எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் ஆசிரியரின் உணர்வூட்டும் அறிக்கை

தந்தை பெரியார்தம் தொண்டுக் காகவே சொந்த வாழ்க்கையையே துறந்த அன்னை மணியம்மையார் தம் நினைவு நாளில், அவர்களின் பண்பு நலனைப் பின்பற்றுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘மகளிரில் இவருக்கு இணை இவரே’ என்பது அகிலம் இன்றும் அறிவு நாணயத்தோடு ஒப்புக் கொள்ளவேண்டிய அரிய உண்மையாகும்.

காரணம், தமது லட்சிய வேட்கையில் தன்ன லத்தைச் சுட்டெரித்து, இனநலம், பொதுநலம் காத்த தந்தை பெரியாரை 95 ஆண்டுகாலம் அயர்வறியாது உழைக்க வைத்து அவர் நலம் பேணிக் காத்தவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் ஆவார்கள்.

அன்னை மணியம்மையாரின்

39 ஆம் ஆண்டு நினைவு நாள்

இன்று - அவரது 39 ஆம் ஆண்டு நினைவு நாள்! அவர் அய்யாவுக்குத் தொண்டு செய்வதற்கென்றே அத்துணை வசதி வாய்ப்புகள், சொத்து, சுகம், இளமை யின் இன்ப வாழ்வு அத்துணையையும் துறந்த ‘‘தொண்டறத் துறவி’’யாகி, நாத்திக இயக்கத்திற்குத் தந்தை பெரியாருக்குப் பிறகு, தலைமை தாங்கிய புரட்சித்தாய் ஆவார்! தனி வரலாறும் படைத்திட்டார்!

‘திருமணம்' என்ற ஏற்பாடு

தந்தை பெரியார்தம் அனுபவப் பட்டறிவும், பகுத்தறிவும் என்றுமே பொய்த்ததில்லை என்பதற்கு ,  அன்னை மணியம்மையாரை அவர் தேர்வு செய்து,  இயக்கத்தின் சொத்துகளை - கொள்கைகளைப் பாது காக்கச் செய்த ‘‘திருமணம்‘’ என்ற பெயரிலான ஏற்பாடு முழுக்க நியாயமானது என்பதை அன்னையார் அய்யா மறைவிற்குப் பின்னரும் உலகுக்கே உணர்த்திய உத்தம வீராங்கனை ஆவார்கள்!

எதிர்நீச்சலும், பழி ஏற்றலும் அவருக்கு ‘அன்றாட சுவாசமாக’ இருந்தது - பல ஆண்டுகளுக்கு!

சகிப்புத் தன்மையின் எல்லைக்கே சென்று பெரியார் தொண்டில் மட்டுமே முழு கவனஞ்செலுத்தி  மற்ற ‘விமர்சனங்களைப்’ புறந்தள்ளி வெற்றி கண்ட புறநானூற்றுத்தாய் அவர்!

அவரை எவரெல்லாம் சந்தேகத் தராசில் வைத்து எடை போட்டார்களோ, எவரெல்லாம் கடும் சொற்களால் ‘அர்ச்சித்தார்களோ’, அப்படிப்பட்ட பெருந்தலைவர்களை, பெரும் அறிஞர்களை, கவிஞர்களை வென்று - அய்யாவின் வாழ்நாளில் வாழ்ந்து காட்டி வாகை சூடிய எம் தாய்!

இது ஒப்பனைக்கான எழுத்தல்ல;

உண்மையின் உரத்த முழக்கம்!

ராஜாஜி எழுதிய கடிதம் என்ன?

ஆம்! தந்தை பெரியாரின் ‘அன்பார்ந்த எதிரியும், ஆப்த நண்பருமான’ திரு.ராஜகோபாலாச்சாரியார் - கவர்னர் ஜெனரல் பதவியிலிருந்தபோதுதான் இந்த ஏற்பாடு பற்றி - அவரிடம் தந்தை பெரியார் கலந்து ஆலோசித்தார்.

‘‘அந்தரங்கம்‘’ (Private & Confidential) என்று எழுதிய கடிதத்தை கடைசிவரை வெளியிடாமல் ரகசியம் காத்து, பண்பால், இமயமாய் உயர்ந்தார் எம் பெரியார்.

ஆச்சாரியார் எழுதிய அக்கடிதத்தில்.... (ஒரு பகுதி)

‘‘உலக அனுபவத்தில் என்னைவிடத் தங்களுக்கு அனுபவம் அதிகம். 30 வயது பெண் தங்களுக்குப் பின் தங்களிடம் எவ்வளவு பக்தியும், அன்பும் இருந்தபோதிலும் சொத்தை தாங்கள் எண்ணுகிறபடி பரிபாலனம் செய்வாள் என்று  நம்புவதில் பய னில்லை. அதற்காக  நிபந்தனைகள் வைத்து சாசனம் எழுதினால், அது தகராறுகளுக்கும், மனோ வேதனைக்கும், நீடித்த வியாச்சியங்களுக்கும் தான் காரணமாகும். இதையெல்லாம் யோசித்து எப்படிச் செய்யவேண்டுமோ அப்படிச் செய்வீர்கள். தங்களுடைய வயதையும், நான் தங்கள்பால் வைத் திருக்கும் அன்பையும் கருதி ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வயதில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். ஆகையால், ஒரு வருடமாவது ஒத்தி வைத்து பிறகு மனதில் எண்ணங்கள் ஊர்ஜிதப்பட்ட பின் செய்வது நலம். எழுத தோன்றியதெல்லாம் எழுதினேன். மன்னிக்கவேண்டும்.’’

இவை அன்புடன்,

21.2.1949 இராஜகோபாலாச்சாரியார்

அய்யாவின் முடிவே சரியானது

இதிலிருந்து புரிந்துகொள்ளவேண்டியவை இரண்டு.

1. அய்யாவின் முடிவே சரியானது என்பதை அன்னையாரின் இறுதிகால வாழ்வும், இயக்கத்தையும், சொத்தையும் அவர் தன்னலம் துறந்து நிர்வகித்த முறையும், அய்யாவின் ஆயுளை நீட்டச் செய்யவும், அய்யாவின் திட சித்தம், முடிவிலிருந்து பின்வாங்கா திடசித்தம் - ‘துணிந்த பின் எண்ணுவது இழுக்கு’  என்ற செயல்முறையில், வெற்றியும், ஆச்சாரியாரை மீறி செய்து அவரது கணக்கு சரியானது அல்ல என்று இருவருமே செயலில் காட்டினார்கள் என்பது எத்தகையது?

அண்ணாவின் சான்று

2. அண்ணா ஒரு அரசியல் கட்சியை இதனை வைத்து துவக்கிட, அன்னையார்பற்றி கடுமையாக எழுதினார். ‘கண்ணீர்த் துளிகளைத்' திரட்டினார். ‘புயல் நுழைகிறது’ என்று அன்று போர்ப் பாட்டுப் பாடினார். அதே அண்ணா பிறகு எங்களிடம் பேசும்போது, ‘‘மணியம்மையார் இருந்ததால் அய்யாவை 30 ஆண்டுகாலத்திற்குமேல் வாழ வைத்தார்; அவரை பாடுபடுத்திய வயிறு செரிமான நோய் போக்கி, நலங்காத்தார்'' என்று எங்களிடமே நேரில் பாராட்டி சொன்னதோடு, திருச்சிக்கு சென்று அய்யாவைப் பார்த்து ‘ஆசி’ வாழ்த்துப் பெற்ற நேரத்தில், அன்னையார் அவரிடம் காட்டிய பண்பு அண்ணா துவக்கத்தில் கூறிய கருத்தினை மாற்றிக் கொள்ள வைத்த நிகழ்வல்லவா?

புரட்சிக்கவிஞரின் பாராட்டு

3. புரட்சிக்கவிஞர், அய்யா - அம்மா திருமணத் தின்போது கடும் சொற்களால் கவிதை எழுதித் தாக்கியவர்தான்!

பிறகு அவரே பல ஆண்டுகள் கழித்து, இந்தப் பொடிப் பெண் - அய்யாவுக்கு சேவை செய்வதைத் தவிர வேறு எதையும் அறியாதவரை ‘அன்னை’ என்று அழையாமல் வேறு என் சொல்லி அழைப்பது? என்று தனது ‘குயில்’ ஏட்டில் ஒரு பெரிய கட்டுரையையே எழுதியதை எவரே மறக்க, மறுக்க முடியும்.

இவர்களை உள்ளத்தால் வென்றவர் -

‘இராவண லீலா’ நடத்தி இந்தியாவை உலுக்கிய அன்னை மணியம்மையார் அன்றோ!

அவருக்கென எதுவும் வைத்துக் கொள்ளாது, தனி அறக்கட்டளையை உருவாக்கி பல்கலைக் கழகங்கள் - பலமுனை பள்ளிகளாக - குழந்தைகள் இல்லங்களாக பெருக்கிய பெருமை அவரது தூய தொண்டறத்தின் தொடர் விளைச்சலால் அல்லவா?

வீர வணக்கம்!

அன்னையாரின் நினைவு நாளில் அவர்தம் பண்புகளை, உறுதியை, தியாகத்தை நாம் கற்றுக் கொண்டு, தனக்கென வாழா, பிறர்குரியராவோம்! வாரீர்! வாரீர்!!

நம் தாய்க்கும் மேலான அவருக்கும் எம் வீர வணக்கம்!

 

கி.வீரமணி
தலைவர்
திரவிடர் கழகம்.


16.3.2017
சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner