எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய பி.ஜே.பி. ஆட்சியின்  சித்து விளையாட்டுகள் தொடர இடமளிக்கக்கூடாது!

எக்காரணம் கொண்டும்  356-க்கு இடம் இருக்கக்கூடாது

அ.தி.மு.க.  பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால்

எதிர்க்கட்சித் தலைவரையே (தி.மு.க.) ஆளுநர் அழைக்கவேண்டும்!

 

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட கருத்து

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (14.2.2017) வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், மேற்கொண்டு செய்யப்பட வேண்டியது என்ன என்பது குறித்தும்,எக்காரணம் கொண்டும் 356-க்கு இடம் இருக்கக்கூடாது என்றும், அ.தி.மு.க. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், எதிர்க்கட்சித் தலைவரையே (தி.மு.க.) ஆளுநர் அழைக்கவேண்டும் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மறைந்த தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் - பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா - நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கினார்.

அன்று தண்டனை

செல்வி ஜெயலலிதாவிற்கு ரூ. 100 கோடி, சசிகலா உள்ளிட்டோருக்கு ரூ. 10 கோடி அபராதமும் மேலும் விதிக்கப்பட்டது.(27.9.2014)

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கருநாடக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி குமாரசாமி அவர்களால் ஜெயலலிதா உட்பட நால்வர் மீதான தண்டனை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. (11.5.2015)

இந்தத் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் பேராசிரியர் க.அன்பழகன், சுப்பிரமணிய சாமி சார்பிலும் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல் முறையீட்டின் பேரால் நடைபெற்ற வழக்கில் விவாதங்கள் முடியப்பெற்று தீர்ப்பு தேதி குறிப் பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. (7.6.2016)

இன்றைய தீர்ப்பு

எட்டு மாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதியரசர் பினாஜி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் இன்று வழங்கிய தீர்ப்பில் - பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா 2014இல் வழங்கிய தீர்ப்பினை அப்படியே உறுதி செய்யப்பட்டுள்ளது.

அன்று நாம் கூறியது

இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்ட நேரத்தில் கீழ்க்கண்ட கருத்தினை தெரிவித்திருந்தோம்.

‘‘மயக்கமில்லா நீதிபதிகளும், விலை மதிப்பில்லாத கண்ணைக்கட்டிய நீதி தேவதையின் சரியான வார்ப்பு போன்ற நீதிபதிகள் நாட்டில் உள்ளனர் என்பதை நிரூபிக் கிறார்கள். நீதிபதி என்ற ஜனநாயகத்தின் மூன்றாம் தூண்கள் இன்னமும் பலமாக உள்ளன.

அதே நேரத்தில் மக்களின் ... நம்பிக்கை வீண்போக வில்லை என்பதையும் காட்டுவதாக நாடே அதிசயத்திலும், அதிர்ச்சியிலும் சூழ்ந்துள்ள வரலாற்றுத் தீர்ப்பாகவும்.  இத்தீர்ப்பு அமைந்துள்ளது’’ (விடுதலை 28.9.2014)  என்று குறிப்பிட்டு இருந்தோம்.

கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர் களால் வழங்கப்பட்ட தீர்ப்பின்போது கீழ்க்கண்ட கருத்தினை வெளியிட்டு இருந்தோம்.

“இந்தத் தீர்ப்பு கூட்டுத் தொகையைக் கூட மிக மோசமான அளவிற்கு தவறாகக் குறிப்பிட்டு, அந்தத் தவறான தொகையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியிருப்பதைப் பார்க்கும்போது, இந்தத் தீர்ப்பு முதலிலே ஒன்று எழுப்பப்பட்டு பின்னர் அவரே அவசர அவசர மாக மாற்றப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறவிதத்திலே தான் அமைந்துள்ளது. இதற் கெல்லாம் உச்சநீதி மன்றத்திலே தான் உண்மையான விளக்கம் கிடைக்க வேண்டும்.’’ (விடுதலை  12.5.2015) என்று குறிப்பிட்டிருந்தோம்.

அந்த விளக்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இன்று வெளிவந்திருக்கிறது என்று கருதுகிறேன் (விடுதலை 12.5.2015)

மறைந்த செல்வி ஜெயலலிதாவும் தண்டனைக் குரியவர் தான் என்பதை மறந்திடவோ, மறைத்திடவோ முடியாது - கூடாது! அம்மாவின் நல்லாட்சி என்று இனியும் கூறிக் கொண்டிருப்பது அசல் கேலிக்குரியது. ‘ஜெ-யின் ஆன்மா’ என்றெல்லாம் இனி பேசுவது பொருள் உள்ளதா? நாடக வசனமல்லவா?

கடந்த பல நாட்களாக தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் ஆட்சி  அமைப்பு நிருவாகச் சூழல் குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் நெளிந்தது. இன்று ஒவ்வொரு நாளும் வெளிவந்த தகவல்களும், நாட்டு நடப்புகளும், மெச்சத்தகுந்ததாக இல்லை என்பது தான் கசப்பான உண்மையாகும்.

திமுகவிற்கு கிடைத்த வெற்றி!

இந்த வழக்கினைத் தொடுத்து, அதில் இறுதியாக வெற்றி பெற்றவகையில் இந்த வெற்றிக்கான உரிமையைக் கோர திமுகவிற்கு கண்டிப்பாக உரிமையுண்டு; தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் தான் இந்த வழக்கைத் தொடர்ந்தவர் என்ற முறையில் - இந்தத் தீர்ப்பு தி.மு.க.வுக்கும், அதன் மூலம் நாட்டுக்கும் முக்கியமான திருப்பமே!

கடந்த சில நாட்களாக நிலவி வரும் இருளான சூழல் உடனடியாக அகற்றப்பட வேண்டும். ஆட்சி நிருவாகம் முற்றிலும் முடங்கிப் போய் விட்டது.

மத்திய அரசோ, அதன் பிரதிநிதியான ஆளுநரோ அரசியல் சடுகுடு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது.

அ.இ.அ.தி.மு.க.வின் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் காபந்து முதல் அமைச்சராகத் தொடர் கிறார். வி.கே. சசிகலா அவர்கள் அதிமுக சட்டமன்ற உறுப் பினர்களால் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டு அந்தத் தகவல் ஆளுநரிடமும் முறையாகத் தெரி விக்கப்பட்டு விட்டது.

அந்த சூழ்நிலையில், ஆளுநர்  வி.கே.சசிகலாவை  ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வி நாட்டில் பெரிதாகப் பேசப்பட்டது! அது ஒரு அரசியல் சட்டப்படியான சரியான நிலைப்பாடே!

இப்பொழுது அந்தக் கேள்விக்கும் இடமில்லை. அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்து, புதிதாக ஆளுநரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கட்டத்தின் சட்டத்தின் நிலை.

எடப்படி திரு.பழனிச்சாமி முதலமைச்சர் என்று தேர்வு பெற்றுள்ளார் என்ற தகவல் இப்பொழுது வெளி வந்துள்ளது. இப்பொழுது அ.இ.அ.தி.மு.க.வில் இரு முதலமைச்சர்கள் என்ற போட்டி ஆரம்பமாகிவிட்டது.

ஒற்றுமையாக இருந்து அ.இ.அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் செயல்படுவார்களா? அல்லது ஏற்கெனவே  அ.இ.அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவின் காரணமாக அத்தகைய முடிவினை எடுக்க முடியாத நிலை - சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்குறி முக்கியமானதே.

இந்த சந்தர்ப்பத்தை மத்திய பிஜேபி அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள (கடந்த சில நாள்களாக அதனைத் தானே செய்து கொண்டு வந்தது) வேறு வகையான திருவிளையாடல்களில் ஈடுபடப் போகிறதா என்பதை உன்னிப்பாக திராவிட இயக்க அரசுகள் கட்சிகள் கவனித்துத் தக்கதோர் முடிவினை எடுக்க வேண்டும். குதிரைப் பேரங்களுக்கு இடம் அளிக்கக்கூடாது.

நேற்று சென்னையில் கூடிய திமுக உயர் மட்டக் குழுவில்கூட, மத்திய பா.ஜ.க. அரசின் கெடுபிடித் தந்திரத்தில் தமிழக ஆளுநர் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்ற குற்றச்சாட்டினையும் பதிவு செய்துள்ளது மிகச் சரியான கருத்தாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து சட்டப்படியான அடுத்த கட்ட நடவடிக்கை உடனடியாகத் தொடரப்பட வேண்டும். இதுதான் நாடு எதிர்பார்ப்பதும் ஆகும்.

வெறும் கட்சிப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அதனையும் கடந்து நாட்டு மக்கள் பிரச்சினை என்பதே முக்கியமானது.

இந்தப் பிரச்சினைகளின் அசைவுகளை திமுக நுட்பமாகக் கவனித்து உரிய காலத்தில், திராவிட இயக்கப் பார்வையில் உரிய முடிவை எடுக்கும் - எடுக்கவேண்டும்.

எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் 356 பாய இடம் அளிக்கக்கூடாது.

இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கும் நிலையில், மறுபடியும் ஒரு தேர்தல் என்பது தேவையில்லாதது - சிரமமானது - சுமையானது  - பொருள் நட்டமானது என்பதே நமது கருத்து.

ஜனநாயக முறைப்படி, அ.தி.மு.க.வில் இந்த இரு பிரிவினர் எண்ணிக்கை மட்டுமல்ல, நிலையான ஆட்சி அமையாது என்ற தெளிவு ஆளுநருக்கு வருமேயானால், எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரான (தி.மு.க.) திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதே அரசியல் சட்ட நடைமுறைப்படி சரியான நிலைப்பாடாக இருக்கும் - இருக்கவும் வேண்டும்.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் தன்மையில் சட்டமன்றத்தை முடக்குவது போன்ற ‘சித்து’ வேலையில்  மத்திய அரசு ஈடுபட அனுமதிக்கக் கூடாது - கூடவே கூடாது.

 

கி.வீரமணி       
தலைவர்,    திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner