எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜஸ்டிஸ் என்.பால்வசந்த்குமார் அவர்களை  நியமிக்கவேண்டும் - தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகளில் தமிழ்நாட் டைச் சேர்ந்த ஒரே ஒருவர்தான் உள்ளார்.  தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சமூகநீதிக்கான கண்ணோட்டத்தில் நீதிபதிகள் நியமனம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை மொத்தம் 31 ஆகும்.

இதில் பல இடங்கள் காலியாக உள்ளன; அதன் காரணமாக வழக்குகளின் தேக்கத்தைக் குறைத்து, உடனடியாக நீதி வழங்க முடியாத நிலை.

தமிழ்நாட்டிலிருந்து  இதுவரை 3 அல்லது 4 நீதிபதிகள்கூட உச்சநீதிமன்றத்தில் இருந்திருக்கிறார்கள்.

பெங்கால் ‘லாபி’ - மும்பை ‘லாபி!’

‘பெங்கால் லாபி’, ‘மும்பை லாபி’ என்பதே மிகவும் செல்வாக்குடன் தங்களது மாநில உயர்நீதிமன்றத்திலிருந்து தவறாமல் கூடுதல் எண்ணிக்கையில் நீதிபதிகள் உச்சநீதிமன் றத்திற்குச் செல்ல மிகுந்த கவனஞ் செலுத்துகின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து உச்சநீதிமன்றம் சென்று சிறப்பாக பணியாற்றிய மாண்பமை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, நாகப்பன் போன்றவர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர்.

மாண்புமிகு ஜஸ்டிஸ் பானுமதி அவர்கள்தான் ஒரே ஒருவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதியாக உள்ளார்.

எனவே, உடனடியாக தமிழ்நாட்டுக்குப் பிரதிநிதித்துவம் தேவை, தேவை!

எஸ்.சி., எஸ்.டி., சமூக நீதிபதிகள் தேவை!

காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள மாண்புமிகு ஜஸ்டிஸ் என்.பால்வசந்த்குமார் அவர்களை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பது சமூகநீதிக் கண்ணோட்டத்திலும் முக்கியம் ஆகும்.

அதுபோலவே, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் (எஸ்.சி., எஸ்.டி.,) சமுகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் உச்சநீதி மன்றத்தில் இல்லை. உடனடியாக இந்தச் சமூக அநீதியைக் களையவேண்டும்.

தமிழ்நாட்டு எம்.பி.,க்களின் கடமை

தமிழ்நாட்டு எம்.பி.,க்கள்  இதில் அவசர, அவசியம் கவனஞ்செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள சமூகநீதியில் நம்பிக்கை உள்ள அத்துணை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒரே குரலில் இதனை வற்புறுத்த வேண்டும் என்பது நமது முக்கிய வேண்டுகோள் ஆகும்.

 

கி.வீரமணி           
தலைவர்,    திராவிடர் கழகம்.


10.2.2017 சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner