எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விதி 356-அய் பயன்படுத்தவும் திட்டமா?
கோவையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் வினா

கோவை, பிப்.11 தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யார் தடை? ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. காலூன்ற மத்திய அரசு ஆளுநரைப் பயன்படுத்துகிறதா? விதி 356 அய் பயன்படுத்தவும் திட்டமா? என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் வினா எழுப்பினார்.

இன்று காலை (11.2.2017) கோவை  சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். பேட்டி வருமாறு:

புத்தாண்டில் முதன்முறையாக இப்பொழுதுதான் உங்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கொஞ்சம் தாமதித்தாலும் ஏற்பட்டிருக்கிறது; அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

அதேநேரத்தில், தமிழ்நாட்டினுடைய நிலவரம் மகிழ்ச்சிக் குரியதாக இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். காரணம், கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் ஆட்சி, நிர்வாகம் என்பது ஸ்தம்பித்துப் போயிருக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கு அடிப்படையான காரணம், என்னுடைய நேற்றைய அறிக்கை உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

டில்லியினுடைய சித்து விளையாட்டுகளும், பொம்மலாட்டங்களும்தான்

முழுக்க முழுக்க டில்லியினுடைய சித்து விளையாட்டுகளும், பொம்மலாட்டங்களும்தான் என்பது திராவிடர் கழகத்தினுடைய உறுதியான கருத்தாகும்.

காரணம் என்னவென்று சொன்னால், ஒரு கட்சியினுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறபொழுது, அந்தக் கட்சிக்குப் பொதுச்செயலாளராக ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சூழ்நிலையில், அவரே முதலமைச்சராக வேண்டும் என்று முன்மொழியப்பட்டு, ஏற்கெனவே இருந்தவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார்.  அவரே, நான் பதவியை ராஜினாமா செய்தது ஒரு நிர்ப்பந்தம், கட்டாயம் என்று சொல்வதுதான் வேடிக்கை.

மிக நெருக்கடியான ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிச்சயமாக ஆளுநர் அவர்களுக்கு தெரியும். ஆளுநர் பதவியே முழுக்க முழுக்க இதுபோன்ற நெருக்கடியின்போது, சட்டம் ஒழுங்கை எப்படி காப்பாற்றுவது?, எப்படி முடிவெடுப்பது? என்பதுதான் ஆளுநர் பதவிக்கே அவசியம். இல்லையானால், ஆளுநர் பதவிக்கு அவசியம் இருக்காது.

அந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில்தான் ஆளுநர் இருந்திருக்கிறார்,  கோவையில் நடைபெற்ற ஒரு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு விட்டு, சென்னைக்கு வரவேண்டியவர்,. திடீரென்று எங்கே சென்றார் என்று தெரியவில்லை. மும்பைக்குச் சென்றார், அங்கே சில நிகழ்வுகளில் எல்லாம் கலந்துகொண்டார் என்கிற தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

இதோ என்னுடைய கைகளில் இருப்பது ஆளுநர் மாளிகையிலிருந்து வெளிவந்த (6.2.2017) செய்திக் குறிப்பு.

அரசியல் சட்ட முறைப்படி,
மாற்று ஏற்பாடு செய்கின்ற வரையில்

அதில் இருக்கின்ற கருத்து என்னவென்றால்,

Vidhya Sagar Rao
Honorable  Governor of Tamilnadu
Has accepts this Resignation, of Thiru O. Panneerselvam Chief Minister Tamilnadu and his council of Minister and requested him and present council of the Ministers to function and till alternate arrangements are made

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருப்பதோடு, அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது ஆளுநரால். அரசியல் சட்ட முறைப்படி, மாற்று ஏற்பாடு செய்கின்ற வரையில் நீங்கள் பதவியில் தொடருங்கள் என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் ஆளுநர்.

அதோடு இணைப்பாக ஆளுநர் எழுதிய கடிதத்தில்,

Dear  Chief Minister,
I hereby accept your resignation and the resignation of your council of ministers.
tender wide your letter dated: 5.2.2017

பன்னீர்செல்வம் அவர்களுடைய ராஜினாமா, அவருடைய அமைச்சரவையினுடைய ராஜினாமாவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஆளுநருடைய கடமை என்ன?

இதன்படி பார்த்தால், யார் பெரும்பான்மையாக இருக்கிறோம்என்றுசொல்கிறார்களோ,அவர் களை அழைத்து,  நீங்கள் ஆட்சிக்குப் பொறுப் பேற்றுக்கொள்ளுங்கள்.உங்களிடையேபிரச் சினை ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால், யாருக் குப்பெரும்பான்மைஇருக்கிறதுஎன்பதை,15 நாள்களுக்குள்ளாகவோ அல்லது ஒரு வாரத்திற் குள்ளாகவோ சட்டமன்றத்தைக் கூட்டி, பெரும் பான்மையை நீங்கள் நிரூபிக்கவேண்டும் என்று சொல்வதுதான் ஆளுநருடைய கடமை.

இதில் மற்றவற்றைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இந்த சூழ்நிலையில், ஆளுநர் இங்கே வருவ தற்கு இரண்டு, மூன்று நாள் தாமதம். ஆளுநர் வரவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.,க்கள் ரகளை செய்கிறார்கள்; நாடாளுமன்றம் முடங்கிப் போகிறது. குடியரசுத் தலைவரை சென்று அவர்கள் சந்திக்கின்றார்கள்.

நேற்று முன்தினம் ஆளுநர் அவர்கள் இங்கே வந்தார். அப்பொழுது பிரச்சினைக்குரிய  இரு சாரா ரையும் அழைத்து அவர் பேசியிருக்கிறார்.

அதில் காபந்து அரசாங்கத்தை நடத்துகின்ற முதல் வராக இருக்கக்கூடியவர் என்ன பேசினார் என்பதை வெளியில் சொல்லாமல், ‘‘நல்லதே நடக்கும், நல்லதே நடக்கும்‘’ என்று சொன்னார்.

‘‘நிச்சயமாக ஆளுநர் அவர்கள் அழைப்பார்’’ என்றார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்

அடுத்ததாக சந்தித்தவர், ‘‘நிச்சயமாக நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டார். சட்டமன்ற உறுப் பினர்களின் ஒப்புதல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். அதைப் பார்த்து ஆவன செய்வதாக சொல்லியிருக்கிறார். ஆகவே, நிச்சயமாக ஆளுநர் அவர்கள் அழைப்பார்’’ என்றார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா.

அவர் சொல்லி, இரண்டு நாள்கள் ஓடிவிட்டது. இதற்கிடையில், ஏற்கெனவே நிர்வாகம் நடத்த முடி யாமல் இருக்கிறது. நீட்  நுழைவுத் தேர்வை எதிர்த்து  சட்டமுன் வடிவு நிறைவேற்றப்பட்டது,  இந்த நிலையில்,  நுழைவுத் தேர்வு போன்றவைகள் மாணவர்களிடத்தில் நடத்துவதில், மார்ச் ஒன்றாம் தேதி கடைசி நாள் என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதற்குள்ளாக, மத்திய அரசாங்கத்தினுடைய ஒப்புதல், குடியரசுத் தலைவருடைய ஒப்புதல் போன் றவை பெறவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு உள்ளது. இன்னும் இதுபோன்ற பல பிரச்சினைகள் அரசைப் பொறுத்தவரையில் இருக்கும்பொழுது, உடனடியாக செய்யவேண்டியது என்ன?

அரசியல் சட்டத்தில் இடமில்லை

அதோடு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தொலைக்காட்சிகளில் சொல்லியதையும் நான் கேட் டேன்.

நீதிபதி என்ன சொல்கிறார் என்றால், எப் பொழுது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துவிட்டார்களோ, அடுத்தவர் வரும்வரையில்தான் அவருக்கு இந்த வாய்ப்பு.

இதற்கிடையில், நான் கட்டாயப்படுத்தப்பட்டேன், நிர்பந்தப்படுத்தப்பட்டேன் என்று சொல்கிறார் காபந்து முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள்.

அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்கிற கேள்வி எழுகிறது.

இந்திய அரசியல் சட்டப்படி, ஒருமுறை ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து, ஆளுநர் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டால், மறுபடியும் அவர் அந்தக் கடிதத் தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்றால், அதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை.

ஆளுநருடைய கடமை - இந்திய அரசியல் சட்டக் கடமையை நிறைவேற்றுவதுதான். வேறு வேறு பிரச்சினையை அதில் கொண்டுவருவதற்கு இடமில்லை.

சரி, நிர்பந்தப்படுத்தப்பட்ட ஒருவரின் நிலை என்ன என்று நீங்கள் கேட்கலாம்?

அந்தக் கேள்வி நியாயமானதுதான். நிர்பந்தப்படுத் தப்பட்டது உண்மையா? இல்லையா? என்பதுபற்றி ஆளுநர் அவர்கள் தனியே விசாரணை நடத்தலாம். அதற்கு ஆளுநருக்கு உரிமை உண்டு. அல்லது சி.பி.அய். வசம் ஒப்படைக்கலாம்.

இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவேண் டிய அவசியம் இல்லை.

ஆகவே, யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களை அழைத்து, ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தயக்கம்? என்பது புரியவில்லை.

இந்த இடத்தில்தான், யோசிக்கவேண்டியது இருக் கிறது. தமிழ்நாட்டில் வெளிவரக்கூடிய பல்வேறு செய்திகள்.

356 அய் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் பலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள், பா.ஜ.க.வின் பிர முகர்கள், பா.ஜ.க.வினுடைய ஏடுகள் இவைகள் எல்லாம் திட்டமிட்டு, தமிழ்நாட்டில் தங்களால் நேரிடையாகக் காலூன்ற முடியாத சூழ்நிலையில், எப்படியாவது  இங்கு அரசியல் குழப்பத்தை உருவாக்கி, ஆளுங்கட்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கி, பலகீனப்படுத்தி, இவர்களுக் கெல்லாம் மெஜாரிட்டி இல்லை என்றெல்லாம் சொல்லி, State of Suspended Animation என்று 356 அய் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் பலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதனைக்கூட அவர்கள் திடீரென்று எப்படி கொண்டு வர முடியும்?

பழைய ஏற்பாடே,
மாற்று ஏற்பாடாக வர முடியாது

உடனடியாக யார் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க் களின் ஆதரவை பெற்று இருக்கிறார்களோ, floor testing என்று சொல்லக்கூடிய, சட்டசபையைக் கூட்டி, அதில் அவர்களுக்குரிய பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று சொல்லவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உண்டு.

யார் பெரும்பான்மையைக் கொடுக்கிறார்களோ, அவர்களைத்தான் அவர் அழைக்கவேண்டுமே தவிர,

until alternate arrangementsuntil alternate arrangements  என்கிற வார்த்தையைப் போட்டிருக்கிறார். மாற்று ஏற்பாடுகள் செய்கின்ற வரையில்,
அப்படியென்றால், ஏற்கெனவே உள்ள பழைய ஏற்பாடே, மாற்று ஏற்பாடாக வர முடியாது. ஏனென்றால்,

once a resignation of a particular chief minister has been accepted, cannot be rescinded then  back.

அவர் மீண்டும் வருவதற்கு அரசியல் சட்டத்தில் நடைமுறையில் இடம் இல்லை. இதனை ஓய்வு பெற்ற பல நீதிபதிகளும்  உறுதியாக எடுத்துச் சொல்லியிருக் கிறார்கள் என்பது மேலும் வலு சேர்க்கக் கூடிய ஒன் றாகும்.

செய்தி, மறுப்புகளுக்கெல்லாம்
ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?

அதுமட்டுமல்ல,

இதற்கு ஏன் தாமதமாகிறது, தாமதமாகிறது என்று சொல்லும்பொழுது, ஊடகங்களில் வெளிவரக்கூடிய செய்திதான்.

அது என்னவென்றால், நேற்று ஒரு தவறான செய்தி, ராஜ்பவன் பக்கத்தில் பரப்பப்படுகிறது என்றால், இதற்கெல்லாம் யார் காரணம்? எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் தாமதப்படுத்தப் போகிறீர்களோ, அவ்வளவுக்கவ் வளவு அரசாங்கத்தினுடைய பெயர் கெடுகிறது; ராஜ்பவன் அறிக்கை அனுப்பியிருக்கிறது என்று ஒரு செய்தி வருகிறது;  அப்படி அறிக்கை அனுப்பவில்லை என்று மறுப்பு வருகிறது. இந்த செய்தி, மறுப்புகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?

முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பு யார் கையில் இருக்கிறது? ஆளுநருடைய கைகளில் இருக்கிறது.

எனவே, ஆளுநருடைய மவுனமும், தாமதப்படுத் துவதும் ஜனநாயக விரோதமாகும்.

உடனடியாக அவர் என்ன செய்யவேண்டும் என்றால், யார் மெஜாரிட்டியாக இருக்கிறார்களோ, அவர் களை அழைத்து, உங்களுடைய பெரும்பான்மையை இந்தத் தேதிக்குள் நீங்கள் நிரூபித்துக் காட்டுங்கள் என்று சொல்வதுதான் அரசியல் சட்ட கடமை - ஜனநாயகத்தில் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒன்றாகும். இதனை அவர் செய்ய கடமைப்பட்டு இருக்கிறார்.

அப்படி அவர் செய்யவில்லையானால், நிச்சயமாக அதனுடைய விளைவு என்னாகும் என்று சொன்னால், ஜனநாயகம் இல்லை என்று சொல்லக்கூடிய அள விற்குப் போகும்.

நீதித்துறை வேறு;
நிர்வாகத் துறை வேறு

இதில் இன்னொரு செய்தியைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.

அது என்னவென்றால், அவர்கள்மீது ஏற்கெனவே ஒரு வழக்கு இருக்கிறது. அந்தத் தீர்ப்பு வரும் வரையில் பொறுத்திருக்கவேண்டும் என்பது சரியா?

உச்சநீதிமன்றம் என்பது சுதந்திரமானது; நம்முடைய அரசியல் சட்ட அமைப்பில், நீதித்துறை வேறு; நிர்வாகத் துறை வேறு.

எனவே, நீதித்துறையும், நிர்வாகத் துறையும் ஒன்றாக இருப்பது போன்று காட்டுகிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் இந்தத் தேதியில் தீர்ப்பளிக்கப் படும் என்று  சொல்லியிருக்கிறார்களா?

இன்றைக்கு வெளிவந்த ‘இந்து’ பத்திரிகையில் எழுதியிருப்பதுபோல,

Technically there is no bar

என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். சட்டப்படி எந்தவிதமான தடையும் கிடையாது என்பதைத்தான் பார்க்கவேண்டுமே தவிர, வேறொன்றுமில்லை.

பா.ஜ.க.வின் எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய
ஒரு கருவியாகப் பயன்படுகிறாரோ ஆளுநர்?

ஆகவே, ஆளுநர்மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கோபமோ, மற்றவையோ கிடையாது.

ஆளுநரும், பா.ஜ.க.வின் எண்ணத்தை நிறைவேற்றக் கூடிய ஒரு கருவியாகப் பயன்படுகிறாரோ, இப்பொழுது அரசியல் வேறு இடங்களில் இருந்து ராஜ்பவனுக்குள்ளே புகுந்து, அதன்மூலமாக முழுக்க முழுக்க எப்படியாவது பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.சினுடைய ஆதிக்க சூழ்நிலை வரவேண்டும் என்பதற்காக, 356 அடித்தளத்தை இப் பொழுது போட்டுக் கொண்டிருக்கிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

நேற்று வெளிவந்த ஒரு பத்திரிகையில் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் எழுதியிருக்கிறார், அதுபற்றி நேற்று நான் எழுதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன்.

முதலமைச்சராவதற்கு
என்ன தகுதி வேண்டும்?

யார் வேண்டுமானாலும் முதலமைச்சராக பதவி யேற்றுக் கொள்ளலாம். அதற்கு தகுதி என்னவென்றால்,

ஒன்று, இந்தியாவினுடைய குடிமகனாக, குடிமகளாக இருக்கவேண்டும்.

இரண்டாவதாக, 25 வயது நிரம்பியிருக்கவேண்டும்.

மேலவைக்குச் செல்லவேண்டும் என்றால் 30 வயது நிரம்பியிருக்கவேண்டும்.

173 ஆவது சட்டப் பிரிவுபடி,

குடிமகன் என்கிற உரிமை, வயது வரம்பு 25, மூன்றாவதாக, மனநலம் குன்றியவர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் சட்டத்தின் நிலை.
சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள்கூட முதலமைச்சராக வரலாம்.

அதற்கு பாண்டிச்சேரியே உதாரணமாகும். அது மட்டுமல்ல, நிறைய தலைவர்கள் அதுபோன்று வந்திருக்கிறார்கள். ராஜகோபாலாச்சாரியாரிலிருந்து, காமராசரிலிருந்து, ஜெயலலிதாவிலிருந்து எல்லோருமே அப்படி வந்திருக்கிறார்கள்.

அரசியல் சட்ட ஜனநாயகப்
படுகொலைக்கான வழியே!

ஆகவேதான், இப்பொழுது நடைபெறுவது முழுக்க முழுக்க இது டில்லி - மத்திய அரசு - கண்டும் காணாமல், எங்களுக்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லிக்கொண்டு, மீண்டும் தமிழ்நாட்டை காவி மண்ணாக்க பி.ஜே.பி.,க்கு ஒரு தளம் அமைப்பதற்கு நடக்கக்கூடிய அரசியல் சட்ட ஜனநாயகப் படுகொலைக் கான வழியே!

ஆகவே, அது கைவிடப்படவேண்டும் என்பது திராவிடர் கழகத்தினுடைய உறுதியான கருத்தாகும்.

நாங்கள் கூறியது சட்டப்படியான நிலையே!

செய்தியாளர்: தற்போது தி.மு.க. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறது; நீங்கள் சசிகலாவை ஆதரிக்கிறீர்கள்; வேறுபட்ட கருத்தாக அல்லவா இருக்கிறது?

தமிழர் தலைவர்: இதில் சசிகலா என்பது பிரச் சினையல்ல. நாங்கள் கூறியது சட்டப்படியான நிலையே!  பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறோம் என்று தி.மு.க. எங்கே சொன்னார்கள்? அவரை ஆதரிக்கிறோம் என்று தி.மு.க.வின் செயல் தலைவர் சொல்லவில்லையே!
எங்களைப் பொறுத்தவரையில் இவரா? அவரா? என்பது பிரச்சினையல்ல

செய்தியாளர்: சசிகலாவை தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறார்களே?

தமிழர் தலைவர்: எதிர்க்கட்டும்! தி.மு.க.வுக்கும் - இப்பொழுது நடக்கின்ற பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை. இது அரசியல் சட்டப்படி நடக்கவேண்டிய கடமை யாகும். எங்களைப் பொறுத்தவரையில் இவரா? அவரா? என்பது பிரச்சினையல்ல. தமிழ்நாட்டினுடைய அரசாங்கம் அரசியல் சட்டப்படி, ஜனநாயகப்படி, மக்களுடைய பிரதிநிதிகளாக பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யாரோ, அவர்களுடைய ஆட்சி நடைபெறவேண்டும்.

முழு காரணமும் ராஜ்பவன்தான்

செய்தியாளர்: சட்டமன்ற உறுப்பினர்கள் அனை வரையும் ஒரு ரிசார்ட்டில் அடைத்து வைத்து, நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் என்று சொல்லச் சொல்கிறார்களே, அவர்களை வெளியில் விட்டே சுதந்திரமாக இருக்கலாமே? எதற்கு அடைத்து வைக்கவேண்டும்?

தமிழர் தலைவர்: இதற்கு யார் காரணம்?

உங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறேன்; சட்டமன் றத்தை கூட்டி உங்களுடைய பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று சொன்னால், தானாக வந்துவிடப் போகிறார்கள்.

தாமதப்படுத்த, தாமதப்படுத்த இதுபோன்ற காரியங்கள் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கும். இதற்கு முழு காரணமும் ராஜ்பவன்தான்.

ஏனென்று கேட்டால், உடனடியாக அவர்களை அழைத்து, நாளை அல்லது  நாளை மறுநாள் பொறுப் பேற்றுக்கொண்டு ஒரு வாரத்திற்குள் உங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று உத்தரவு போடட்டுமே!

ஆகவே, நாம் அந்த வாதத்திற்குப் போகவேண்டிய அவசியமில்லை.

உடனே பத்திரிகையாளர்கள் என்ன எழுதுவார்கள்? வட மாநிலங்களில் எத்தனை பேரை தூக்கிக் கொண்டு போனார்கள் என்று பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் தீனியாக இருக்கலாம். இதற்குக் காரணம், ஆளுநர்தான்.

நோய் நாடி நோய் முதல்நாடிட வேண்டாமா?

செய்தியாளர்: மக்கள் ஆதரவு ஓ.பி.எஸ்.சுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால், தற்போது உள்ள எம்.எல்.ஏ.,க்களை சமூக வலைதளங்களில் மிகவும் கேவலமாகப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: சமூக வலைதளங்கள் எல்லா வகையானதும் இருக்கிறது. ஓர் அரசாங்கம் என்றால், அதற்கு அடிப்படை அரசியல் சட்டத்தைத் தவிர,

Extraneous consideration should not be creek in   மற்ற செய்திகளுக்கெல்லாம் நாம் போக ஆரம்பித்தோம் என்றால்,

செல்வாக்கு இருக்கா? இல்லையா? என்பதை, உறுப்பினராக இல்லாத ஒருவர் முதல்வர் பொறுப்புக்கு வரும்பொழுது, சசிகலா அவர்களே தேர்தலில் நின்றாக வேண்டுமே!

இப்பொழுது குதிரை பேரம் நடைபெறுவதற்கான வாய்ப்பை உண்டாக்கி, அதன்மூலம் சட்டம்- ஒழுங்கு இல்லை என்று சொல்லி, மறுபடியும் 356-க்கு தளம். அமைக்கும் நிலை. இதற்கு யார் காரணம் என்றால்,  முழுக்க முழுக்க பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். மறைமுகமாக பின்னணியில் இருந்துகொண்டிருக்கிறது. எனவேதான், நாளாக நாளாக பிணைக் கைதி என்று நீங்கள் சொல்கிறீர்களே, அதேபோன்றுதானே குதிரை பேரமும் நடக்கின்ற வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா?

இதற்கு அடிப்படையான குற்றவாளி யார்? நோய் நாடி நோய் முதல்நாடிட வேண்டாமா?  ஜனநாயகத்தில் எவ்வளவுக்கெவ்வளவு காலத்தை நீட்டிக் கொண்டு போகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு குழப்பங்கள் நடக்கப் போகிறது. அப்படி நடைபெறக்கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்து.

பா.ஜ.க.விற்கு இரட்டை வேடம் என்பது
சர்வ சாதாரணம்

செய்தியாளர்: பா.ஜ.க. 356 அய் பயன்படுத்தி ஆட்சியை கலைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்; அதேநேரத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த இல.கணேசன், சுப்பிரமணியசாமி ஆகியோர் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்; பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு சிலர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: பா.ஜ.க.விற்கு இரட்டை வேடம் என்பது சர்வ சாதாரணம். சில குரல் இப்படி ஒலிக்கட்டும்; சில குரல் அப்படி ஒலிக்கட்டும். நாங்கள் இப்படியும் சொல்லிக் கொள்ளலாம் என்று ஏற்பாடாகக்கூட இருக்கலாமே, இதற்கு அவர்கள் பெயர்போனவர்கள் ஆயிற்றே!
எதிர்க்கட்சியாக இருக்கின்றவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும்

செய்தியாளர்: தி.மு.க.விற்கு சாதகமான சூழல் இருக்கிறதா?

தமிழர் தலைவர்: தி.மு.க. ஆட்சி அமைக்க ஆளுநர் எப்பொழுது அழைக்க முடியும் என்று சொன்னால், ஏற்கெனவே இருக்கின்றவர்களைப் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சொல்லி, அப்படி அவர்கள் நிரூபிக்க முடியவில்லையானால்,  எதிர்க்கட்சியாக இருக்கின்றவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும். அப்படி எதிர்க்கட்சியினரை அழைப்போம் என்று சொல்லக்கூடிய வாய்ப்புகள் இப்பொழுது இருப்பதாகத் தெரியவில்லை.

நேற்று முன்தினம் வெளிவந்த சில செய்திகளில், தி.மு.க.வை ஆட்சி அமைக்க  அழைக்காமல், நேரிடையாக 356-க்குத்தான் போகப் போகிறார்கள் என்று வந்திருக்கிறது. அதுதான் வருத்தத்திற்குரிய ஒன்று.

நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட
சமூக விஞ்ஞானிகள்!

செய்தியாளர்: நீங்கள் பா.ஜ.க.மீது முழுக்க முழுக்க குற்றம் சுமத்துகிறீர்கள்; ஆனால், சசிகலா தரப்பினர் முழுக்க முழுக்க தி.மு.க.தான் காரணம் என்று சொல்கிறார்கள். பி.ஜே.பி.மீது அவர்கள் ஒருவர்கூட குற்றம் சுமத்தவில்லையே?

தமிழர் தலைவர்: இந்தக் கேள்வியை அவர்களிடம்தான் கேட்கவேண்டும். என்னுடைய கருத்தை நான் தெளிவாக சொல்கிறேன். ஏனென்றால், என்னுடைய கருத்தை முதலில் ஒப்புக்கொள்ளாதவர்கள் எல்லாம், இப்பொழுது ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக விஞ்ஞானிகள். சமூகத்தில் நடக்கக் கூடியதைப் பார்க்கக் கூடியவர்கள். எங்களுக்கு இனநலக் கண்ணோட்டம், பொதுநலக் கண்ணோட்டம், சமுதாய கண்ணோட்டம் - ஆகவே, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் பார்த்தால்தான் சரியாக இருக்கும். அவரவர்களுக்கு ஒவ்வொரு காரணம் இருக்கலாம். ஆகவே, இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடம்தான் கேட்கவேண்டும். அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

நடப்பது என்ன? நடக்கப் போவது எவ்வளவு பெரிய ஆபத்து? அதனை தடுக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம்.
- இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner