எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாலியல் வதை முகாம்களில் ஈழத்தமிழ்ப் பெண்கள் -

தலைக்குமேல் தொங்கும் ‘நீட்’ எனும் கொடுவாள்!

இரு முக்கிய பிரச்சினைகள் குறித்து தமிழர் தலைவர் அறிக்கை

‘மீத்தேன்’ திட்டத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியதும் அதைக் கைவிட்டு  ‘புதிய அவதாரமான' ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதா?

இலங்கையில் ராஜபக்சே எனும் கொடுங் கோலனின் ஆட்சி அகற்றப்பட்டாலும், தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வதைமுகாம்கள் தொடர்கின்றன. அதேபோல தமிழ்நாட்டில் ‘நீட்’ என்னும் கொடுவாள் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைக்குமேல் தொங்குகிறது- இந்த நிலை யில் பிரதமரைச் சந்திக்கச் செல்லும் தமிழ் நாடு முதல் அமைச்சர் இவற்றிற்குத் தீர்வு காணும் வகையில் பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத்தில் நடைபெற்றுவரும் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்! இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமையை உலகமே அறியும்.

அய்.நா.வே தவறியது

அய்.நா. மன்றமே இந்தப் பிரச்சினையில் தன் கடமையைச் செய்யத் தவறியதை அன்றைய அய்.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஒப்புக் கொண்டதை நினைவூட்டுவதும் பொருத்தமானதே.

இதுவரை கூட இதற்கான நீதி அய்.நா. மூலம் கிடைக்க வில்லை. மனித உரிமை ஆணையம் என்ற பெயர் இருந்தால் மட்டுமே போதுமா?

‘வீட்டோ’ பவர் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு எந்த அநியாயத்திற்கும், மனித உரிமை மீறலுக்கும் துணைப்போகலாம் என்பதற்கு 21 ஆம் நூற்றாண்டிலாவது ஒரு முடிவு காணப்பட வேண்டும்.

1. பாலியல் வதை முகாம்களா?

போர்க்காலங்களில் கைது செய்யப்பட்ட பெண் களை பாலியல் வதை முகாம்களில் அடைத்து இராணுவ வீரர்களின் உடற்பசியைப் போக்குவதற்குப் பயன் படுத்தப்படும் கொடுமை, இன்றைக்கு இலங்கையில் தொடர்வது ஏற்கத்தக்கதுதானா? இதைவிடத் தலைக் குனிவு வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?

கொடூரன் ராஜபக்சே காலத்தில் இத்தகைய முகாம் களின் எண்ணிக்கை 48 ஆக இருந்தன என்றால் இன்றைய காலகட்டத்தில் அதன் எண்ணிக்கை 55 ஆக அதிகரித் துள்ளது என்பது என்னே  கொடுமை!

பிரதமரிடம் வலியுறுத்துக!

பிரதமரைச் சந்திக்க இருக்கும் தமிழக முதலமைச்சர், அவரின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மறுபடியும் தமிழ்நாடு கொந்தளிக்கும் பூமியாக மாறும் நிலையை பிரதமருக்கு எடுத்துக்கூற வேண்டும். வார்த்தைகள் மூலமாக மட்டுமல்ல - எழுத்துப் பூர்வமாகவும் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

2. ‘நீட்’ எனும்  கொடுவாள்!

இரண்டாவது முக்கியப் பிரச்சினை ‘நீட்’ தேர்வைப் பற்றியதாகும். சமூகநீதிக்கு ஊறு விளைவிக்கும் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களையும் கிராமப்புற மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் இந்த ‘நீட்’ முறையிலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஒருமனதான முடிவினை நினைவூட்ட வேண்டியது அவசியமாகும்.

முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்ற நிலையில் இப்பிரச்சினையில் தமிழ்நாடு அரசுக்கு அக்கறை உண்டு என்று வெளிப்படுத்தியிருப்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டி, பிரதமரைச் சந்திக்கும்பொழுது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தின் அடுத்த கட்ட நிலை எந்த நிலையில் இருக்கிறது? விரைவில் மத்திய அரசு அதனை ஏற்று, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமரை தமிழ்நாடு முதல் அமைச்சர் வலியுறுத்த வேண்டும்.

‘நீட்’ தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவந்துள்ள நிலையில் தமிழ்நாட்டைச்  சேர்ந்த மாணவர்கள் ஒரு குழப்பமான நிலையில் இருப்பதால் இந்தப்பிரச்சினையில் தமிழ்நாடு அரசு அவசரத்தையும், அவசியத்தையும் காட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தமிழ்நாடு- தந்தை பெரியார் பிறந்த - திராவிடர் இயக்க வேரூன்றிய சமூகநீதி மண். தமிழ்நாட்டின் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான இந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்துகிறோம்.

 

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.


26.2.2017
சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner