எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஆந்திர மாநிலம் , அய்தராபாத்தில் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.அய். செயலாளர் சுதாகர் ரெட்டி சி.பி.அய். தேசிய செயலாளர் து.ராஜா, அண்ணல் அம்பேத்கரின் பெயரன் பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோர் எழுச்சியுரையாற்றியுள்ளனர்.

சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகிறார்:

‘‘பல்கலைக் கழக வளாகங்களில் உயர்கல்வி பயிலும் தலித்துகள் பாகுபாட்டுக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. பிஎச்.டி., ஆராய்ச்சி மாணவன் ரோகித் வெமுலா தற்கொலை இதைத்தான் காட்டுகிறது. ஒரு விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு, ஆய்வும் முடிக்கப்பட்ட நிலையில், அது வெளியிடப்படாதது - ஏன்? காரணம், ஆர்.எஸ்.எஸ். இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கொள்கை ரீதியாக ஒரு நிலையினை எடுத்திருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார்.

இது ஒரு சரியான கருத்தே! ரோகித் வெமுலா மரணம், மரத்துப்போன மக்களைத் தட்டி எழுப்பி உயிர்ப்பித்திருக்கிறது. அதேநேரத்தில், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பலின் சமூகநீதிக்கு விரோதமான விகாரமான முகத்தினை முச்சந்தியில் நிறுத்தி சாட்டையடி கொடுத்திருக்கிறது.

விசாரணை ஆணையத்தின் ஆய்வு அறிக்கையை ஏன் வெளியிடவில்லை? முக்கியமான வினா இது. ஜல்லிக்கட்டுக்காக கிளர்ந்தெழுந்த மாணவர்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான உயிர்நாடிப் பிரச்சினை.

சமூகநீதியாளர்கள் உரத்துக் குரல் கொடுத்து - ‘மத்திய அரசே ரோகித் வெமுலா தற்கொலை மீதான விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வெளியிடு, வெளியிடு’ என்ற ஆவேச அக்னிக் குரல் ஆகாயம்வரை வெடித்துக் கிளம்பட்டும்! கிளம்பட்டும்!!

அதே கூட்டத்தில் சி.பி.அய். பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்த கருத்தும் கூர்மையானதே! ‘‘சங் பரிவாரத்தின் அரசியல் அங்கமாக இருக்கும் பி.ஜே.பி.,க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவேண்டும். தலித்துகள் மீதான தாக்குதல்கள்  மனுதர்மத்துடன் இணைந்தவை’’ என்று இரத்தின சுருக்கமாகக் கூறியுள்ளார்.

அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளான வரும் மார்ச் 10 ஆம் தேதி திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை இணைந்து நடத்தும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தின் இன்னொரு முகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர், கூர்மையான பார்வையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களும், அவர்கள் கண்டெடுத்த சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும், கையில் எடுத்துக்கொண்டு களமாடி வரும் பிரச்சினையை இப் பொழுது பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களும் கையில் எடுத்துக்கொண்டு அய்தராபாத்தில் பேசி இருப்பது வரவேற்கத்தக்கதே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner