எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கும் - நீதிமன்றத் தீர்ப்புக்கும் விரோதமாக

(இந்துக்) கடவுளின் சிலையைத் திறக்க கோவை வரும்

பிரதமர் மோடிக்குக் கறுப்புக் கொடி! கறுப்புக் கொடி!!

கோவை மண்டல கழகக் குடும்பத்தினரே அலை அலையாகத் திரள்வீர்! திரள்வீர்!!

தமிழர் தலைவர்

ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

‘மீத்தேன்’ திட்டத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியதும் அதைக் கைவிட்டு  ‘புதிய அவதாரமான' ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதா?

இந்திய அரசின் மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும், நிலுவையில் இருக்கும் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கோவையில் இந்து மதக் கடவுள் சிலையைத் திறக்கவரும் பிரதமர் மோடி அவர்களுக்கு கோவை மண்டல மற்றும் சுற்றுவட்டார திராவிடர் கழகத்தின் சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

தடையின்மைச் சான்றுகள்

பெறவேண்டும்

ஈசா யோக பீடம் அமைந்துள்ள இக்கரை போளு வாம்பட்டி ஊராட்சி தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை 22.04.1990 தேதியிட்ட அரசாணை எண் G.O.M.S.No.44/1990-ன் மூலம் மலைதள பாதுகாப்புக் குழுமத்தின் அதிகார வரம்பின்கீழ் உள்ளது. இந்தப் பிரிவின்படி அனுமதியின்றி விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றவோ, 300 சதுர மீட்டருக்கு மேல் எந்தக் கட்டடங்களும் கட்டவோ கூடாது. புதிய லே-அவுட்டுகளை உருவாக்க முடியாது. மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனம், வருவாய், நகர் ஊரமைப்புத் துறை, பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரப் பிரிவு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வேளாண் பொறியியல், மின்சாரம், தீயணைப்பு, காவல், நெடுஞ்சாலை, உள்ளாட்சி, கனிம வளம் ஆகிய துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்றுகள் பெறவேண்டும்.

மாவட்ட ஆட்சியரின்

அனுமதி கட்டாயம்

இதே போன்ற நிபந்தனைகள் வீட்டுவசதி மற்றும் நகர் வளர்ச்சித் துறையின் 24.03.2003 தேதியிட்ட அரசாணை எண். G.O.M.S.No.49/2003  மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டுமான விதிகள் 1997-ன் விதி 25 பொதுப்பயன்பாட்டு கட்டுமானங்களுக்கு பஞ்சாயத்து செயல் அதிகாரி, நகர் ஊரமைப்புத் துறையின் ஆலோசனை இல்லாமல் அனுமதியளிக்கக்கூடாது என்கிறது. மேலும் விதி 4 (3) பொது வழிபாடு அல்லது மத பயன்பாட்டு கட்டடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயமாகும்.

ஆனால், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்குட் பட்ட மலைப்பகுதியை ஈசாவின் ஜக்கி எந்த ஒரு அனுமதியும் பெறாமல் மலைகள் அனைத்தையும் பெயர்த் தெடுத்து ஆயிரக்கணக்கனா சதுர அடியை ஆக்கிரமித்து விட்டார். இங்குள்ள கட்டடங்கள் மண்டபங்கள் எதுவும் மேலே குறிப்பிட்ட எந்த ஒரு அனுமதியையும் பெறாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட விரோத

கட்டுமானப் பணிகள்

இது குறித்து  பொதுமக்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் புகார்கள்  வந்ததைத் தொடர்ந்து நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர் 05.11.2012 தேதியிட்ட ந.க.எண்1866/2012/கோ.ம.4 ஆணையின் மூலம் சட்ட விரோத கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

அதனை மீறி கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டதால் 21.12.2012 தேதியில் அதே ந.க.எண் 1866/2012/கோ.ம. 4 எண்ணிலும், 26.11.2014 தேதியில் ந.க.எண் 661/2014/கோ.ம.4 எண்ணிலும் தியானலிங்கம், சிவபாடம் போன்ற அதன் சட்ட விரோத கட்டடங்களை மூடி முத்திரையிடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த இடத்தில் எந்த  செயற்கைக் கட்டடங்களும் எழுப்பக்கூடாது

மோடி திறக்கப்போகும் 112 அடி உயர ஆதியோகி சிலை எழுப்பும் இடத்திற்கும் சட்டப்படி எந்த ஒரு உரிமையும் கிடையாது, இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிகளின்படி அந்த இடத்தில் எந்த செயற்கைக் கட்டடங்களையும் எழுப்பக்கூடாது.

இப்பகுதியில் பாய்கிற நீலியாறு, நீலியணை, ராஜவாய்க்கால், 187 ஏக்கர் பரப்புள்ள உக்குளம் ஆகியவை அனைத்தும்  சில ஆண்டுகளில் மாயமாகியுள்ளன.

ஒலிமாசு ஏற்படாத அளவில் மகாசிவராத்திரி கொண்டாடப்பட வேண்டுமென உத்தரவு!

ஒவ்வொரு ஆண்டும் விடிய விடிய நடந்தேறும் ஈஷாவின் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் மேலெ ழும்புகிற ஒலிமாசு வன உயிர்களின் இயல்பு வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கின்றன. அவை பீதியடைந்து மனித உயிர்களையும் குடியிருப்புகளையும் தாக்குவது தொடர்கதையாகிறது. 2013 இல் உயர்நீதிமன்றம் அப்பகுதி மனித வாழ்க்கைக்கும் வன உயிரின இயல்பிற்கும் பாதிப்பு ஏற்படாத அளவில் ஒலிமாசு ஏற்படாத அளவில் மகா சிவராத்திரி கொண்டாடப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. வன உயிர்களின் இயல்பை பாதுகாக்க இது இரவு நேர நிசப்த மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரமான ஒரு வேலையை

ஈசாவின் ஜக்கி செய்துகொண்டுள்ளார்

எல்லாவற்றையும்விட வனவிலங்குகள் ஈசா யோக பீடம் அமைந்துள்ள பகுதிக்கு வரக்கூடாது என்பதற்காக நவீன அல்ட்ரா ஓசை எழுப்பும் கருவிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வனவிலங்குகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அப்பகுதியின் வனவிலங்கு சங்கிலியே உடைந்து போகும் அளவிற்கு கொடூரமான ஒரு வேலையை ஈசாவின் ஜக்கி செய்துகொண்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்திலும், கோவை ஈஷா யோகா மய்யத் தின்மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நேரத்தில், ஒரு பிரதமரே அதனைப் புறந்தள்ளி சிலையைத் திறக்க வருவது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பு அல்லவா!

அரசமைப்புச் சட்டத்துக்கு

விரோதம்

மேலும் பிரதமர் என்பவர் இந்திய அரசமைப்புச் சட்டப்படி, மதச்சார்பற்ற கொள்கையைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டியவர். இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட இந்து மதக் கடவுள் சிலையைத் திறக்க வருவது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமேயாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்ற செக்குலர் (மதச்சார்பின்மை) சோசலிஸ்டு என்ற மிக முக்கிய சொற்களை நீக்கி ‘குடிஅரசு’ நாளில் விளம்பரம் செய்யவில்லையா?

உலக கலாச்சார விழா என்ற பெயரில் யமுனை நதிக்கரையில் கடந்த ஆண்டு மார்ச் 11 முதல் 13 வரை மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுக்கப் படவில்லையா? நிகழ்ச்சி நடத்திய சிறீரவி சங்கருக்கு அபராதம் விதிக்கப்படவில்லையா?

சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எச்சரித்தும், பிரதமர் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்ற சட்ட விரோதங்கள் அரங்கேறினவே!

இன்றைய பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு இந்து மத வெறித்தனத்தோடு எந்த விதிமுறைகளையும், சட்டங்களையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிக்கத் தயாராக இல்லை.

பிரதமர் மோடிக்குக்

கறுப்புக் கொடி

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் (24.2.2017) கோவையில் ஈஷா யோகா மய்யத்தில் குறிப்பிட்ட இந்து மதக் கடவுள் சிலையைத் திறக்க வருவது அப்பட்டமான சட்ட மீறலும், நீதிமன்ற தீர்ப்பு மீறலுமான, அப்பட்டமான முறைகேடான செயலாகும்.

இதனைக் கண்டிக்கும் வகையில் கோவை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு சூலூர் விமானப்படை விமான தளம் அருகில் கறுப்புக் கொடி காட்டப்படும்.

கோவை மண்டல கழகத் தோழர்களே, சுற்றுவட்டார கழகத்தினரே கட்டுப்பாட்டுடன் இந்தக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வீர்! கலந்துகொள்வீர்!!



கி.வீரமணி
தலைவர்  ,  திராவிடர் கழகம்.

23.2.2017  
சென்னை

குறிப்பு: ஆர்ப்பாட்ட விவரம் 8 ஆம் பக்கம் காண்க

Comments  

 
#1 tamila 2017-02-24 14:32
இந்த மாதிரி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருப்பத ு நல்லதே இருள் இழுக்கிறது .
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner