எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாய்க் கழகத்தின் தலைவர் அறிக்கை!

சமூக மறுமலர்ச்சிக்கான திட்டங்கள் - சட்டங்கள்  திராவிடர் ஆட்சிக்கே உரித்தான தனித்தன்மைகள்!

அறிஞர் அண்ணா ஆட்சியில் அமர்ந்த வரலாற்றுச் செழுமை வாய்ந்த அய்ம்பதாம் ஆண்டு (6.3.1967) நினைவைப் போற்றி தாய்க் கழகத்தின் தலைவர்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இதே நாளில்தான் அறிஞர் அண்ணா அவர்கள் 1967 இல் தமிழக முதலமைச்சராக பதவியல்ல - ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் - இந்நாள் தமிழக வரலாற்றில் ஒரு திருப்பு முனைக்கான செழுமை நிறைந்த பொன்னாள்!

‘‘நீதிக்கட்சியின் தொடர்ச்சியே
தி.மு.க. ஆட்சி!’’

தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்த 10 ஆண்டுகளில் ஆட்சியை அமைத்து விட்டீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டபொழுது,

‘‘தவறு - திராவிடர் ஆட்சியான நீதிக்கட்சியின் தொடர்ச்சியாகத்தான் இந்த ஆட்சி!’’ என்று குறிப்பிட் டதை இந்த இடத்தில் குறிப்பிடவேண்டும்.

பார்ப்பனர் அல்லாத மக்களின் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஒளியேற்றப்பட்டதன் தொடர்ச்சி என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் கூற்றும் - நடப்பும்!

டாக்டர் அம்பேத்கர் கூறுவதுபோல, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசுகள் சில பொது நோக்கு வளர்ச்சித் திட்டங்களை(கினீமீறீவீஷீக்ஷீணீtவீஸ்மீவிமீணீsuக்ஷீமீs)ஆட்சிக்கண் ணோட்டமின்றி மேற்கொள்வார்கள். ஆனால், காலங் காலமாக பல்வேறு காரணங்களால் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை உரிமைகளுக்கான திட்டங்களை, சட்டங்களை வகுத்துச் செயல்படுவது கிடையாது என்றார்.

அந்தவகையில்பார்க்கப்போனால்,இந்த50 ஆண்டுகளில் திராவிட இயக்க ஆட்சியில் ஏற்படுத்தப் பட்டுள்ளதிட்டங்களையும்,சட்டங்களையும்கூர்ந்து நோக்கினால், அண்ணல் அம்பேத்கர் எதிர்பார்க்கும் அடிப்படை சமூக மாற்றத்துக்கான நடவடிக்கை களை இந்த அரை நூற்றாண்டு திராவிடர் இயக்க ஆட்சியில் காண முடியும்.

சமுதாய மறுமலர்ச்சித் திட்டங்கள்

1. சுயமரியாதைத் திருமண சட்டம்.

2. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை - இந்திக்கு இடம் இல்லை.

3. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுதல்.

4. பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் - வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு.
(பெண்களின் பெயரால் மறுமலர்ச்சித் திட்டங்கள் - திராவிட இயக்க மூதாட்டிகள், வீராங்கனைகள் அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி), டாக்டர்  சத்தியவாணிமுத்து போன்றவர்களின் பெயரால் பல்வேறு சிறப்பான திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாதவை. இந்தக் காரணத்தால் முதலமைச்சராக இருந்த மானமிகு கலைஞர் அவர்களுக்கு ‘‘மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்’’ என்ற பட்டமும் திராவிடர் கழகத்தின் சார்பில் அளித்துச் சிறப்பிக்கப்பட்டது).

5. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம்.

6. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் சட்டப்படி செயல்பாடு.
(பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள், அருந்ததியர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு).
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த
முதல் நீதிபதி

7. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த முதல் நீதிபதி ஏ.வரதராசன் நியமனம்.
(உச்சநீதிமன்றத்திற்கும் சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த முதல் நீதிபதியும் இவரே - கலைஞர் ஆட்சி யில்).

8. காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவிப்பு.

9. மலம் தூக்கும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மாற்றுத் திட்டம்!

10. தைத்திங்கள் முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிப்பு

11. தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம்.
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்!

12. பெரியார் நினைவு சமத்துவ புரங்கள்.
(ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு வகை செய்யக்கூடியது)

13. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.

14. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.

15. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் நீக்கம்.

16. சென்னையில் வள்ளுவர் கோட்டம் - குமரி முனை யில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை.
இத்திசையில் இன்னும் ஏராளம், ஏராளம் உண்டு. பொருளாதார வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டாலும், அதிலும் சமூகநீதிப் பார்வை என்பது திராவிடர் இயக்க ஆட்சிக்கே உரித்தான தனித்தன்மையாகும்.

பொருளாதார வளர்ச்சியிலும்
சமூகநீதிப் பார்வை!

1. மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்ஷா ஒழிப்புத் திட்டம்

2. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்

3. விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்

4. குடிசை மாற்று வாரியம்

5. ஆதிதிராவிடர்களுக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக இலவச வீடுகள் வழங்கும் திட்டம்

6. உடல் ஊனமுற்றோர்க்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள்

7. சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள் - வாழைப் பழம் வழங்கும் திட்டம்

8. அமைப்புச் சாரா ஊழியர்களுக்கு 25 நல வாரியங்கள்

9. மகளிர் சுய உதவிக் குழுக்கள்

10. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி

11. மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள்

12. திருநங்கைகளுக்கான வாய்ப்புகள்
பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களிலும் ஒரு சமு தாயப் பார்வை என்பது திராவிடர் இயக்க ஆட்சியைத் தவிர இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எங்கு உண்டு?

பேருந்துகள் நாட்டுடைமை!

பேருந்துகள் நாட்டுடைமை, மே தினத்திற்கு ஊதியத் தோடு விடுமுறை, நகராட்சிகள் அனைத்திலும் பாதாள சாக்கடைத் திட்டம்!

சென்னைப் பெருநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்,  கடல் நீரைக்  குடி நீராக்கும் திட்டம், உழவர் சந்தைத் திட்டம், வருமுன்னர் காப்போம் திட்டம்.

இதுபோன்றவை எண்ணற்றவை.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்...

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தந்தை பெரியார் நூற் றாண்டு விழாவை மாநிலமெங்கும் சிறப்பாக நடத்தியதும், தந்தை பெரியார் அவர்களின் தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்த சட்டமும், செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான தனிச் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. (இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இது இல்லை; மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்றிட (பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் உள்பட) விரும்புகிறார்கள்).

அமைச்சரவையைப் பொருத்தவரையில், பார்ப்பனர் அல்லாத அமைச்சரவை தி.மு.க. ஆட்சியில் மட்டுமே; இந்தியாவில் வேறு எங்கும் இதை நினைத்தே பார்க்க முடியாது.

ஆட்சி பெரியாருக்கே காணிக்கை!

அறிஞர் அண்ணா சொன்ன - அந்த நீதிக்கட்சியின் தொடர்ச்சி என்பதற்கான இலக்கணத்தை இங்குக் காண முடிகிறதல்லவா?
சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய அறிவிப்புகள்,

‘‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’’ என்ற முதலமைச்சர் அண்ணாவின் சட்டப் பேரவை அறிவிப்பும்,

‘‘தந்தை பெரியார் மொழியில் சொல்லவேண்டும் என்றால், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று சொல்லத்தக்க வருணாசிரம வரிசையில், இது சூத்திரர்களுக்காக,சூத்திரர்களால்ஆளப்படும்அரசு’’என்ற மானமிகு கலைஞர் அவர்களின் அறிவிப்பும் முக்கியமா னவை! இதுதானே திராவிடர் இயக்கக் கொள்கை!

மதவாத சக்திகளை அனுமதியோம் - சூளுரைப்போம்!

திராவிடர் இயக்கம் காலூன்றி வேர்ப் பிடித்திருக்கும் தமிழ்நாட்டில், மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்தினில் அமர சிண்டு முடியும் வேலையிலும், குறுக்கு வழிகளில் நுழைந்திடவும் முயற்சிகள் நடந்துகொண்டு வருகின்றன.

மதவாத புற்றுநோய் பிடிக்காமல் வந்துள்ள நிலையில், ‘ஊழல், ஊழல்’ என்ற சில குற்றச்சாட்டுகளைக் கூறி (1947-லிருந்து இது சொல்லப்படாத சில அரசுகள் விலக் காக இருக்கலாம்) அதனால் முக்கிய சாதனைகளை மறைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
இது தந்தை பெரியார் மண். திராவிட இயக்க பூமி - இங்கு மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை சொல்லளவில் மட்டும் அல்லாமல், செயல் அளவிலும் நிரூபித்துக் காட்ட இந்த வரலாற்றுப் பொன்னாளில் சூளுரை எடுப்போம்!

வாழ்க பெரியார்!
வளர்க திராவிடர் தத்துவம்!

6.3.2017                                                                                            தலைவர்
சென்னை                                                                                  திராவிடர் கழகம்.



தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner