எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி அளிப்பு

"என் இறுதி மூச்சு அடங்கும் வரை உழைத்து  என் கடன் தீர்ப்பேன்!"

தமிழர் தலைவரின் உருக்கமான உரை

திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி சார்பாக பகுத்தறிவுப் பரப்புரைப் பயண புதிய ஊர்திக்கான சாவியை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவரிடம் மக்கள் வெள்ளத்தில் கரவொலிக்கிடையே வழங்கினர். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், திமுக தீர்மானக் குழு தலைவர் பொன்முத்துராமலிங்கம், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன், வெளியுறவுச் செயலளர் வீ.குமரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா, அமைப்புச் செயலாளர் வே.செல்வம் ஆகியோர் உள்ளனர் (மதுரை, 4.2.2017)

 

மதுரை, பிப்.5 பகுத்தறிவுப் பிரச்சாரப் பணிக்காக ஊர்தி அளிப்பதை நினைவு கூர்ந்து, என் இறுதி மூச்சு அடங்கும் வரை உழைத்து என் கடன் தீர்ப்பேன் என்று உருக்கமாக உரையாற்றினார் கழகத் தலைவர்.

மதுரையில் நேற்று (4.2.2017) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தனது நிறைவு உரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டதாவது:

பொதுக் குழுவில்...

இதே மதுரையில் 1946ஆம் ஆண்டு கருஞ்சட்டை மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தினர் - பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் அந்தக் காலித்தனம் நடந்தது!

அதனால் இந்த இயக்கம் அழிந்து விட்டதா? முன்னிலும் வீறு கொண்டு எழுந்தது - எழுந்திருக்கிறது! அதே மதுரையில் கருஞ்சட்டை மாநாடு 1970இல் நடந்தது.

தந்தை பெரியார் சிலையும் திறக்கப்பட்டது. தந்தை பெரியார் அவர்களே அதனை நேரில் கண்டு மகிழ்ந்தார். பழைய நிகழ்வினைச் சுட்டிக் காட்டி, இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்று தந்தை பெரியார் சங்கநாதம் செய்தார்.

நாவலர் நெடுஞ்செழியன்தான் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தார். மதுரை மேயர் - சுயமரியாதை வீரர் முத்து முழக்கமிட்டார். மிகப் பெரிய பேரணியும் நடத்திக் காட்டப்பட்டது.

இன்றைக்கு இருப்பதுபோல இவ்வளவு இளைஞர் பட்டாளம் அன்று கிடையாது. மதுரை ஓ.வி.கே. நீர் காத்தலிங்கம், பே. தேவசகாயம், பழனிவேல் போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய பெரியவர்கள் இருந்தார்கள். ஆனாலும் நகரில் செல்வாக்கு மிக்கவர்களாக அவர்கள் உலா வந்தார்கள்.

இதே மதுரையை கண்ணகி எரித்ததாக சொல்லுவார்கள். அது ஏதோ ஒரு கதை - நாம் நம்பவில்லை என்றாலும் நமது மாநாட்டை எதிரிகள் சூழ்ச்சியால் எரித்தனர் என்பது நம் கண் முன் நடந்துள்ளதே என்று குறிப்பிட்டார் கழகத் தலைவர்.

தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா என்று கேட்டார்கள்;  இருக்கிறது -  வலிமையாக இருக்கிறது - எதிரிகள் மிரளும் அளவுக்கு இருக்கிறது. தந்தை பெரியார் கொள்கைகள் சட்டமாக ஆகும் அளவுக்கு வலிமையோடு செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்திய அளவில் மட்டுமல்ல; உலகளவில் உயர்ந்து நிற்கிறது!

பெரியார் பன்னாட்டு மய்யம் உலகளாவிய முறையில் தந்தை பெரியார் அவர்களின் கருத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் அமையவிருக்கிறது. 95 அடி உயரத்தில் 40 அடி பீடத்தில் தந்தை பெரியார் செம்மாந்து நிற்கப் போகிறார். அதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. (பலத்த கரஒலி)

அடுத்த ஆண்டு தந்தை பெரியார் 95 அடி உயர சிலையை நாம் காணப் போகிறோம்.

2016ஆம் ஆண்டில் பல அறைகூவல்களைச் சந்தித்து இருக்கிறோம்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது  - தந்தை பெரியார் அவர்களால் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம்!

சட்டம் வந்தும், நீதிமன்றம் தீர்ப்புக் கூறியும் செயல்படுவதற்கு ஏனோ தமிழ்நாடு அரசு தயங்குகிறது. இந்து அற நிலையத் துறை, தீர்ப்பின் உட்கருத்தைப் புரிந்து கொண்டு ஆணை பிறப்பிக்கலாம்.

வரும் ஏப்ரல் மாதத்தில் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைந்து ஒரு மாபெரும் மாநாடு சென்னையில் நடைபெறும் - நமது கோரிக்கை, இலட்சியம் நிறை வேறும்வரை நமது முயற்சிகளும், போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பெண்ணடிமை ஒழிப்பு

ஜாதி ஒழிப்பு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பெண்ணடிமை ஒழிப்பு. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள், நமது மகளிர் அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும்.

நமது நிகழ்ச்சிகளுக்கு நமது தோழர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அழைத்து வர வேண்டும். இனி ஒற்றையராக யாரும் வரக் கூடாது;  நான் அதைக் கண்காணிப்பேன்!

பெண்களே முன்னின்று நடத்தும் போராட்டம் தான் - நமது பொதுக் குழுவில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் நாம் அறிவித்திருக்கும் மனுதர்மம் எரிப்புப் போராட்டமாகும்.

பட்டியல் தயாராக வேண்டும் - பெண்கள் எப்படி யெல்லாம் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் இந்து சாத்திரங்களில் என்பது குறித்த வெளியீடு கொண்டு வரப்படும்- நாடெங்கும் மக்களிடத்திலே அது விநியோகிக்கப்பட வேண்டும். மகளிர் அணியினர், பாசறையினர் சுற்றுப் பயணம் செய்வார்கள்.  அவர்களிடத்தில்  போராட்ட வீராங்கனைகளின் பட்டியல் தரப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கழகத் தலைவர்.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

இன்றைய பிஜேபி அரசால் தமிழ்நாடு பல வகைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. நதி நீர்ப் பிரச்சினையில் ஒரு தலைப்பட்சமாக மத்திய அரசு நடந்து கொண்டு வருகிறது. என்னதான் குட்டிக் கர்ணம் போட்டாலும் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது என்பதை உணர்ந்து கொண்ட பிஜேபி, அதன் மத்திய அரசு அரசியல் லாப நோக்கோடு கருநாடகத்தின் பக்கம் சாய்ந்து நிற்கிறது. இதற்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பிஜேபி பற்றி மேலும் சரியாகத் தெரிந்து கொள்வார்கள் - தமிழ்நாட்டில் உங்களுக்கு இடம் இல்லை, வேலையில்லை என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு.

'எய்ம்ஸ்' - அறிவிப்பு என்னாயிற்று?

தமிழ்நாட்டுக்கு 'எய்ம்ஸ்'  மருத்துவமனை வரும் என்று அறிவித்த மத்திய பிஜேபி அரசு இப்பொழுது அந்த முடிவைக் கை விட்டு அதை ஆந்திராவுக்குக் கொண்டு சென்று விட்டது. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளிலும் இருக்கின்றனர். கட்சிகளை மறந்து மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நடந்து கொள்வது போல - தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்பு என்று கூறினார்.

ஏறுதழுவுதலை முன்னிறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் இலட்சக்கணக்கில் திரண்டனர். வெறும் ஏறுதழுவுதலுக்காக மட்டுமே அந்தப் போராட்டம் என்று தவறாக மதிப்பிடக் கூடாது.

ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் உரிமையுணர்வு - வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் எதிர் விளைவு அதிலே அடங்கியிருக்கிறது - தந்தை பெரியார் ஊட்டிய தன்மான உணர்வு அதன் உள்ளீடாக இருக்கிறது என்பதை மத்திய அரசு மறந்திட வேண்டாம். சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர் என்று திசை திருப்ப வேண்டாம் என்றும் எச்சரித்தார் தமிழர் தலைவர்.

கழக அமைப்புப் பணிகள்

கழகத்தில் மாணவரணி, இளைஞரணி, மகளிர் அணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்புகள் எழுச்சி பெற வேண்டும்.

அமைப்பு ரீதியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அமைப்புகளைப் பலப்படுத்த, விரிவுபடுத்த அவற்றின் பொறுப்பாளர்கள் ஈடுபட வேண்டும்.

தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் வட்டார மாநாடுகள், சுவர் எழுத்துகள், துண்டு அறிக்கைகள் மூலமாக நமது கருத்துகள் கடைகோடி மனிதனுக்கும்  சென்றாக வேண்டும்.

நம்மிடையே ரத்த உறவைவிட கொள்கை உறவுதான் முக்கியம். சமூகப் புரட்சி இயக்கத்தில் இருக்கக் கூடிய நமக்கு - கட்டுப்பாடும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்.

தூத்துக்குடியைப் பாரீர்!

நமது தோழர்கள் சிறப்பாகவே செயல்படுகிறார்கள். மேலும் வேகமாக செயல்பட வேண்டிய கால கட்டம் இது!

தூத்துக்குடியில் நமது மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் காசிராசன் அவர்கள் தலைமையில் கழகப் பொறுப்பாளர்கள் இணைந்து சிறப்பாக பெரியார் மன்றத்தை உருவாக்கியுள்ளனர். நானே எதிர் பார்க்காத அளவுக்கு இந்தப் பணி நடைபெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.

 

மீண்டும் அண்ணாவின்

"சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்"

இன்றைய உலகம் இணைய தளத்தில் சுருங்கி விட்டது. எதிரிகள் அதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். நம்மை எதிர்த்தும் எழுதுகிறார்கள் -  நமது இளைஞர்களும் பதிலடி கொடுப்பதில் அவர்களைத் தாண்டி விட்டார்கள். உடனுக்குடன் சுடச் சுட பதிலடி தாருங்கள் - ஆனால் தரம் குறைந்துவிடக் கூடாது - அதே நேரத்தில் எதிரிகளுக்கு "ஷாக்" கொடுப்பதாக இருக்க வேண்டும்.

அதேபோல கலை நிகழ்ச்சி, நாடகங்கள் மூலம் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அண்ணா வின் "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" மறுபடியும் அரங்கேற்றப்பட வேண்டும். நமது பகுத்தறிவு கலை இலக்கிய அணி இதில் கவனம் செலுத்த வேண்டும்.

- பொதுக் குழுவில் கழகத் தலைவர்

 

எனது நன்றிக்குரியோர்...

பகுத்தறிவுப் பிரச்சாரப் பணிக்காக எனக்கு இன்று மாலை எனக்கொரு வாகனத்தைக் கொடுக்கயிருக்கிறீர்கள். இளைஞரணியினரும், மாணவரணியினரும் இணைந்து கழகத் தோழர் களின் ஒத்துழைப்போடு இந்தப் பணி நடந்து முடிந்திருக்கிறது. இதனை நான் எப்படி எடுத்துக் கொள்கிறேன் என்றால், என்னை இன்னும் அதிக வேலை வாங்குவதற்கான முயற்சி இது! தந்தை பெரியார் முன்பு சொன்னதுபோல என்னைக் கடனாளியாக்கியுள்ளீர்கள். அந்தக் கடனை என் இறுதி மூச்சு உள்ளவரை உழைத்து அடைப்பேன் என்று ஆசிரியர் அவர்கள் சொன்ன பொழுது  ஆயிரக்கணக்கில் கூடியிருந்த கழகத் தோழர்கள் மிகவும் உருக்கமான உணர்வுடன் நிசப்தமாக முடங்கினர் என்றே கூற வேண்டும்.

 

ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை மாநாடு

வரும் ஜூலையில் 27,28,29 தேதிகளில் ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை மாநாடு - கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதிகபட்சமாக 50 பேர்களுக்கு மேல் செல்ல வாய்ப்பு இருக்காது. கழக வெளியுறவு செயலாளர் குமரேசனிடம் இதுகுறித்துத் தொடர்பு கொள்ளலாம். முந்திக் கொள்பவர்களுக்கே முன்னுரிமை: ஜெர்மனி செல்வதோடு - பிரான்சு, சுவிட் சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்யவும் ஏற்பாடு இருக்கிறது. மொத் தத்தில் 10 நாட்கள் பயணம் இருக்கும்  - இம்மாத இறுதிக்குள் அதற்கான ஆயத்தங்கள் முடிந்துவிடும்.

அன்று 1932-களில் தந்தை பெரியார் ஜெர்மன் சென்றார். இப்பொழுது அவரின் தொண்டர்கள் ஜெர்மன் செல்வது மட்டுமல்ல - அங்கு பெரியார் சுயமரியாதை மாநாட்டிலும் பங்கேற்கிறார்கள் என்பது எத்தகைய வாய்ப்பு.

- பொதுக் குழுவில் தமிழர் தலைவர் (மதுரை - 4.2.2017)

 

எனது நன்றிக்குரியவர்

எனது உடல் நலனில் அக்கறையோடு உள்ள வர்கள் எனது நன்றிக்குரியவர்கள் யார் என்றால்,முதலில் எனது மருத்துவர்கள், எனது ஓட்டுநர்கள், குடும்பத்து உறுப்பினர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கட்டுப்பாட்டுடன் பணியாற்றும் கழகக் குடும்பத்தினர்களாகிய நீங்கள்.

- பொதுக் குழுவில் தமிழர் தலைவர், (மதுரை 4.2.2017)

 

1. தமிழர் தலைவருக்கு பொன். முத்துராமலிங்கம் சால்வை, 2. புதிய ஊர்தி,

3. புதிய ஊர்திக்குள் தமிழர் தலைவர், பொன். முத்துராமலிங்கம், கலி. பூங்குன்றன், தொல். திருமாவளவன், 4. தமிழர் தலைவருக்கு தொல்.திருமாவளவன் சால்வை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner