எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கார்கில் போரில் உயிர் நீத்தவரின் மகளை

வன்புணர்ச்சி செய்யப்போவதாக அறிவிப்பதா?

டில்லி பல்கலைக் கழக ஏபிவிபியின் (ஆர்.எஸ்.எஸ்.) காலித்தனம்!

முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர்  விடுத்துள்ள முக்கிய அறிக்கை

டில்லி  பல்கலைக்  கழகத்தில் படிக்கும் மாணவி - கார்கில் போரில் உயிர் நீத்த வீரத் தியாகியின் மகள் ஆவார். சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்து  வரும் கருத்துக்காக மிகவும் கேவலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி என்னும் அமைப்பு அப்பெண்ணை வன்புணர்ச்சி  செய்வதாகக் காலித்தனமாக அறிவித்துள்ளது. இத்தீய சக்தியை - முற்போக்கு சக்திகள் ஒன்றி ணைந்து முறியடிக்கவேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கார்கில் போரின் உயிர்த் தியாகியின் மகளான குர்மிஹார் கவுர் என்ற 20 வயது டில்லி பல்கலைக் கழக மாணவியை, வன்புணர்ச்சி (Rape) செய்வோம் என்று ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவான ஏபிவிபி என்ற அமைப்பிலிருந்து அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் வருகின்றன என்றும், அதனைக் கண்டு, தான் அஞ்சப் போவதில்லை என்றும் அந்த வீரப் பெண்மணி அறைகூவல் விடுத்துள்ளார்.

புகழ்பெற்ற ஜெ.என்.யூ. பல்கலையின் மதிப்புக்குறைவு

தலைநகர் டில்லியில் பிரதமர் மோடி ஆட்சியில் அதுவும் தொடர்ந்து ஏபிவிபி என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பு வன்முறைக்குக் கொஞ்சம்கூட அஞ்சாது - புகழ் வாய்ந்த ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், டில்லி பல்கலைக் கழகம் போன்ற பல்கலைக் கழக அமைப்புகளில் மாணவர்கள் தங்கள் அணியில் இல்லாது, முற்போக்குச் சிந்தனையாளர்களாக இருந்து கன்னையாகுமார்களாகியுள்ளனர் என்பதைக் கண்டு பொறுக்க முடியாதவர்களாக உள்ளனர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.

இறுதியாக மனுதர்மம் கூறுகிறபடி, ஜாதி தர்மத்தை நிலை நிறுத்த ‘தண்டம்‘ (வன்முறை) எடுத்தாகிலும் நிலை நிறுத்தவேண்டும் என்ற வெறியில் இந்துத்துவா கொடுமைகளை அரங்கேற்றி வருவது எத்தகைய அவலத்தைக் காட்டுகிறது!

முற்போக்கு மாணவர் இயக்கங்கள்

ஒன்று சேரட்டும்!

நாடு முழுவதும் உள்ள முற்போக்கு மாணவர் இயக்கங்கள் ஓர் அணியில் திரண்டு, ஒரே குரலில் ஒலித்து, இந்த காவிக் கூட்டத்தின் காலித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

பல்கலைக் கழக மாணவிக்கே இப்படி ஒரு அச்சுறுத்தல் என்பது தேசிய அவமானம் அல்லவா!

இதனை வன்மையாக திராவிடர் கழகம் கண்டிக்கிறது.

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.

 

28.2.2017
சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner