எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தஞ்சை, பிப்.13 டில்லிக்கு ஆதரவாக செயல்பட அ.தி.மு.க. எம்.பி.,க்களை இழுக்கும் நடவடிக்கைகள் திட்டமிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் சட்டசபையைப்பற்றி கவலைப்படவில்லை என்று செய்தியாளர் களிடம் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

தஞ்சையில் நேற்று (12.2.2017) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டமன்ற உறுப்பினர்களை

அடைத்து வைத்திருப்பதாக...

செய்தியாளர்: தமிழ்நாட்டினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?

தமிழர் தலைவர்:  ஆளுநர் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கு எவ்வளவு விரைவில் அறிவிக்கின்றாரோ, அவ்வளவு விரைவில் அவர்கள் வந்து சந்திக்க வேண்டிய கடமை தானாகவே வந்துவிடும். அவர்களைப் பொறுத்தவரையில், தொலைக்காட்சிகளில், அவர்களில் பலர் நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அங்கே சென்று கூட்டம் நடத்துகிறார்கள்; வெளியில் வந்து பேசுகிறார்கள். ஆகவே, அந்தக் குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்பதை அவர்களே தெளிவுபடுத்துகிறார்கள். இதனை முழுமையாகத் தெளிவுபடுத்தப்பட வேண்டுமானால், அந்தப் பொறுப்பு முழுக்க ஆளுநர் கையில்தான் இருக்கிறது என்பது எங்களைப் போன்றவர்களுடைய கருத்தாகும்.

நேற்றே நான் அறிவித்திருக்கிறேன், சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கின்றவர்கள் யாரோ  - அல்லது அவர் யாரை அழைக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ அவரை உடனடியாக அழைத்து, மேலும் மேலும் தாமதப்படுத்தாமல், அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், எம்.எல்.ஏ.,க்கள் சட்டமன்றத்திற்கு வரவேண்டிய இயல்பான நிலை தானே வந்துவிடும். அப்பொழுது அடைத்து வைக்கின்றார்களா? இல்லையா? என்கிற பிரச்சினை இருக்காது.

இவ்வளவு அசிங்கங்கள் நடக்கக் கூடாது

செய்தியாளர்: யார் தமிழகத்திற்கு முதலமைச்சராக வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்:   என்னுடைய கருத்து, யார் வரவேண்டும் என்பதல்ல; சட்டப்படி என்ன நடக்கவேண்டும் என்பது, குதிரை பேரம் நடக்கக்கூடாது என்பதுதான். தமிழ்நாட்டில் இவ்வளவு அசிங்கம் நடக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கவலை. இதுவரையில் வடநாட்டில் தான் ஆயராம் - காயாராம், காலையில் இங்கே இருந்தார்; 11 மணிக்கு அங்கே சென்றார், மீண்டும் 12 மணிக்கு இங்கே வந்திருக்கிறார் என்பது இருக்கும்.

இதுவரையில் வாழ்க்கைதான் நிலையாமை என்று சொன்னார்கள். சட்டசபை பதவி இருக்கிறது பாருங்கள், யார் எங்கே இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே புரியவில்லை என்கிற நிலைமை இருக்கிறதே, தமிழ்நாட்டினுடைய அரசியலில் இந்த அவமானம் அரங்கேற்றப்படக் கூடாது. அதற்கு முழுக்க முழுக்கக் காரணம், டில்லியினுடைய பின்னணிதான்.

அண்மையில் எனக்குக் கிடைத்த செய்தி, அவர்களைப் பொறுத்தவரையில், இப்பொழுது இருக்கக்கூடிய அ.தி.மு.க.வினுடைய எம்.பி.,க்களில் பெரும் பாலானவர்களை மத்திய ஆட்சிக்குச் சாதகமாக உருவாக்கவேண்டும். பட்ஜெட் செஷன் வருகின்ற நேரத்தில், அதற்கு ஆதரவாக இருக்கவேண்டும். ஒருவேளை தங்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கக் கூடிய சூழ்நிலை இல்லை  என்பதற்காக, எவ்வளவு விரைவில், எம்.பி.,க்களை இழுக்கவேண்டுமோ, அவ்வளவு தூரம் செய்யுங்கள் என்று கட்டளை  அவர்களுக்கு இடப்பட்டிருக் கிறது. அந்தக் கட்டளைதான் இப்பொழுது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. சட்டமன்றத்தைப்பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படவில்லை.

இவ்வாறு செய்தியாளர்களின் கேள்விகளுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பதிலளித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner