எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை, பிப்.7 இன்றைக்கு நிலவும் அரசியல் சூழ்நிலையில், குட்டையைக் குழப்பி காலூன்றி, அரசியல் இலாபத்தை ஈட்டவேண்டும் என்று திட்டமிடும் பி.ஜே.பி.யின் முயற்சியைத் தடுத்தாகவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

புதுக்கோட்டையில் (6.2.2017) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்

செய்தியாளர்: திருமதி சசிகலா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு மக்களிடம் ஆதரவில்லை; சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரப் போகிறது - ஆகவே, மீண்டும் பன்னீர்செல்வம் அவர்களே முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்.

தமிழர் தலைவர்: திராவிடர் கழகத்தைப் பொருத்த வரையில், இது ஒரு அரசியல் கட்சியல்ல. மாறாக, முழுக்க முழுக்க சமுதாய நலன் சார்ந்த, மக்கள் நலன் சார்ந்த ஒரு இயக்கம். அடிப்படையில் திராவிடர் இன உணர்வு பட்டுப்போகாமல் காப்பாற்றப்பட, அரசியலும் ஒரு கருவியாக அமைந்தால், அது மிக முக்கியம் என்று கருதக்கூடிய ஒரு இயக்கம் - தந்தை பெரியார் அவர்கள் காலத்திலிருந்து.

அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது, திராவிட இயக்கத்தின் அடிப்படையில் ஏற்கெனவே முதலமைச்சராக இருந்தவர், தானே முன்வந்து பதவி விலகுகிறார். என்ன காரணம் என்பது, அது அவர்களுடைய கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினை. ஏற்கெனவே, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக திருமதி.சசிகலா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் ஒருமனதாக.

இப்பொழுது முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் அவர்கள், அவரே முன்வந்து, தன்னுடைய பொறுப்பி லிருந்து விலகிக் கொண்டு, திருமதி சசிகலா அவர்களை முன்மொழிந்து, அவர் ஏகமனதாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றபொழுது, ‘குற்றவாளி' என்ற நிலையில், அவர் சட்டப்படி இல்லை. எனவே, சட்ட ரீதியாக இந்தப் பிரச்சினை நாளை மறுநாள் என்னாகும்? அதற்கு அடுத்த நாள் என்னாகும்? என்கிற கேள்வி இருக்கிறதே, அது வெறும் யூகத்தின் அடிப்படையிலானது.

இதுவரையில் அவர்கள் அந்த வழக்கில், அவர்கள் ஜாமீனில் விடுதலை பெறவில்லை. முழுக்க விடுதலை பெற்று வந்திருக்கின்ற ஒரு சூழ்நிலை. அது சரியா? தவறா? என்பது வேறு பிரச்சினை.

ஆனால், அதைப்பற்றி ஒரு நிலைப்பாடாக - அது ஒரு ஆட்சேபனையாக சொல்ல முடியாது - மற்றபடி, மக்கள் ஆதரவு என்பது - நிச்சயமாக அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத்தான் வர முடியும். 6 மாதங்கள் வரையில் அவர் முதலமைச்சராக இருக்கலாம், அரசியல் சட்டப்படி.

அதற்கிடையில், ஒரு இடைத்தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் ஆதரவு பெற்றுத்தான் அவர் முதலமைச்சராக தொடரமுடியும். அவருடைய கட்சிக்கு முழுப் பெரும் பான்மை இருக்கிறது. கட்சி உடையவில்லை. அதைத்தான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்றவர்கள் எதிர்பார்த்தார்கள். எப்படியாவது இரட்டை அதிகாரப் போக்கை உருவாக்கி,  குட்டையைக் குழப்பி அதன்மூலமாக அந்தக் கட்சியைப் பிளவுபடுத்தி, தாங்கள் காலூன்ற வேண்டும் தமிழ்நாட்டில் என்று நினைத்தார்கள். அது நடக்கக்கூடாது என்று திராவிடர் கழகம் பரிபூரணமாக விரும்புகிறது. மற்ற அரசியல் பார்வை எங்களுக்குக் கிடையாது.

செய்தியாளர்: தமிழர்கள் நலம் சார்ந்து, வி.கே.சசிகலா அவர்கள் முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றார்கள் என்றால், அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று  நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஆட்சிக்கு வரட்டும், பிறகு சொல்கிறோம். எது எது இன்றைக்கு உடனடியாக மக்கள் தேவை என்று கருதுகிறார்களோ, அந்த உணர்வுகளை அவர்கள் பார்த்து செய்யவேண்டும். அதுதான் மிக முக்கியம். அதுமட்டுமல்ல, அது ஜெயலலிதா ஆட்சியினுடைய ஒரு தொடர்ச்சி - அவர்களே சொல்லியிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சித் திட்டங்கள் என்னவோ, அதனை நான் செய்யவிருக்கிறேன்  - மக்கள் நலன்சார்ந்ததாக இருக்கும் என்று இரண்டு செய்திகளை அவருடைய உரையில் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, பெரும்பாலும் தாய்மார்கள் உள்பட எதிர் பார்க்கக்கூடிய பிரச்சினை - மதுக்கடைகளை உடனடியாக முழுமையாக மூடாவிட்டாலும்கூட, ஒரு கணிசமான எண்ணிக்கையிலாவது  மூடப்படவேண்டும். ஏற்கெனவே அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் அதனை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதுபோலவே, ஊழல், லஞ்சம் என்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்குவது. மக்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்பதை ஆய்ந்து அதனைக் களையவேண்டும்.

ஜெயலலிதா அவர்கள் எப்படி மத்தியில், உறவுக்குக் கைகொடுப்போம் - அதேநேரத்தில், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று விட்டுக் கொடுக்காமல் இருந்தார்களோ, அதனைச் செய்யவேண்டும். அதில் உறுதியாக இருக்கவேண்டும்.

அந்தக் கட்சியைப் பொருத்தவரையில் அவர்கள் கட்டுக் கோப்பாக இருக்கிறார்கள். அந்தக் கட்டுக்கோப்பு அந்த லட்சி யங்களை நிறைவேற்றப் பயன்பட வேண்டும்.

- இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner