எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

தமிழர் தலைவர்  விடுத்துள்ள அறிக்கை

 

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பகிரங்கமாகவே அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது - சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டுமே தவிர - வன்முறையால் அல்ல - வன்முறை தீர்வாகாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலையைக் கொண்டு வருகிறவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் விலையைத் தரத் தயாராக இருக்கிறோம்; என் சொத்தை விற்றாவது இந்தப் பரிசு பணத்தைத் தருகிறேன்’ என்று மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜனைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி குந்தன் சந்த்ராவத் என்ற ஒருவர் பகிரங்கமாகப் பேசியுள்ளார்!

நாம் என்ன 21 ஆம் நூற்றாண்டில்தான் வாழுகிறோமா அல்லது சூத்திர சம்பூகனின் தவத்தால்தான் என் பிள்ளை (மனுதர்மம் கெட்டதால்) செத்துப் போனான் என்று பிணத்தைக் காட்டி இராமனிடம் பார்ப்பனன் ஒருவன் முறையிட்டபோது, விசாரணை ஏதுமின்றி, தம் பரிவாரத்துடன் சென்று, சம்பூகன் தலையை வெட்டினான் இராமன் என்று வால்மீகி இராமாயண உத்தரகாண்டத்தில் கூறியுள்ளதே - அந்த ‘‘இராம (அநீதி) ராஜ்ஜியத்திலா’’ இன்று வாழுகிறோம்? ஆர்.எஸ்.எஸுக்கு அந்த நினைப்போ?

கொலைக் குற்றவாளியைக்கூட பாதிக்கப்பட்டவன் சட்டத்தைக் கையில்  எடுத்துக்கொண்டு கொன்றுவிட முடியுமா?

தூக்குத் தண்டனைக் கைதியாக இருந்தாலும் அவனுக்கும் உரிய உணவு, மருத்துவம் செய்யவேண் டும் என்ற நாகரிக சமுதாய சட்டம் - மனித உரிமைச் சட்டம் அமலில் உள்ள நாட்டில், பிரதமர் மோடி ஆளும் ராஜ்ஜியத்தில் இதுபோன்ற ‘‘காட்டுமிராண்டி’’ப் பேச்சுகள் - ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் வகையறாக்களுக்குச் சர்வ சாதாரணமாகி விட்டதே!

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கம்யூ னிஸ்டுகள் கொன்றார்கள் என்றால், சட்டப்படி என்ன பரிகார நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமோ அதை வற்புறுத்த, சட்ட நியாயப்படி செயல்பட, ஆர்.எஸ்.எசுக்கு உரிமை உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை.

ஆனால், யாரேனும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளலாமா?

வக்கிரபுத்தி கொண்ட....

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை ஆதரித்து இராமர் பாலம் கற்பனை என்று கூறியதற்காக இந்தியாவின் மூத்த தலைவர் கலைஞர் தலையை வெட்டி என் காலடியில் கொண்டு வந்தால் பரிசு என்று ஒரு வடநாட்டு வக்கிரபுத்தி கொண்ட ராம்விலாஸ் வேதாந்தி கூறியதுண்டு.

இது போன்றவற்றை பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், பா.ஜ.க.வினர் உள்பட  - அனைவரும்  கண்டிக்கவேண்டாமா?

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கேரளாவில் கொல்லப்படு கிறார்கள் என்று கூறி, இன்றுகூட கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு தீ வைப்பு - கொலை போன்றவை நடந்துள்ளன என்று ஒரு செய்தி வந்துள்ளது.

காந்தியாரைக் கொலை செய்த கோட்சேவின் ஆரம்ப பயிற்சி முகாம்தான் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசறை என்பதை எவரே மறுக்க முடியும்? அவரும், அவரது சகோதரர் கோபால் கோட்சேவுமே பகிரங்கமாகக் கூறியுள்ளனரே!

வன்முறை ஒருபோதும் தீர்வாகாது

தென்காசி போன்ற ஊர்களில் தங்கள் இயக்கத்த வரைத் தாங்களே கொன்றுவிட்டு, இஸ்லாமியர்கள்மீது பழி போட்டு கலவரம் நடந்த பிறகு உண்மைக் குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி என்று கண்டறிந்து, அவர்கள் தண்டனைக்கு ஆளா னதை மறந்துவிடலாமா?

எந்தக் கட்சியும், எந்தக் கொள்கையையும் எதிர்கொள்ள வன்முறை ஒருபோதும் தீர்வாகாது.

எனவே, இத்தகைய அருவருக்கத்தக்க அநாகரிகப் பேச்சுகளுக்கு இடம் அளிக்கக்கூடாது;  அவர்கள்மீது வழக்குத் தொடரவேண்டும்.

கருத்தைக் கருத்தால் சந்திப்பதே அறிவுடைமை!

காலித்தனம், வன்முறை சரியான வழியல்ல!

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


3.3.2017
சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner