எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (18.2.2017) நடைபெற்ற அமளிகள் வரலாற்றில் தீராத கறையை ஏற்படுத்திவிட்டன. இதுவே கடைசியாக - வெட்கப்படத்தக்க நிகழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று காலை தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தீராத கறையாகும்.
எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று துவக்கத்தில் கூறப்பட்ட நிலையோடு தி.மு.க. நின்றிருந்தால், இவ்வளவு மனவேதனையும், வெட்கப்படத்தக்க, தி.மு.க.வின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டிருக்காது.

சபாநாயகர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் உரியதாக இல்லவேயில்லை. வெட்கமும், வேதனையும் பட வேண்டிய தலைகுனிவான நிலையும்கூட!

இதற்கு முன்பு அறிவித்த நிலைப்பாட்டிற்கு மாறான நிலைப்பாட்டில் சிக்கிக் கொண்டதால், இதற்குமுன் காக்கப்பட்ட அதன் மாண்பு குலைந்துள்ளது

இந்தக் கட்டத்தில் முதிர்ந்த தலைவர் கலைஞர் சபையில் இருந்து வழி நடத்த இல்லாததால் ஏற்பட்ட நிலைமை இது என்று பளிச்சென்று விளங்கியது. என்றாலும், பா.ஜ.க.வின் முயற்சிகள் தோல்வியைச் சந்தித்ததோடு, ஆர்.எஸ்.எஸ். கனவான திராவிட ஆட்சி இல்லாத தமிழகம் என்ற வசனமெல்லாம் பொய்யாக்கப்பட்டு விட்டது!
அரசியல் சட்டத்தில் இல்லாதவற்றையெல்லாம் போலியான நிபந்தனைகளாக முன்வைத்தது சரியானதுதானா? மனு தர்ம யுத்தத்தில் முதல் கட்டம் முடிவுற்றது.

இனியாவது பா.ஜ.க. - தங்களின் சித்து விளையாட்டுகளை, பொம்மலாட்டங்களை தமிழ்நாட்டைப் பொறுத்து நிறுத்திக் கொள்வார்களாக!

122 உறுப்பினர்களைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அவரது அமைச்சரவைக்கும் நமது வாழ்த்துகள்!

நடந்தவைகள் நடந்தவைகளாகட்டும் - இனி நடப்பவைகளாவது நல்லவைகளாக நடக்கட்டும் என்று அண்ணா கூறிய கருத்தை நினைவூட்டுகிறோம்.

இப்பொழுது நடந்ததே கடைசியானதாக இருக்கவேண்டும் என்பதே நமது அன்பான வேண்டுகோள்.

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

18.2.2017
சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner