தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு ‘நீட்’ என்ற நுழைவுத் தேர்வு தேவையில்லை - தமிழ்நாட்டுக்கு விதி விலக்குக் கொடுக் கப்படவேண்டும் என்ற வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் இயற்றியுள்ள நிலையில், தமிழகக் கல்வித் துறை அமைச்சர் அதற்கு மாறாகக் கருத்து தெரிவித்திருப்பதை திரும்பப் பெறவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (ழிணிணிஜி) ‘நீட்’ கொண்டு வரப்பட்டால், தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்களுக்குப் பெரும் வாய்ப்புக் கேடு ஏற்படும்; இதை விளக்கிய திராவிடர் கழகமும், தி.மு. கழகமும், ஏனைய சமூகநீதிக்கான போராளி அமைப்புகளும் தமிழக அரசுக்குக் கொடுத்த அழுத்தத்தினால் சட்ட மன்றத்தில் ஒருமனதாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அனைவரது ஏகோபித்த முடிவு - ஆதரவினால் சட்டம் நிறைவேற்றப்பட்டது!
‘நீட்’ தேர்வும் - தமிழ்நாடு அரசின் சட்டமும்!
1. இந்திய அரசியல் சட்டப்படி நமது தமிழ்நாடு (மாநிலத்திற்குரிய) உரிமைப்படிதான் தமிழ்நாட்டிற்கு அது தேவையில்லை என்று நிறுவியுள்ளோம்.
2. சமூகநீதி அனைவருக்கும், குறிப்பாக கிராமப்புற பிள்ளைகள் உள்பட கிடைக்கவேண்டும் என்பதற்கே வழிவகை செய்கிறது தமிழ்நாட்டு சட்டம்.
3. இது அரசின் கொள்கை முடிவு ஆகும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை முறைப்படிப் பெற தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டில்லிக்குச் சென்று இதனை பிரதமரிடமும், சட்ட அமைச்சரிடமும் வற்புறுத்தியுள்ளார்.
4. நாள் வெகுவாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு இருந்த சிக்கல்கூட இதில் இல்லை. எனவே, தங்களது ஒப்புதலை மத்திய அரசும், அதன் தலைமையும் உடனடியாகத் தரவேண்டும்.
தமிழகக் கல்வி அமைச்சரின் தேவையற்ற கருத்து
இந்நிலையில் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக புதிதாகப் பொறுப்பேற்ற செங்கோட்டையன் அவர்கள் கோவையில் நேற்று (2.3.2017) செய்தியாளர்களிடையே பேசும்போது,
‘‘தமிழ்நாட்டு மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுது வதற்குத் தயாராக இருக்கிறார்கள்’’ என்று கூறியிருப்பது - ஏற்கெனவே கலங்கிய குட்டையில் மேலும் குழம்பும்படியான விருப்பத்தகாத - சொல்லக்கூடாத கருத்து ஆகும்!
தமிழ்நாட்டின் அ.தி.மு.க. அரசு இதில் முழு உறுதியுடன் - அந்தரங்க சுத்தியுடன் With Commitment and Involvement
முழு உறுதியுடனும், முற்றான ஈடுபாடு காட்டவில்லையோ என்ற அய்யத்தை இது ஏற்படுத்துகிறது.
கல்வி அமைச்சர் திரும்பப் பெறட்டும்!
உடனே தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சொன்ன அந்த அறிவிப்பை அவர் திரும்பப் பெறவேண்டும்; அல்லது திருத்திக் கொள்ளவேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் இது தேவையற்ற புது குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உண்டாக்கக் கூடியதாகும். டில்லியில் நாம் கொடுக்கவேண்டிய அழுத்தத்தையும் இது பலவீனமாக்கும் என்பது உறுதி. அமைச்சர்கள் எதையும் புரிந்து பேசுவது எப்பொழுதுமே மிகமிக அவசியம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
3.3.2017
சென்னை