எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக மீனவர் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொலை

தமிழகப் பிரச்சினை என்றால் மத்திய அரசு பாராமுகம்?

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுக!

முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்

அண்ணா ஆட்சி அமைந்த 50 ஆம் ஆண்டு இந்நாள்!

தமிழக மீனவர் ஒருவர் இலங்கைக் கடற் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கைக் கடற்படையினரால் கடந்த 30 ஆண்டுகளில் 812 மீனவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போது ஒரு மீனவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தோடு 813 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  இந்தத் தாக்குதலில் அதிகமானவை இந்திய கடல் எல்லைக்குள்ளாகவே நடைபெற்றுள்ளது என்பதும், இந்தியக் கடற்படையும், கடலோர பாதுகாப்புப் படைகளும் இலங்கைக் கடற்படையினரின் இந்த அத்துமீறல்கள் குறித்து ஒரு அறிக்கைகூட இதுவரை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1980 ஆம் ஆண்டுகளில் துவங்கி 2008 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்டப் போர்வரை தமிழக மீனவர்கள் தொடர்ந்து  இலங்கைக் கடற்படையினரால் கொலை செய்யப்பட்டனர். 1978 ஆம் ஆண்டு பாம்பனைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இதுதான் அரசின் முதல் பதிவாக பார்க்கப்படுகிறது. இதுகூட கடத்தல்காரர்களை சுட்டுக்கொன்றோம் என்று பதில் கூறிவிட்டு , கொலை செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து பிடிபட்ட சில பொருள் கள் என பத்திரிகைகளில் காட்டியது.  ஆனால், அவர்கள் மீனவர்கள் - மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கைக் கடற்படையினர் கொலை செய்தனர் என்று தொடர்ந்து நடந்த விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு இலங்கையில் போராளிகளுக்கு உதவுகிறார்கள் என்று கூறி தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நீதிமன்றத்திலேயே ஒப்புதல்

மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு வழக்கில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் அளித்த எழுத்துப்பூர்வமான தகவலில் 1991 ஆம் ஆண்டுமுதல் 2011 ஆம் ஆண்டுவரை 1347 முறை இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் 2000-த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் 400 பேர் நிரந்தர ஊனமுற்றனர் என்றும் கூறியுள்ளார்.  120 மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடத்திய பிறகு, தமிழகத் தில் போராட்டம் நடக்கும். மத்திய, மாநில அரசுகள் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண்போம் என்று அறிக்கை விடும்.  மீனவர்களும், தங்கள் வாழ்வாதாரம் கருதி கடலில் இறங்குவார்கள்.

உறுதிமொழி

என்னாயிற்று?

இந்தப் போராட்டங்களையும், அதன் முடிவுகளையும் கூர்ந்து கவனித்து வந்தால், ஒன்று தெளிவாக விளங்கும். அதாவது,  மீனவர்கள் போராட்டம் நடத்தி அரசின் சமாதானப் பேச்சை கேட்டு கடலுக்குத் திரும்பிய அன்றே தாக்குதல் நடத்தியுள்ளனர். எடுத்துக் காட்டாக 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியுள்ளனர். அப்போது இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை தொலைவில் நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை கண்டித்து 22 நாள்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று 12.9.2009 அன்று கடலுக்குத் திரும்பினர். திரும்பிய அன்றே மீனவர்களை தாக்கி விரட்டியுள்ளனர். அவர்களின் படகுகள் மோசமான முறையில் சேதப்படுத்தப்பட்டு, வலைகள் அறுக்கப்பட்டு, மீன்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அவர்கள் கையாலாகாதவர்களாய் கரை திரும்பினார்கள். அதே வாரத்தில் இலங்கைக் கடற்படை  21 மீனவர்களை பிடித்துச் சென்று விட்டது.

மோடி அரசின் மிகவும் மோசமான

துரோக அணுகுமுறை

முக்கியமாக மோடி அரசு வந்த பிறகு ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும் போதும், மத்திய அமைச்சர்களான சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி போன்றோர் தமிழக மீனவர்களை மிக மோசமான ‘‘எல்லை தாண்டிய கள்ளத்தொழிலாளர்களாகவே’’ சித்தரித்து வந்திருக்கிறார்கள்.  2015 ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதியன்று  இலங்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுஷ்மா சுவராஜ் மீனவர் தாக்குதல் தொடர்பாக பேசும்போது ஒரு நாடு அதன் நாட்டு எல்லையைப் பாதுகாக்க முழு உரிமையும் உள்ளது என்று கூறிவிட்டு வந்தார்.  சுஷ்மா சுவராஜின் இந்தப் பேச்சிற்கு, சில தமிழக பாஜகவினர்,  நாம் எப்படி பாகிஸ்தானிடமிருந்து நமது எல்லையைப் பாதுகாக்கிறோமோ அப்படி தான் அங்கு நடக்கிறது என்பதைத்தான் சுஷ்மா அங்கே கூறினார் என்று சமாளித்தனர். சுஷ்மா சுவராஜ் பேசிவிட்டு வந்த அடுத்த நாளே இந்தியக்  கடற்படை அதிகாரி ஒருவர் இப்படிக் கூறினார், ‘‘எல்லை தாண்டும் மீனவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’’ - ‘‘அதிக பொருளுக்கு ஆசைப்படுகிற மீனவர்கள் இப்படி எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்கள்’’ என்கிற தொனியில் சொன்னார்.

மேலே சுட்டிக்காட்டியுள்ள இந்திய ஆளும் வர்க்க அதிகார பீடங்களில்  உள்ளவர்கள் எங்காவது  இலங்கை அரசை இது தொடர்பாக கண்டித்திருக்கிறார்களா? பாதிக்கப்படுகிற மீனவர்களை அதிக ஆசை கொண்டவர்களாகவும், ‘‘எல்லை தாண்டும் கள்ளக் குடியேறிகளாகவும், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும்‘’ சித்தரிக்கிறார்கள்.

மெரீனா கிளர்ச்சிதான் தீர்வு?

இப்படியொரு மத்திய அரசு இருக்கும்போது தமிழக மீனவர்களுக்கு மீட்சிதான் ஏது? மீண்டும் ஒருமுறை ‘மெரீனா’ கிளர்ச்சிப் போராட்டம் கிளர்ந்துதான் ஆகவேண்டுமா?

இதுவரை தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து 115 கடிதங்கள் பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் எழுதப்பட்டுள்ளதாம். அவற்றின் பலன் என்ன?

இதற்கு மேலும் பொறுமை என்றால், அதில் பொருள் உண்டா?

முதலமைச்சர் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட் டத்தை அவசரமாகக் கூட்டி, தக்கதோர் முடிவை எடுக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம். மீனவர் பிரச்சினை தொடர்கதையாக நீடிக்கவே கூடாது.

தமிழர்கள் தொடர்பான பிரச்சினை எதுவாக இருந்தாலும், அது நதிநீர்ப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, தமிழக மீனவர்ப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, இயற்கை எரிவாயு பிரச்சினையாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டைத் தண்டிக்கும் மனப்பான்மையில் மத்திய அரசு இருந்து வருகிறது.

கட்சிகளைக் கடந்து தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தாக வேண்டும் - வேறு வழியே இல்லை!

 

கி.வீரமணி      
தலைவர்,   திராவிடர் கழகம்.


7.3.2017     
சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner