இழிவை ஒழிக்கும் கிளர்ச்சி எழுச்சித் தீயாகக் கொழுந்து விடட்டும்!
அனுமதி மறுக்கப்பட்டால் தடை மீறப்படும்! கட்டுப்பாடு காத்து களமாடுவீர் தோழர்களே!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதி 10 மய்யங்களில் மனுதர்ம எரிப்புப் போராட்டம் எழுச்சியுடன் நடக்கட்டும்-கட்டுப்பாட்டுடன் நடக்கட்டும், மகளிரே பங்கேற்கும் இப்போராட்டத்திற்கு கழகத் தோழர்களின் பெரும் ஒத்துழைப்புத் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கழகத் தோழர்களே! (இருபாலரையும் இணைத்துதான்) நமது அன்னை மணியம்மையார் அவர்களின் 98 ஆம் ஆண்டு பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதி இவ்வாண்டு கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருப்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.
பெண்களை அவமதிக்கும்
மனுதர்மம்
பெண்களை ஒரு உயிருள்ள மனித ஜீவன் என்றே ஏற்றுக்கொள்ளாத இந்து மதத்தின் கூரிய கொடுவாள் மனுதர்மம்! இன்னும் அந்த நூல் உலாவருவது
மானுட உலகுக்கே வெட்கக்கேடானதும், சவாலானது மாகும்.
வீர அன்னையாரின் பிறந்த நாளில்...
இந்த நிலையில், ‘‘இராவண லீலா’’ நடத்தி உலகமே தமிழ்நாட்டு வரைபடத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்தவர் நமது வீர அன்னை மணியம்மையார் அவர்கள்.
அவர்களின் பிறந்த நாளில்தான் இந்த தன்மான வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். நமது கழக மகளிர் அணியினர், மகளிர் பாசறையின் முக்கிய பொறுப்பாளர்கள் தமிழ்நாட்டையே ஒரு சுற்றுச்சுற்றி - இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடத்திட ஓர் அடித்தளத்தை ஏற்படுத்தி வந்துள்ளனர். அவர்களுக்குப் பாராட்டுகள்!
இது ஏதோ மகளிருக்கான போராட்டம் என்று கருதிவிடாமல், ஒட்டுமொத்தமான பார்ப்பன அல்லா தாரும் (இவர்கள்தானே ‘‘சூத்திரர்கள், வேசி மக்கள்'' மனுதர்மப்படி) மகளிர் நடத்தும் இந்த வீரஞ்செறிந்த போராட்டம் ‘திகுதிகு’வெனக் கொழுந்துவிட்டு எரிவதற்குத் தேவையான அத்தனை ஒத்துழைப்பையும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கழகப் பொறுப்பாளர்களின் கடமை!
மாநிலப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், செயலாளர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி, தொழிலாளரணி நிர்வாகிகள், பகுத்தறிவாளர்கள் அனைவரும் அவரவர் பங்குக்கு மன திருப்தி அளிக்கும் வகையில் பங்களிப்பை - ஒத்துழைப்பை அளிக்குமாறு வலியுறுத்துகிறோம்.கழகத்தோழர்கள்தங்கள்வீட்டுப் பெண்களை கண்டிப்பாக மான உணர்வை வெளிப்படுத் தும் இந்த மானமிகு போராட்டத்தில் பங்கேற்கச் செய்வீர்!
கழகத்தின் வெளியீட்டை வீடு வீடாக, கடைகடையாகக் கொண்டு சேர்ப்பீர்!
‘பொசுங்கட்டும் மனுதர்மம்‘ எனும் ஒரு சிறு வெளியீடு கழகத்தால் வெளியிடப்பட்டு, மாவட்டக் கழகங்களுக்குத் தலைமைக் கழகத்தால் அனுப்பப்பட்டு விட்டது.
ஏற்கெனவே ‘விடுதலை’ (25.2.2017) அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி,
கழக மகளிரணி, மகளிர் பாசறையினர், கழகத் தோழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வரும் 5.3.2017 காலை முதல் இரவு வரை ஒவ்வொரு வீதியிலும், கடைகள், வீடுகள் எல்லாம் சென்று இந்த நூலைப் பரப்புரை செய்திட வேண்டும். நன்கொடை ரூபாய் 10 ஒரு பொருட்டேயல்ல!
விளக்கம் அளிக்கவே வெளியீடு!
பணம் என்பது முக்கியமல்ல; மனு தர்ம எரிப்புப் போராட்டத்தைக் கழகம் ஏன் நடத்துகிறது என்பதை அறிவுப்பூர்வமாக உணர வைப்பதே இதன் விழுமிய நோக்கமாகும்.
எந்தப் போராட்டத்தை நாம் நடத்துவதாக இருந்தாலும், அதன் நோக்கத்தைப் புரிய வைப்பதற்குத் தேவையான முயற்சிகளில் ஈடுபடுவது என்பது தந்தை பெரியார் காலந்தொட்டு நமது கழகம் கடைபிடித்துவரும் வழமை யான நடைமுறையாகும். அந்த வகையில், கைகளில் கழகக் கொடியைக் கையில் ஏந்தி கழக இருபால் தோழர்களும் அணிவகுத்துச் சென்று, இந்நூலைப் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களைச் சென்றடையச் செய்வதில் தீவிரம் காட்டுவீர். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் கைகளில் இந்நூல் சென்றடையவேண்டும். கல்லூரிகள், விடுதிகள் தோறும் சென்று இந்தச் சிறிய வெளியீட்டை வழங்கிட வேண்டும்.
1927 ஆம் ஆண்டிலேயே
எரித்தவர்கள் நாம்!
மனுதர்மம் எரிப்புப் போராட்டம் நமக்கு ஒன்றும் புதிதல்ல. 1927 ஆம் ஆண்டிலேயே (டிசம்பர் 4) குடியாத்தத்தில் சுயமரியாதை இயக்க மாநாட்டிலேயே ஜே.எஸ்.கண்ணப்பர் தலைமையில் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மம் கொளுத்தப்பட்டது.
1927 டிசம்பர் 25 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் ஆணை ஏற்று மனு நீதி நூல் தீயிட்டுக் கொளுத் தப்பட்டதுண்டு.
1981 லும் எரித்தோம்!
கடந்த 1981 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதியன்று கழகம் நாடு தழுவிய அளவில் இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறது. ஆயிரக்கணக்கான கழக மகளிர் அப்போராட்டத் தீயில் குதித்தனர்.
மானுட உரிமைகள் வீறுகொண்ட கொந்தளிப்போடு தோள் தூக்கி நிற்கும் இந்தக் காலகட்டத்திலும் மனு தர்ம நூலைக் கொளுத்தவேண்டிய கடமை - தந்தை பெரியார் கண்ட தன்மான இயக்கத்தவர்களாகிய நமக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
அரசமைப்புச் சட்டமாக மனுதர்மம்!
மனுதர்மத்தையே அரசமைப்புச் சட்டமாக்க
வேண்டும் என்று கூறித் திரிகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களில் மனுதர்ம நூலை அலங்கரித்து எடுத்துச் செல்லுகின்றனர்.
21 ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்று நிலை நிறுத்துவதில் அவர்கள் ஆர்வத் துடனேயே இருக்கின்றனர்.
பெண்களை பிறவியிலேயே அடிமைகள், படுக்கை, துரோகம், காமம் இவற்றிற்காகவே பெண்களை பிரம்மா படைத்தான் என்கிறது மனுதர்மம்; இவற்றையெல்லாம் அனுமதிக்கலாமா?
தண்ணீரும், மணலும்
தயாராக இருக்கட்டும்!
கிளர்ந்தெழுவீர்! கிடுகிடுக்கட்டும் போராட்டம்! அதே நேரத்தில் நமது கழகத்திற்கே உரித்தான அந்தக் கட்டுப்பாட்டுடன் ஒவ்வொரு அசைவும் இருக்கவேண்டும்.
கொளுத்தப்படவேண்டிய மனுதர்ம நகல் தலை மைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் - கொளுத் துவதற்கான சிறிய தீப்பந்தத்தைத் தயாராக வைத்துக் கொள்வீர்! ஒரு வாளியில் தண்ணீரும், மற்றொரு வாளியில் மணலும் தயாராக இருக்கவேண்டும். வேறு எந்தப் பொருளுக்கும் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது.
காவல் நிலையத்துக்குத்
தகவல் தெரிவிப்பீர்!
இந்தப் போராட்டம் மார்ச் 10 அன்று எந்த இடத்தில், யார் தலைமையில் நடக்க உள்ளது என்பதைத் தகவலுக்காக இன்றே சம்பந்தப்பட்ட காவல் நிலையத் திற்கு எழுத்துமூலம் உடனே தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். அனுமதி மறுக்கப்பட்டால், தடை மீறிப் போராட்டம் நடக்கவேண்டும். கைது செய்யப்பட்டால் இன்முகத்துடன் ஏற்போம்!
நேர்த்தியாக நடத்திட
மகளிருக்கு ஒரு வாய்ப்பு
அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் இன இழிவை ஒழிக்கும் களம் களை கட்டட்டும் - வெற்றி பெற வாழ்த்துகள்!
மகளிரே முன்னின்று திராவிடர் கழகத்தினர் எப்படி நேர்த்தியாக திட்டமிட்ட வகையில் ஒரு போராட்டத்தை நடத்தினர் என்று அனைவரும் வியக்கும் வண்ணம் நடக்கட்டும், நடக்கட்டும் போராட்டம்!
எரியட்டும், எரியட்டும் மனுதர்மம்!
4.3.2017 தலைவர்
சென்னை திராவிடர் கழகம்.