எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எது நடக்கக் கூடாது என்று நாம் கடந்த மாதம் முதலே வற்புறுத்தி அறிக்கைகளில் விளக்கினோமோ, அது நடந்ததே விட்டது என்பது வேதனைக்குரியது!

நிலையான ஆட்சிக்குப் பெயர்போன தமிழ்நாடு, இன்று பிளவுபட்டு நிற்கிறது; பிரித்தாளும் ஆரிய நரித்தந்திரம் தற்காலிக வெற்றி பெற்றிருக்கிறது!

356 என்பதை தயார் நிலையில் வைத்துக்கொண்டுள்ள டில்லி ஆட்சியால் அதற்கான அரசியல் சித்து விளையாட்டுகளும், பொம்மலாட்டங்களும் திட்டமிட்டு அரங்கேற்றப் பட்டு வருகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறும்போது வாக்குகளை தம் பக்கம் ஈர்க்க - தங்களது தலையாட்டிப் பொம்மைகளைக் கொண்ட அரசினைக் கொண்டுவர, இந்த அரசியல் தாமதங்களும் - மெத்தனமான நடவடிக்கைகளும் (டில்லியின் திட்டமிட்ட செயல்) என்று நேற்று (9.2.2017) தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு எழுதுகிறது!

*பூனைக்குட்டி வெளியில் வந்ததே*!

அ.தி.மு.க.வின் ஒரு பிரிவிற்கு அனுதாபங் கொண்டு ஆதரவு தருவதாக ஒரு நாடகத்தை நடத்தி, இறுதியில் யாருக்கும் போதிய பெரும்பான்மை இல்லை என்று கூறி, 356 என்ற ஆயுதத்தைக் கூர்மைப்படுத்தி, தயார் நிலையில் வைத்துள்ளனர் என்பதற்கு அவாள் ஏடான தினமலர் - அ.தி.மு.க.வை உடைக்க குருமூர்த்தி அய்யர்களின் முயற்சிக்குக் களம் அமைத்துவரும் இனமலர் ஏடு எழுதியுள்ளதன் மூலம், தந்தை பெரியார் சொல்வதுபோல, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! பலப் பரிட்சையில் சசி தோற்றால் அடுத்து என்ன?

சட்டசபையை முடக்க கவர்னர் உத்தரவிட வாய்ப்பு!
(தினமலர், 10.2.2017, பக்கம் 20)

.....பெரும்பான்மையை நிரூபிக்க அதிகபட்சம் கவர்னர் ஒரு வாரம் அவகாசம் தருவார். அவர் குறிப்பிடும் நாளில், அ.தி.மு.க.வில் சசிகலா தரப்போ அல்லது பன்னீர்செல்வம் தரப்போ, பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், ஆறு மாதத்திற்கு சட்டசபையை முடக்கி வைக்க, ஆளுநர் உத்தரவிடும் வாய்ப்பு உள்ளது.

உடனே, அடுத்த பெரிய கட்சியான தி.மு.க.வை ஆட்சி அமைக்க, அவர் அழைக்கமாட்டார். ஆறு மாத காலம் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமையும் என்கிறது தினமலர்.

இன எதிரிகளின் சூழ்ச்சித் திட்டம்

இத்தகைய சித்து விளையாட்டுமூலம் குதிரை பேரங்களும், மலிந்து, அரசியல் ஸ்திரத்தன்மை விடை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நம் இன எதிரிகளின் சூழ்ச்சித் திட்டம்!

அ.தி.மு.க.வில் யாரோ இரண்டு தனி நபர்களின் தலைமைக்குள் நடக்கும் அரசியல் போட்டி இது என்று நுனிப்புல் மேய்பவர்கள் நம்மை விமர்சித்தால் அவர்கள் அதைப் பிறகு புரிந்துகொள்வர். உணர்ச்சிவயப்பட்டு சிந்தித்தால் உண்மை கண்களை மூடிக் கொள்ளும்.

தமிழ்நாட்டு அரசியலில் இப்போது நடைபெறுவது தேவாசுரப் போராட்டமே! அதாவது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டமே!

நமது பார்வை முற்றிலும் இனநல பொதுநலப் பார்வையே - தந்தை பெரியார் பார்வையே!

தமிழ்நாட்டில் இத்தகைய சித்து விளையாட்டுக்கு மூலகாரணமாக உள்ள சிறீமான் குருமூர்த்தி அய்யர் அவர்கள் இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் என்ன கூறுகிறார்?

கவர்னர், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும்வரை பொறுமையாக காத்திருக்கவேண்டும்.

மெஜாரிட்டி இருந்து பயன் என்ன - அதற்குரிய தகுதி இல்லாமல்? அவர் (சசிகலா) தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. அவர் ஆறு மாதத்திற்குள் தேர்தலில் நின்று வென்று வரவேண்டும் தண்டிக்கப்பட்டு விட்டால் தேர்தலில் நிற்க முடியாது என்கிறார் குருமூர்த்தி.

என்னே விசித்திர லாஜிக்! அரசியல் சட்டப்படி மெஜாரிட்டி என்பதுதானே ஜனநாயகத்தில் தகுதியே! வேறு என்ன தகுதி? சட்டமன்ற உறுப்பினர்களாக இல்லாதவர்கள் முதல்வராக தேர்வான பிறகு, தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்களின் நீண்ட பட்டியலே உண்டே! பூணூல் தகுதி என்ற ஆழ்மனக் குறை தகுதிதானே? என்னே விசித்திர வாதங்கள்!

அனுமானங்கள் - இப்படி நடந்தால், அப்படி நடந்தால் என்பதற்கு, இந்திய அரசியல் சட்டத்தில் துளியும் இடமில்லை.

ஆளுநர் அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டியவரே! (Duty).

இல்லையானால், அரசியல் சட்டக் கடமையாற்ற தவறிய ஜனநாயகப் படுகொலை நடந்தது என்ற அவப்பெயர்தான் தமிழ்நாட்டிற்கு ஏற்படும்!

காவிகளின் சூழ்ச்சிக்கு இரையாகலாமா?

கறை படிந்த நிலைக்குக் காவிகள் தமிழ்நாட்டைக் கொண்டு போவதை அனுமதிக்கலாமா? இரையாகலாமா? நிடுநிலையிலிருந்து சிந்தியுங்கள்! மேலெழுந்தவாரியாகப் பார்க்கக் கூடாது!!

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை,
10.2.2017 .

Comments  

 
#1 மாரிமுத்து 2017-02-10 14:38
நீங்கள் சொல்வது சரியே
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner