எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* பேரறிவாளன் உட்பட 7 பேர் 25 ஆண்டுகளாக சிறையிலா?கொடுமை! கொடுமை!!

* தீர்ப்பில் தவறு நேர்ந்துவிட்டது என்று விசாரணை அதிகாரியும்

* தீர்ப்பு வழங்கிய நீதிபதியுமே சொன்ன பிறகு விடுதலை செய்யாதது சரியானதா?

* பரோலில்கூட விடுவதற்கு ஏன் தயக்கம்?

* எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி தமிழக அரசு விடுதலை செய்யட்டும்!

தமிழர் தலைவர்  ஆசிரியர் அறிக்கை

அண்ணா ஆட்சி அமைந்த 50 ஆம் ஆண்டு இந்நாள்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக வெஞ்சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றவாளிகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் உட்பட 7 பேர் 25 ஆண்டுகளுக்கு மேல் கொடுஞ் சிறைவாசத்தை அனுபவிப்பது என்பது மிகப் பெரிய மனிதாபிமானமற்ற, அநியாய அலங்கோலம் ஆகும்.

வன்மக்காரர்களுக்கு முக்கிய கேள்விகள்

கொலைக் குற்றவாளிகளை - அதுவும் முன்னாள் பிரதமர் ஒருவரைக் கொலை செய்ததற்காக தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுங்கள் என்று கேட்பது நியாயமா? என்று சிலர் வன்மத்தோடு, அரசியல் கண்ணாடியால் நிற பேதத்திற்கு ஆளாகியும் கேட்பார்கள்.

அவர்களைப் பார்த்து சில கேள்விகளை வைக்கிறோம். மனசாட்சியுடன் பதில் கூறுவார்களா?

1. பேரறிவாளன் போன்றவர்களை விசாரித்த சி.பி.அய். அமைப்பின் காவல்துறை அதிகாரி தியாகராஜன் போன்றவர்களே விசாரணையில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு தலைப்பட்சமான ஒழுங்கீனங்களை - மன உறுத்தல் ஏற்பட்டு செய்தியாளர்களுக்கே தெரிவித்துள்ள பிறகும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பான நீதி தவறிய ஒன்று (Mis carriage of Justice) என்பது உலகத்தார் கண்ணில்படவில்லையா? ஆட்சியாளர்களுக்குப் புரிய வேண்டாமா?

தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதியே சொன்னது என்ன?

2. உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான ஜஸ்டிஸ், கே.டி. தாமஸ் (இப்போது கேரளத்தில் சில பொறுப்பில், ஓய்வு  பெற்ற பிறகும் உள்ளவர்) வழக்கு விசாரணையில் பல குளறுபடிகள் நடந்தன என்பது போன்ற கருத்தை ஓய்வு பெற்ற பின்பு கூறினாரா இல்லையா? அதன்படி Entire Proceedings should be annuled -
- முழுதும் ரத்த செய்யும் தகுதிக்கு ஆளாக்கப்பட்டிருக்க வேண்டாமா?

3. (அ) சிறைவாசிகளான இந்த 7 பேரின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் 11 ஆண்டுகாலம் கடந்து கிடப்பில் இருந்தது.

(ஆ) 18.2.2014 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உட்பட மூவரின் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியது.

அத்தீர்ப்பினையொட்டி 23 ஆண்டுகள் (அப்போது) சிறை தண்டனையை அனுபவித்து விட்டதைக் காரணம் காட்டி விடுதலை செய்ய 19.2.2014 அன்று தமிழக அமைச்சரவையே முடிவு செய்தது.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தவறான அணுகுமுறை

மத்திய அரசின் ஒப்புதலுக்குக் கெடு(!) வைத்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா செய்த ஒரு நிலைப்பாடு ஒரு சட்டச் சிக்கலை உருவாக்கியது. இதில் சரியான சட்ட நிலைப்பாட்டுடன், சட்ட நிபுணர்களின் செம்மையான அறிவுரையை ஏற்காது, அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததன் விளைவு, 'வேதாளம் மீண்டும் முருங்கை மரம்' ஏறிய பரிதாப நிலை ஏற்பட்டது!

பேரறிவாளன் போன்றவர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி, மன நிலையும் பாதிக்கப்பட்டவர்களாக  ஆளாகி விடுவார்களே என்று மனிதநேயர்கள் - பொதுவானவர்கள் கருணை உள்ளத்தைக் கடுகளவும் இழக்காதவர்கள் இன்னமும் ஏங்கித் தவிக்கிறார்கள்.

செய்யாத குற்றத்துக்கு ஜென்ம தண்டனையா?

குற்றமே புரிந்தவர்களுக்குக்கூட தண்டனை தருவதன் தத்துவம் அவர்களை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி நல் வழிப்படுத்துவதுதானே! வெஞ்சிறையில் வாடி உயிர் விட வைப்பதா?

இங்கே 'செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை' என்ற நிலையில் ஏன் அவர்கள் சிறையில் இன்னமும் வாடி வதங்க வேண்டும்?

பேரறிவாளனின் தந்தை கவிஞர் குயில்தாசன் முதுமையாலும், நோயாலும் பாதிக்கப்பட்டு தன் பிள்ளையை தன் அருகில் இருந்து பார்த்தாவது ஆறுதலும், நோயிலிருந்து விடுதலைப் பெறும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டாமா? அவர்களுக்குப் 'பரோல்' தருவதற்குக்கூட தமிழக அரசு தயங்குவது கொடுமையான அணுகுமுறை அல்லவா?

எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி விடுதலை செய்க!

1) இன்றைய அதிமுக அரசு முதற்கட்டமாக உடனடியாக பரோல் வழங்கிட வேண்டும். அவசரத் தேவை இது!

2) அவர்களை தங்கள் சட்ட அதிகாரப்படி (எம்.ஜி.ஆர் நூற்றாண்டைக்கூட வாய்ப்பாகக் கொண்டு) விடுதலை செய்யலாம்! தமிழக பொது மக்களின் மனிதநேய வேண்டுகோள் இது! பரிசீலிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.

 

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்


சென்னை
9-3-2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner