூக கல்வியில் பின்தங்கி இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதன் பயனாகத்தான் மண்டல் கமிஷன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அதுமுதற்கொண்டு பாரதீய ஜனதா கட்சி எந்தெந்த வகையில் இடஒதுக்கீட்டை மறுக்க முடியுமோ அந்த அளவிற்கு இடஒதுக்கீட்டு கொள்கையை மழுங்கடித்து வந்துள்ளது. அதனுடைய தாக்கம் தான் நீட் தேர்வு என்பதாகும். எப்படியாவது இந்த இடஒதுக்கீட்டு கொள்கையை முடக்குவதற்கும், உயர் ஜாதியினரும், மேல்தட்டு வர்க்கத்தினரும் மட்டும் பயன்பெறும் அளவிற்கு இந்தத் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய கல்வி திட்டத்தின் மூலம் எப்படிப்பட்ட அடித்தள மக்களுக்கு எதிர்ப்பான சரத்துக்களை பாரதீய ஜனதா அரசு புகுத்த நினைக்கிறதோ அது போல் தான் ‘நீட்’ தேர்விலும் அடித்தளத்து மக்களும், சாமானிய மக்களும் மருத்துவக்கல்லூரி போன்ற உயர்படிப்புகளில் காலடி வைப்பதை தடுக்கின்ற விதமாக ‘நீட்’ தேர்வை கொண்டு வந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசினுடைய நவோதயா பள்ளி இரண்டில் மட்டுமே இன்று சிபிஎஸ்இ பாடப்பிரிவு பின்பற்றப்படுகிறது. மற்ற எந்த அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாட முறை இல்லை. நவோதயா பள்ளியில் கூட மத்திய மாநில அரசு ஊழியர்களின் பிள் ளைகள்தான் பெரும்பான்மையாக கல்வி பயில்கின்றனர். சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள சாமானிய மக்கள் அங்கே நுழைய முடியாத நிலைதான் உள்ளது. ஆகவே இந்த நீட் தேர்வு மூலம் மருத்துவக்கல்வி இடங்கள் சாமானிய மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் மறுக்கப்படும் என்பதே உண்மை. புதுச்சேரி அரசு பள்ளிகளில் சென்ற ஆண்டுதான் சிபிஎஸ்இ பாடமுறை அய்ந்தாம் வகுப்பு களில் துவக்கப்பட்டுள்ளது. இன்னும் 7 ஆண்டுகள் கழிந்தால் தான் அவர்கள் நீட் தேர்வை எழுதுகின்ற தகுதியை பெற முடியும் என்பதால் அதுவரையிலும் புதுச்சேரியில் நீட் தேர்வு தள்ளி வைக்கப்படுவது அவசியமாகிறது. திராவிட முன்னேற்றக் கழக கொள்கையைப் பொறுத்தவரை சாமானிய மக்களும், அடித்தட்டு மக்களும் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக் களும் சம அந்தஸ்து பெற வேண்டும் என்பதாகும். ஆனால் நீட் தேர்வு சம வாய்ப்பை மறுப்பதாக அமைந்துள்ளது.

இதனால் புதுச்சேரியில் மாணவ சமூகத்திற்கு மிகப் பெரிய பின்னடைவை உருவாக்குகின்ற நீட் தேர்வை முழுமையாக எதிர்ப்பது நம்மு டைய அரசின் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதை என்னுடைய கருத்தாக பதிவு செய் கிறேன்.

இவ்வாறு இரா. சிவா பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner