எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருஞ்சட்டைக் குடும்பத்தினரே -

மதுரைப் பொதுக்குழுவில் நமது தலைவர் அவர்கள் கூறியபடி - இனிவரும் காலத்தில் களப்பணிகள் களேபரமாக இருக்கத்தான் செய்யும்.

காவிகள் ஒரு பக்கம் தங்களின் கைவரி சையைக் காட்டத் துடிக்கின்றன. தமிழ்நாட்டிலோ ஜாதி வெறியைத் தூண்டி அரசியல் நடத்தலாம் என்று மனப்பால் குடிக்கும் போக்குகளும் மற்றொரு புறம்!

தாழ்த்தப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி குதிரை சவாரி செய்யலாம் என்று கருதுகிற குள்ள நரிகளும் உண்டு.

ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிடர் கழகம் இதனை அனுமதிக்காது - கண்டிப்பாக அனுமதிக்கவே அனுமதிக்காது.

தருமபுரி மாவட்டத்திலே ஜாதிவெறி நெருப்புக்குத் தாழ்த்தப்பட்டவர்கள் வாழ்ந்த குடியிருப்புகள் இரையாக்கப்பட்டு, அவர்களின் உடைமைகள் எல்லாம் சாம்பலாக்கப்பட்ட நேரத்தில் அடுத்த  பொழுது எப்படிப் போகும் என்று கைபிசைந்து கொண்டிருந்த நேரத்தில், நமது தமிழர் தலைவர் தலைமையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முடிந்த உதவிகளைச் செய்தவர்கள் நாம்.

அந்த ஜாதி வெறித் தீ அடுத்தடுத்துப் பரவி விடக் கூடாது என்று தீர்மானித்து, உடனடியாக தருமபுரியிலே ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கத்தையும், பொது மாநாட்டையும் நடத்தி, மக்கள் மத்தியில் ஜாதி எதிர்ப்பு, ஒழிப்பு உணர்வினை வளர்த்தோம்.

அதன் காரணமாக அந்தப் பகுதி அமைதித் தென்றலின் ஊட்டமாகக் காட்சியளித்தது.

இப்பொழுது சேதி - அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சிறுகடம்பூரில்  ஒடுக்கப் பட்ட சமூகத்தில் பிறந்த நமது சகோதரி நந்தினிக்கு இழைக்கப்பட்ட கொடூரம் - நமது பரம எதிரிகளுக்குக் கூட வந்துவிடக் கூடாது.

இந்து முன்னணி என்ற போர்வையிலே உலவி வந்த மிருகங்கள் அந்தப் பெண்ணை சின்னாபின்னப்படுத்திப் பாழுங் கிணற்றில் வீசியெறிந்தன.
அரசியல் கட்சிகளையும், சமூக அமைப்பு களையும் ஒன்று திரட்டி நமது கழகத் தோழர்கள் களம் அமைத்துப் போராடி காவல்துறையை ஓரளவு செயல்படுத்த வைத்தனர். ஆனாலும், இந்த ஜாதியக் கொடூரத்துக்கு மூளையாக இருந்த ஒரு ஆசாமி இன்னும் படகுக் காரில் உலா வந்து கொண்டுள்ளார். காவல்துறை ஏன் கைகட்டிக் கொண்டிருக்கிறது? இந்த மர்ம முடிச்சு  இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

அந்த செந்துறைப் பகுதி என்பது கழகக் கோட்டைக் கொத்தளம். தந்தை பெரியார் அவர்களின் புயல் வேகப் பிரச்சாரத்தால் எண் ணற்ற இளைஞர்கள் நம் இயக்கத்தை நோக்கி, அன்று மட்டுமல்ல - இன்றும்கூட எழுந்து நிற்கிறார்கள்.

ஜாதி ஒழிப்புப் போராட்டமான  சட்ட எரிப்புப் போராட்டத்தில் எண்ணற்றோர் கலந்துகொண்டு வெஞ்சிறை ஏகிய இலட்சிய வீரர்களின் பாசறை செந்துறைக் கோட்டம்.

தமிழ் மறவர் பொன்னம்பலனார் வீரநடை போட்ட பெரியார்  மண் இது.

அந்தக் கொள்கைப் பூமியிலே,  ஜாதி ஒழிப்பு மண்ணிலே வரும் 13 ஆம் தேதி திங்கள் மாலை மாபெரும் கவுரவக் கொலை என்னும் ஜாதி ஆணவ எதிர்ப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாடு எழுச்சியுடன் நடைபெற உள்ளது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே பங்கு கொள்கிறார்.

சென்னையில் இருந்துகூட வாகனங்களில் கழகக் குடும்பங்கள் புறப்படுகின்றனர்.

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், லால்குடி, பெரம்பலூர், அரியலூர், விருத்தாசலம் மாவட்டத் தோழர்களே,

வரும் திங்கள் மாலை நீங்கள் திரளவேண்டிய பூமி - கருஞ்சட்டைத் தீரர்கள் வீர உலா வந்த செந்துறை என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஜாதி ஒழிப்பு வீரர்கள் வீரநடை போட்ட பகுதியிலா ஜாதி நரிகளின் வாலாட்டம்? வாள் படை எனத் திரண்டது காண் கருஞ்சட்டைக் கடல் என காவிகளும், ஜாதி ஓநாய்களும் மருண்டோடத் திரள்வீர்! திரள்வீர்!! திரள்வீர்!!!

தொகுப்பு:
மின்சாரம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner