எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழர் தலைவர்

ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

அண்ணா ஆட்சி அமைந்த 50 ஆம் ஆண்டு இந்நாள்!

நடக்கவிருக்கும் அய்.நாவின் மனித உரிமை அமைப்புக் கூட்டத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டவைகளை காலவரை யறை செய்து அதற்குள் இலங்கை அரசு முடிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட வேண்டும் என  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்க்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தொடரில் இலங்கை மீதான விவாதம் 2017 மார்ச் 22 ஆம் நாள் வர இருக்கிறது.

இக்கூட்டத்தொடரில் இலங்கை மீதான 30/1 தீர்மானத்தின் நடவடிக்கைள் குறித்த அய்.நா. மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை முன்வைக்கப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தி, இலங்கை மீதான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் சித்தரவதை மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அய்.நா. சிறப்பு தூதுவர்கள் இலங்கையின் நிலைமை குறித்த அறிக்கைகளை இக்கூட்டத்தொடரில் விவாதிக்க முன் வந்துள்ளனர்.

தேவை கால அட்டவணை

இலங்கை அரசு நடைமுறையில் உள்ள 30/1 தீர்மானத்தில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும், அல்லது பன்னாட்டு நீதிபதிகளை நீக்க வேண்டும் என்ற கோணத்தில் கடுமையாக முயற்சித்துக் கொண்டுவருகிறது. ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள், 30/1 தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது. அதனைக் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றும் வகையில் கால அட்டவணையை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு 25 செயல் திட்டங்கள் அளிக்கப்பட்டன. அதில் சில உடனடியாக செயல் படுத்தப்படக்கூடியவை.

2015 தீர்மானத்தின் நிலைமை குறித்து அய்.நா. மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் நடவடிக்கை பன்னாட்டு மனித உரிமை ஆர்வலர்களை கவலை கொள்ளச்செய்துள்ளது என்றும், இலங்கை அரசு குறைந்த பட்சம் இனப்படுகொலைக்கான நீதி கிடைக்க எதையெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றைக்கூட செய்யவில்லை; எனவேதான் உரிய கால வரையறையுடன் கூடிய செயல்திட்டம் தேவை என்று கூறியுள்ளார். இதே கோரிக்கையை பல பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகளும் முன்வைத்துள்ளன.

2015 ஆம் ஆண்டு தீர்மானத்தில்- இலங்கையில் போர் நடந்த போது மனித உரிமை மீறல் தொடர்பான இனப்படுகொலை குறித்து விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் கால அட்டவணை விதிக்கவில்லை.

ஆனால் இம்மாத இறுதியில் நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை அரசு போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காலவரையறைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இதுவரை இலங்கை அரசு

செய்தது என்ன?

இலங்கை அரசு 2015 ஆம் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் கொண்டுவந்த தீர்மானத்தை  உதாசீனப்படுத்தியதுடன் இன்றுவரை அந்த தீர்மானம் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை ராணுவத்தினர் பெண்களுக்கான பாலியல் வதைமுகாம்களை அமைத்திருப்பது உலகத்தின் பார்வைக்குத் தெரியவந்துள்ளது. போர் முடிந்த பிறகும் முன்னாள் போராளிகள் மறைமுகமாக கொல்லப்படுவதும், பெண்கள் பாலியல் வதைக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்துவரும் நிலையில், அய்.நா.வில் மனித உரிமை ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை மனித உரிமைகள் மீது உண்மையாகவே அக்கறை உள்ளவர்கள் எல்லைகளைக் கடந்து எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

கையொப்பம் இயக்கம்

வெற்றி பெறட்டும்!

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், காலகட்டத்தில் அய்.நா.மனித உரிமைகள் பேரவைக்கும், சர்வதேசத்துக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு இருப்பதை வரவேற்று, ஒட்டுமொத்த தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். இம்முயற்சியை மேற்கொண்டுள்ள அமைப்புக்கும், தோழர்களுக்கும் பாராட்டுகள்!

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner