எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக சட்டம் செய்திருந்தும்

தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் ‘நீட்’டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்

‘நீட்’டைத் திணிப்பதில் மத்திய அரசு முனைப்புக் காட்டுவது ஏன்?

சம வாய்ப்புத் தத்துவத்துக்கு எதிரான ‘நீட்’டைக் கைவிடுக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சமூகநீதிக்கான

முக்கிய அறிக்கை

அண்ணா ஆட்சி அமைந்த 50 ஆம் ஆண்டு இந்நாள்!

 

சமூகநீதி அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவை யில் ஒருமனதாக ‘நீட்’டை எதிர்த்து சட்டம் நிறை வேற்றப்பட்டும், தமிழ்நாட்டில் உள்ள அநேகமாக அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், பார்ப்பன ஏடுகள் மட்டும் ‘நீட்’டை ஆதரிப்பது ஏன்? மத்திய அரசும் ‘நீட்’டை கொண்டுவர முயற்சிப்பது ஏன்? இது சம வாய்ப்புத் தத்துவத்துக்கு எதிரானது என்பதால், இதனைக் கைவிட வேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் மேல் பட்டப் படிப்புகள் படிக்க அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு (NEET) ‘நீட்’ என்ற ஒன்றினைத் திணிப்பது, தமிழ்நாட்டு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களை, டாக்டர் படிப்புக்கு சேரவிடாமல் தடுக்கும் உயர்ஜாதி ஆதிக்க சூழ்ச்சியே என்பதை கடந்த பல மாதங்களாக திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. ஆகிய பெரும்பாலான கட்சியினர் கடுமையாக எதிர்த்து மக்களுக்கு விளக்கியுள்ளனர்.

பல்வேறு அமைப்புகளும்,

கட்சிகளும் கண்டனம்!

இவர்கள் தவிர, டாக்டர்களைக் கொண்ட சமூக அமைப்புகள், கல்வி நிபுணர்களைக் கொண்ட பல்வேறு அமைப்புகள், மேனாள் நீதிபதிகளான டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன், ஜஸ்டீஸ் ஹரிபரந்தாமன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று பலதரப்பட்டவர்களும் இதனை எதிர்த்தே குரல் கொடுத்து வருகின்றனர்.

பார்ப்பன ஏடுகள் மட்டும் ஆதரவு

‘தி இந்து‘, தினமலர், தினமணி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் போன்ற ஏடுகள் தொடர்ந்து  ‘நீட்’டை ஆதரித்தே எழுதி வருகின்றன. இதிலிருந்து புரிவது என்ன?

இந்த ‘நீட்’ தேர்விலிருந்து  தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவினை தமிழ்நாடு அரசு எடுத்து, தேவையை உணர்ந்து  சட்டமன்றத்தில் தனிச் சட்டம் எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி என்ற பேதமின்றி ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் (அதாவது மத்திய அரசின்) ஒப்புதலைப் பெற வேண்டியுள்ள இறுதிக்கட்டத்தில் நாடு உள்ளது.

பிரதமரிடம் அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டில்லியில் பிரதமரைச் சந்தித்தபோதும், சட்ட அமைச்சரைச் சந்தித்த போதும் இதனை நேரில் வற்புறுத்தி மனுவினையும் அளித்துள்ளார்.

குடியரசுத் தலைவரிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திராவிட சமூகநீதிக்கு எதிரான உணர்வுடையோர் ஊடுருவியுள்ள ஆங்கில நாளேடுகளும், இது நிறைவேறி விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, குறுக்குசால் ஓட்டுகின்றன.

ஒரு நாளேடு ‘‘இந்த சட்டம் ‘‘Bad in Law’’  -  பலமுள்ள சட்டமல்ல; குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருவது சந்தேகமே என்று விஷமமாக எழுதுகிறது!

உச்சநீதிமன்றம் முன்பு சொன்னது என்ன?

பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரம் மட்டுமல்ல, தேர்வு நடத்துதல் பல்கலைக் கழகத்தின்  உரிமையே தவிர, இந்திய மருத்துவக் கவுன்சிலின் வேலை அல்ல. இந்த நுழைவுத் தேர்வு செல்லாது என்று  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான அல்தாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு சுட்டியுள்ளது.

அந்த அமர்வில்  ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக தனிக் கருத்தை எழுதிய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பன நீதிபதியே, மறுபடியும் அது தொடர்பான வழக்கு வந்தபோது, அந்த அமர்வுக்குத் தலைமை தாங்கி, (இது சட்டப்படி சரியா?) முந்தைய தீர்ப்புக்கு எதிராக  ஆணை பிறப்பித்து ‘நீட்’ திணிக்கப்பட்டுள்ளது.

மாநில உரிமைகளைப் பறிக்க இவர்களுக்கு ஏது அதிகாரம்?

சம வாய்ப்புத் தத்துவத்திற்கு எதிரானதே!

கல்வித்தரம் என்பது விரிவான விளக்கத்தைப் பெறவேண்டிய ஒன்று - அதுமட்டுமா?

இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான சி.பி.எஸ்.இ. முறையில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறதா? அவ்வாறு இல்லாத நிலையில், சி.பி.எஸ்.இ. திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வை நடத்துவது சரியா - முறையா - நியாயமா?

இது அடிதட்டு மக்களையும் கிராமப்புற இருபால் மாணவர் களையும் பாதிக்காதா?

சம வாய்ப்புத் தத்துவத்திற்கே இது விரோதம் அல்லவா? எனவே, தமிழ்நாடு அரசும், மக்களும் விழிப்போடு போராடத் தயாராக வேண்டும்.

 

கி.வீரமணி    
தலைவர்,  திராவிடர் கழகம்.


7.3.2017    
சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner