எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடந்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ உள்ளிட்ட மசோதாக்கள் சட்டமாக்க குடியரசுத் தலைவர் - பிரதமரை நேரில் சந்தித்து

புதிய தமிழக முதலமைச்சர் வற்புறுத்தவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள  அவசர முக்கிய வேண்டுகோள் அறிக்கை

சட்டப்பேரவையில் நடந்தவை வரலாற்றில் தீராத கறையே! இதுவே கடைசியாக இருக்கட்டும்!  - கி.வீரமணி

கடந்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட  ‘நீட்’ உள்ளிட்ட இரண்டு மசோதாக்களை சட்டமாக்க தமிழக முதலமைச்சர் அவர்கள், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்து சட்டமாக்குவதற்கு வற்புறுத்தவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தமிழக அ.தி.மு.க. அரசுக்கும், புதிய முதலமைச்சருக்கும் அவசர முக்கிய வேண்டுகோள் இது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல்

பெறப்பட்டாக வேண்டும்

சென்ற மாதம் அ.தி.மு.க. அரசில் ஆளுநர் தொடங்கிய சட்டமன்றத் தொடரில், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி களுக்கான மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ என்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் - தமிழக அரசின் கொள்கை முடிவையொட்டி, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரின் ஆதரவினையும் பெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கான இரு மசோதாக்களும் முழுமை பெற்று சட்டமாக செயல்பட குடியரசுத் தலைவரின் (மத்திய அரசின்) ஒப்புதல் (Assent) பெறப்பட்டாக வேண்டும்.

மார்ச் மாதம் (‘நீட்’) நுழைவுத் தேர்வு மனு போடு தலுக்கான காலம் என அறிவிப்பு வந்துவிட்டதால், தமிழ்நாட்டுப் பெற்றோர்களின் மனநிலை மிகவும் கொதி நிலை போல் உள்ளது!

தமிழக அரசின் முதலமைச்சரின்

அவசரக் கடமை

நமது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அத்துணை முயற்சிகளையும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் முதலமைச்சர் செய்யவேண்டியது அவச ரக் கடமையாகும்.

இந்த அரசுகள் - அசாதாரண அரசியல் நிலையால் அரசுப் பணிகள் கடந்த சில வாரங்களாக முடங்கிய நிலையே தொடர்ந்தது.

எதிர்க்கட்சித் தலைவர்

மு.க.ஸ்டாலின் கடிதம்

எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு ‘‘‘நீட்’ மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வி லிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும், தமிழக அரசின் கொள்கை முடிவினையொட்டி நிறைவேற்றியுள்ள சட்டத்திற்கு, மத்திய அரசின் ஒப்புதலை - அதாவது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தர ஆவன செய்தல் வேண்டும்‘’ என்று கடிதம் ஒன்றை சென்ற வாரம் எழுதி, அதனை நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி என்.சிவா அவர்கள் நேரில் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து கொடுத்து வற்புறுத்தியுள்ளார்!

முன்னுரிமையுள்ள அவசரப் பணி

நேற்று (18.2.2017) தமிழக சட்டமன்ற முடிவுக்குப் பின் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அருகில் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்த புதிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள், தமிழ்நாட்டிற்கு மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நிறைவேற்றிய இரண்டு சட்டங்களுக்கு ஒப்புதலை குடியரசுத் தலைவர் தர ஆவன செய்வதே முன்னுரிமையுள்ள அவசரப் பணி என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

சமூகநீதிக் கண்ணோட்டத்திலும் தேவை

1. கல்வி பொதுப் பட்டியலில் (concurrent list)  இருப்பதால், நமது தமிழ்நாடு விலக்குக் கோரி தனியே இரண்டு சட்டங்களை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது - நமது மாநில அரசுக்குள்ள சட்டப்படியான உரிமையாகும்.

2. இது தமிழக அரசின் கொள்கை முடிவு (Policy Decision)

என்பதால், நீதிமன்றங்கள்கூட இதனை செல்லாது என்று சொல்ல முடியாத நிலையும் நமக்கு வலிமையாக உள்ளது.

3. கிராமப்புற மாணவர்கள் டாக்டர்களாக வருவதற்கு இந்த சட்ட விலக்கு மிகவும் இன்றியமையாதது என்பது சமூகநீதிக் கண்ணோட்டத்திலும் தேவையாகும்.

நேரில் சென்று வற்புறுத்துக!

எனவே, புதிய முதலமைச்சர் கடிதம் எழுதுவதோடு நிறுத்திவிடாமல், புதுடில்லிக்கே நேரில் சென்று, பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியவர்களைச் சந்தித்து நேரிலும் வற்புறுத்தி விரைந்து ஒப்புதல் பெற்று, தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் - மாணவர்கள் ஆகியோருக்கு நிம்மதியை உருவாக்கவேண்டும்.

அவசரம்! அவசரம்!!

- கி.வீரமணி

 

தலைவர்,     திராவிடர் கழகம்.

சென்னை
19.2.2017


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner