எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னையில்  மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை 2017 விளக்கக் கூட்டம்

"நிதிநிலை அறிக்கையில்  கல்விக்கான ஒதுக்கீடு குறைந்து வருவது

கல்வி மறுக்கப்படும் மனு (அ) தர்ம நிலையின் பிரதிபலிப்பே"

தமிழர் தலைவர் புள்ளி விவரத்தினை எடுத்துக்காட்டி உரையாற்றினார்!

சென்னை, பிப்.16 சென்னையில் நேற்று (15.2.2017) எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை 2017 பற்றிய விளக்க கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் மேலாண்மைக் கல்விப் புலனும், எக்ஸ்பிரஸ் அவென்யூவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்திற்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி. வீரமணி தலைமை வகித்தார். கலந்தாய்வு அமர்விற்கு வரியியல் அறிஞர் எஸ். இராஜரத்தினம் தலைவராக இருந்து நடத்தினார். வழக்கறிஞர் பி. ரமணகுமார் விளக்கவுரை ஆற்றினார். எஸ். இராஜரத்தினத்தின் தலைவர் உரைக்குப் பின்னர் வருகை தந்தோர் எழுப்பிய கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதிலிறுத்தனர்; விளக்கமும் அளித்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை எக்ஸ்பிரஸ் அவென்யூவின் முதன்மை நிதி அலுவலர் ஆர்.ஆர்.அருண்குமார் வரவேற்றுப் பேசினார். தமிழக மூதறிஞர் குழுவின் துணைத் தலைவர் முனைவர் இ. சுந்தரராஜுலு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சி முழுவதையும் கணக்காயர் அர. இராமச்சந்திரன் தொகுத்து அளித்தார்.

ஆசிரியர் கி. வீரமணி

சென்னை - எக்ஸ்பிரஸ் அவென்யூவில் அமைந்துள்ள மின் - விடுதியில் (E-Hotel) மாலை 5.45 மணிக்குத் தொடங்கிய மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை 2017 பற்றிய விளக்க - கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆசிரியர் கி. வீரமணி தனது தலைமை உரையில் குறிப்பிட்டதாவது:

மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2017ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கை இரண்டு மாறுதல்களைக் கொண்டது. ஒன்று: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும் நிதி நிலை அறிக்கை இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது. மற்றொன்று: இதுவரை ரயில்வே நிதி நிலை அறிக்கை தனியாக, ரயில்வே அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு வந்த முறையினை மாற்றி பொது நிதிநிலை அறிக்கையிலேயே ரயில்வே நிதிநிலை அறிக்கையினையும் சேர்த்து நிதிநிலை அறிக்கை 2017 சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வரவு - செலவு பட்டியல் அல்ல!

நிதி நிலை அறிக்கை என்பது அரசின் வரவு - செலவு பட்டியல் அல்ல; அரசின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு கருவியே நிதிநிலை அறிக்கை ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சொல்லப்பட்டிருக்கின்ற சமூக, பொருளாதார, அரசியல் நீதி வழங்கலை குடி மக்களுக்கு உறுதி செய்திட வேண்டும் என்ற நிலையில் அத்தகைய நீதி  வழங்கலை குடிமக்களுக்கு அளிக்கின்ற நோக்கத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியது நிதி நிலை அறிக்கையாகும். அரசிற்கு வருமானத்தை அதிகரிக்கின்ற வழிமுறையினை தெரியப்படுத்துகின்ற வகையில் நிதி நிலை அறிக்கை இருந்திட வேண்டும்.

நாட்டின் பொருளாதார நிலையினை உயர்த்துவதற்கு, உள்நாட்டின் மொத்த உற்பத்தியில் வளர்ச்சித் துறைகளின் பங்களிப்பு எவ்வளவு உள்ளது என்பதை அளவுகோலாக ஆய்வாளர் கருதுவர்.

நாடு விடுதலை அடைந்த பொழுது உள்நாட்டின் மொத்த உற்பத்தியில் (Gross Domestic Products) வேளாண்மையின் பங்களிப்பு 65 விழுக்காடாக இருந்தது. ஆனால் தற்பொழுது (2017) 17 விழுக்காடாக குறைந்துள்ளது. தயாரிப்புத் துறையின் பங்களிப்பு 1947 ஆண்டில் இருந்த 25 விழுக்காடு நிலையிலிருந்து தற்பொழுது 15 விழுக்காடாக குறைந்துள்ளது. சேவைத் துறையின் பங்களிப்பு 10 விழுக்காட்டு நிலையிலிருந்து 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

வேளாண்மை வளர்ச்சிக்கான வழிமுறைகள் இல்லை

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50-60 விழுக்காட்டினர் வேளாண்மைத் தொழிலில்  ஈடுபட்டுள்ள சூழலில் வேளாண்மைத் துறையின் பங்களிப்பு குறைந்து கொண்டு வருவது உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க முடியாது. நிதிநிலை அறிக்கையினை சமர்ப்பித்த நிதி அமைச்சர் வேளாண்மை மூலம் வருகின்ற வருமானம் இரட்டிப்பு நிலையினை எட்டும் என அறிவித்துள்ளார். ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்படவில்லை.

நாட்டின் மொத்த செலவீனங்களில் 85 விழுக்காடு சம்பளம், நிறுவனம் சார்ந்த செலவுகளுக்கே சென்று விடுகிறது. மீதமுள்ள 15 விழுக்காடுதான் உண்மையான வளர்ச்சித் திட்டங்களுக்குப பயன்படுவதாக உள்ளது. அரசு உறுதியளிக்கும் எல்லா திட்டங்களுக்கும் இந்த 15 விழுக்காடு செலவீன ஒதுக்கீடு எப்படி போதுமானதாக இருக்க முடியும்?

கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து வரும் நிலை

கடந்த மூன்று ஆண்டுகளில் கல்விப் புலனுக்கான நிதி ஒதுக்கீட்டுச் செலவு குறைந்து கொண்டே வருகிறது. நாட்டு மக்களில் ஆறரைக் கோடியினர் பள்ளிக் கூடத்திற்கே படிக்கச் செல்லாதவர்களாகத்தான் உள்ளனர்.

2013-2014ஆம் ஆண்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 4.57 விழுக்காட்டிலிருந்து நடப்பு ஆண்டில் 3.65 விழுக்காடாக குறைந்துள்ளது. நிதி ஒதுக்கீடு பண அடிப்படையில்  கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புள்ளி விவர தோற்றப் பிழையே தவிர உண்மையான உயர்வு அல்ல. காரணம் கூடுதலான பண மதிப்பின் அளவு பண வீக்க 5-6 விழுக்காடு  அளவிலேயே உள்ளதால் சரியான பண மதிப்பின் அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு என்பது இல்லவே இல்லை என்பதுதான் உண்மையான நிலையாகும்.

பள்ளிப் படிப்பிற்கு சேர்ப்பிக்கப்படும் மாணவர் விகிதம் (Gross Enrolment  Ratio) உயர்கல்வி பயில வரும் நிலையில் பாதியாகக் குறைந்து விட்டது. கல்வி கற்கும் நிலை பெருகுவதால் குற்றம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும். ஒரு கல்வி கூடத்தை திறப்பது ஒரு சிறைச்சாலையினை மூடச் செய்திடும் செயலாகவே கருதப்பட

வேண்டும். கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து வரும் நிலையில், உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கையினை குறைத்திடும் அறிக்கையாக மத்திய நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது. இத்தகைய போக்கு கல்வி  மறுக்கப்படும் மனு(அ)தர்ம நிலையினை பிரதிபலிப்பதாக உள்ளது.

வங்கிகள் சீர்குலையும் சூழல்

வங்கித் துறையினைப் பொறுத்தவரை வாராக் கடன் விகிதம் பெருகிக் கொண்டே வருகிறது. வங்கிகளின் மூலதன ஆதாரம் குறைந்து கொண்டே வருகிறது. அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும் சேர்த்து ரூ.10,000/- கோடியினை அரசினர் மூலதன பங்களிப்பு என அறிவித்து உள்ளனர். "யானை பசிக்கு சோளப் பொறி" என்பதற்கு ஒப்பானதே! பொதுத் துறை வங்கிகள் சீர்குலைந்துவிடும் சூழலை உருவாக்கலாமா?

2016 நவம்பர் 8ஆம் நாள் அமலாக்கத்திற்கு வந்த பண மதிப்பு நீக்க (Demonetisation) நடவடிக்கைகளால் மக்களுக்கு தேவையற்ற அல்லல்கள் பெருகியதுடன் வங்கி வழங்கி வரும் உரிய வங்கிச் சேவைகளை விடுத்து மதிப்பு நீக்க பண மாற்றம், பணம் செலுத்தும் பணிகளே பெருகின. மத்திய அரசு எதிர்பார்த்த அளவில் கருப்புப் பணமும் வெளி வரவில்லை.

நிதிநிலை அறிக்கை வெளியீட்டில் சமூகத்தில் நிலவி வரும் சமத்துவமற்ற போக்கினை நீக்கிடும் அறிவிப்புகளும், தங்களுக்கு உரிய அளவைவிட அபரிமிதமாக வருமான வசதிகளை அனுபவிப்போர் செயலினை மட்டுப்படுத்துகின்ற வழிமுறைகளும் வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவைபற்றி எதுவும் இல்லாத நிலையில் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை 2017, மக்களை ஏமாற்றிடும் ஓர் அறிக்கையே!

- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி தமது உரையில் குறிப்பிட்டார்.

வழக்கறிஞர் பி. இரமணகுமார்

நிதி நிலை அறிக்கை விளக்கவுரை ஆற்றிய வழக்கறிஞர் பி. இரமணகுமார் பேசும்பொழுது குறிப் பிட்டதாவது:

நிதி நிலை அறிக்கை என்பது அரசின் கருவூலத்திற்கு பண வரவை வரி வருவாய் மூலம் அதிகமாகக் கொண்டு வரவேண்டும். வரி செலுத்த வசதி உள்ளோரிடமிருந்து வரி வருவாயைப் பெருக்கிட வேண்டும். வரி செலுத்த வசதி குறைந்தோரிடம் வரிச் சுமையினைக் குறைத்திடும் வகையில் நிதி நிலை அறிக்கை அமைந்திட வேண்டும். மத்திய அரசின் 2017 நிதி நிலை அறிக்கை இந்த வழிமுறைக்கு மாறான அறிவிப்புகளை உள்ளடக்கியதாக வெளி வந்துள்ளது.

நாட்டு மக்கள் தொகையான 125 கோடிப் பேரில் 3-4 கோடிப் பேர் வருமான வரி கட்டி அறிக்கை தாக்கல் செய்பவர்களாக உள்ளனர். இப்படி வரி கட்டி அறிக்கை தாக்கல் செய்பவர்களில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5-6 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் பெரும் பகுதியினராக உள்ளனர். 2017 நிதி நிலை அறிக்கையின்படி ரூ.2.5 லட்சம் - ரூ.5 லட்சம் வருமான வகையினருக்கு வருமான வரி விகிதம் 10 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த  வரி குறைப்பால் வருமான வரி கட்டி அறிக்கை தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். இப்படி வருமான வரி விகித குறைப்பைவிட வருமான வரி கட்டுவதில் சில சலுகைகளை மட்டும் அறிவித்திருந்தால் அரசுக்கு வரும் வருமான வரியின் அளவு குறைந்திடாமல் இருக்கும்.

வீட்டுக் கடன்களின் வட்டிக்கு வேறுபடுத்தப்படாத வரி விலக்கு

குடி மக்களின் வாழ்நிலை தரம் என்பது ஒவ்வொருவருக்கும் குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு முக்கியம். குடியிருக்க வீடு கட்டுவதற்கும், வாடகைக்கு விட வீடு  கட்டுவதற்கும் நிறுவனங்களின் மூலம் கடன் வழங்கப்படுகின்றன. அந்த வீட்டுக் கடன்களுக்கு பற்று வைக்கப்படும்  வரியில் ரூ.2 லட்சம் வரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இப்படி வரி விலக்கு அளிப்பதில் குடியிருக்கக் கட்டப்படும் வீட்டுக் கடனுக்கும், வருமானம் தரவல்ல வாடகைக்கு விடப்படும் வீட்டுக் கடனுக்கும் விதிக்கப்படும் வரி விலக்கில் வேறுபாடு காட்டப்பட வேண்டும். அத்தகைய அம்சங்கள் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏதும் இல்லை.

அறக்கட்டளைகளுக்கு புதிய விதிமுறைகள் அமல்

வணிக அடிப்படையிலான நிறுவனங்களிலிருந்து சேவை வழங்கிடும் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்டு வந்த வரி விதிப்பில் இதுவரை இருந்து வந்த வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளது. மேலும் வருமானம் குறித்து வழங்கப்படும் துறை சார்ந்த அதிரடி சோதனையானது.  இதுநாள் வரை அறக்கட்டளைகளுக்கு  இல்லாத நிலை  அறக்கட்டளைகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக ரூபாய் மூன்று லட்சத்திற்கு மேலுள்ள நிதி நடவடிக்கைகள் பணமாக மேற்கொள்ள இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  அறக்கட்டளைகளுக்கு இதுவரை ரூ.10 லட்சம் வரை வழங்கப்பட்ட நன்கொடைகள் வருமான வரி விதி விலக்குக்கு உரியனவாக இருந்தன. இப்பொழுது ரூ.2000த்திற்கு அதிகமான நன்கொடை பெறும் பொழுது அதை பணமாகப் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கட்டி அறிக்கை தாக்கல் செய்வது தாமதமானால் அபராதமாக ரூ.5000/- பணம் கட்டிட வேண்டும் என்பது தற்போதைய நிலை. இது மொத்த அபராதம் என்ற நிலையிலிருந்து தாமதக் கட்டணம் என 31 டிசம்பருக்குள் தாக்கல் செய்தால் வசூலிக்கப்படும். அதற்கு மேல் தாமதமானால், அபராதத் தொகையாக ரூ.10,000/- விதிக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் மாற்ற அறிவிப்புகள் வந்துள்ளன.

வேளாண்மை உள்பட வளர்ச்சிக்கான வங்கிக் கடன் வழங்குதல் அதிக அளவில் அறிவிக்கப்பட் டாலும், கடன் வழங்குவதில் வங்கிகள் கடைப்பிடிக் கப்படும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு - எளிமைப் படுத்தப்பட்டால்தான் வங்கிக் கடன்கள் பரவலாக பெரும்பாலோருக்கும் சென்று சேரும். இதற்கான அறிவிப்புகள் நிதி நிலை அறிக்கையில் ஏதும் இல்லை.

- இவ்வாறு வழக்கறிஞர் பி. ரமணகுமார் உரை யாற்றிடும் பொழுது குறிப்பிட்டார்.

வரியியல் அறிஞர் ச. ராஜரத்தினம்

கலந்துரையாடல் அரங்கிற்கு தலைவராக இருந்த வரியியல் அறிஞர் ச. இராஜரத்தினம் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

கடந்த மூன்று மாதங்களாக பொது மக்களை அலைக்கழித்து, அல்லல்படுத்தி வரும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையைப் பற்றிய ஒரு  அறிவிப்புகூட நிதி நிலை அறிக்கையில் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது; கண்டனத்திற்கும் உரியது. கணக்கில் கொண்டு வரப்பட்ட அதிக மதிப்பு நோட்டுப் பணத்தின்  அளவையும் கணக்கிட்டு நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு இருந்தால் பல முன்னேற்றத் திட்டங்களை  இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருக்க முடியும்.

மக்கள் நலம் இல்லாத வளர்ச்சிப் புள்ளி விவரங்கள்

மக்களின் நலம் சார்ந்த முன்னேற்றத்தினை பிரதிபலிக்காத வெறும் பொருளாதார வளர்ச்சிபற்றிய பல புள்ளி விவரங்களால் ஆகப் போவது ஏதும் இல்லை. உணவுப் பாதுகாப்பு பற்றிய எந்த உத்தரவாதமும் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. அனைவருக்கும் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி பற்றிய குறிப்பு அறிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும். நாட்டு வேளாண்மைக்கு அடிப்படையான பாசனநீர் தேவையினை உறுதிப்படுத்த நதிகளை இணைக்கும் கொள்கை வடிவு முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த நிதி மசோதாவில் 87 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன - நிதி வரையறை, கால வரையறை சார்ந்த இந்த திருத்தங்களால் விளிம்பு நிலை மாற்றங்களே ஏற்படும். நேர்முக வரி விதிப்பில்  பொருத்தமற்ற கொள்கையே நீடிக்கிறது.  1962, 1975, 2012, 2013 மற்றும் 2016 ஆண்டிலிருந்து முன் தேதியிட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் முன் தேதியிட்ட வரிவிதிப்பு ஏதும் வலியுறுத்தப்படவில்லை.

- இவ்வாறு ச. இராசரத்தினம் தமது உரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

வல்லுநர்கள் உரையாற்றிய பின்னர் வருகை தந்தோர், நிதி நிலை அறிக்கை, நாட்டுப் பொருளாதார நிலை, பண மதிப்பு  நீக்க நடவடிக்கைகள், வங்கிகளின் செயல்பாடுகள் பற்றி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதிலிளித்தனர்.

நிகழ்ச்சிக்கு பல தரப்பினரும் - வரியியல் பயிற்சிப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணாக்கர்கள், வரியியல் கணக்காளர்கள், கல்வியாளர்கள், பொது நல நோக்காளர்கள், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், தமிழக மூதறிஞர் குழுவினர், திராவிடர் கழகத் தோழர்கள் என மிகப் பலரும் வருகை தந்து வல்லுநர்கள் வழங்கிய நிதி நிலை விளக்க உரையினை கேட்டறிந்தனர். திட்டமிட்டப்படி நிகழ்ச்சி  2 மணி நேரம் நடைபெற்று  நிறைவடைந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner