எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நடைவாசிகளே, வீதிவாசிகளே உங்களுக்குத்தான், உங்களுக்குத்தான்!

எங்கள் கருஞ்சட்டை வாலிபர்கள் இரு சக்கர வாகனங்களில் புறப்படுகிறார்கள்; நாளை புறப்படுகிறார்கள். 5 மய்யங்களிலிருந்து புறப்படுகிறார்கள்.

சென்னை, கோவை, தென்காசி, தருமபுரி, கடலூர் ஆகிய மய்யங்களிலிருந்து தலா 10 இரு சக்கர வாகனங்களில் பயணிக்கிறார்கள்.

அனேகமாக தமிழ்நாட்டை ஒரு வலம் வருகிறார்கள்.

எதற்காக இந்தக் கருஞ்சட்டை இளைஞர்கள் வருகிறார்கள்? நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமான தகவல் இது!

கல்வி என்பது நம் பஞ்சம, சூத்திர மக்களுக்கு எட்டாக் கனி - ஆம் அதைப் பார்த்துக் கொட்டாவி விட்டுக் கொண்டுதானே இருந்தோம்!

ஆண்டுக்கு ஒருமுறை சரசுவதி பூஜையைக் கொண்டாடித்தான் பழக்கம். அதற்குக் காரணமும் சொல்லப்பட்டது. சரசுவதி தான் நமது கல்வி தெய்வம் - அதனால்தான் அந்தப் பூஜையாம்.

அது சரி, அந்த சரசுவதி அக்ரகார தெருவில் மட்டும்தானே நடனம் புரிந்தாள் - சேரிப் பக்கம் தன் சிறகை விரிக்கவில்லையே!

ஏன் என்று என்றைக்காவது எண்ணியதுண்டா?

ஒரே ஒரு தலைவர் தந்தை பெரியார் - ஒரே ஒரு இயக்கம் திராவிடர் கழகம். இவர்கள்தானே சிந்தித்தார்கள் - கேள்விகளை எழுப்பினார்கள்.

படிப்பு என்றாலே என்ன சொல்வார்கள்? ‘பிராமணன் மாதிரி படிக்க முடியுமா?’ என்று சொலவடையே நாட்டில் புழக்கத்தில் உண்டே!

அந்த மய்யத்தை நோக்கி உரிமை வெடிகுண்டுகள் வீசப்பட்டன.

நமக்குக் கிட்டாதது என்று நினைத்து  இருட்டில் கிடந்த குடிசைகளின் மத்தியில் வெளிச்ச ரேகைகள் ஏற்றப்பட்டன.

எத்தனை எத்தனைப் பிரச்சாரம்! எத்தனை எத்தனைப் போராட்டங்கள் - இவை வீண் போயிற்றா? இல்லை, இல்லை, விளைச்சல்கள் அமோகமாகவே!

மருத்துவக் கல்லூரிவரை நமக்கு வசப்பட்டது. அதில் நுழையக்கூடாது என்று குறுக்கே எழுப்பப்பட்டிருந்த தடைச் சுவர்கள் இடிக்கப்பட்டன.

‘உனக்கு சமஸ்கிருதம் தெரியுமா? தெரிந்தால்தான் நீ மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியும் - தெரியாவிட்டால் வெளியே போ!’ என்கிற அளவுக்குக்கூட ஆரியம் ‘சீனப் பெருஞ்சுவரை’ எழுப்பியிருந்தது - எத்தனைப் பேருக்குத் தெரியும்? (பறையர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக்கூடாது என்று அன்றைய சென்னை மவுண்ட் ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் உள்ள ஓட்டல்களில் போர்டு இருந்தது என்பதைக்கூட நாங்கள் எழுதினால்தான், ‘அப்படியா?’ என்று ஆச்சரியப் பனிக்கட்டியில் உறைந்து போவீர்கள்).

இந்தத் தடைகளைத் தகர்த்தவர்கள் யார்? நமக்கு எதிரான சாஸ்திரக் குப்பைகளை எரித்தவர்களின்  கொள்கை வாரிசுகள்தான் அய்ந்து மண்டலங்களிலிருந்து இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் கைகளில் இரண்டு வெளியீடுகள். ஒன்று சிறிய நூல் (48 பக்கங்கள், நன்கொடை ரூ.10).

இன்னொன்று ஒரு துண்டறிக்கை.

அவை என்ன சொல்லுகின்றன? போராடிப் போராடி நமது மக்கள் மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்தோம் அல்லவா!

கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் திறந்த போட்டி 884 இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159, இஸ்லாமியர் (பிற்படுத்தப்பட்டோர்) 32, தாழ்த்தப்பட்டோர் 23, அருந்ததியர் 2, மலைவாழ் மக்கள் 1, முன்னேறிய வகுப்பினர் (பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதாரில் உயர்ஜாதியினர்) 68.

இந்தப் பட்டியலை ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள் - படியுங்கள்! நம் மக்கள் எல்லாம் மகிழ்ச்சியால் பூரிக்கின்றனர். வயிற்றில் பால் வார்த்த தந்தை பெரியாரே வாழ்க என்று வாழ்த்துகின்றனர்.

ஆனால், இன்னொரு கூட்டம் இருக்கவே இருக்கிறது, அது ஆண்டாண்டு காலமாக அத்தனை இடங்களையும் ஒரே சுருட்டாக சுருட்டி லபக்கென்று முழுச் சுளையாக விழுங்கிய ‘சுறா’க்கூட்டம்.

இப்பொழுது தங்கள் கையில் அதிகாரம் மத்தியில் வந்துவிட்டது என்ற திமிரில்  ஒரு சூழ்ச்சி வலையைப் பின்னியிருக்கிறது!

மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மாநிலத்தில் இருப்பதால்தானே துள்ளுகிறார்கள். அதையும்தான் பார்ப்போமே என்று பூணூல் மீசையை முறுக்கி அந்த சேர்க்கையை அகில இந்தியா என்னும் அதிகார வட்டத்திற்குக் கொண்டு சென்று, ‘நீட்’ என்கிற இந்திய நுழைவுத் தேர்வு என்னும் சுருக்கை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற இருபால் மாணவர்களின் கழுத்து களில் மாட்டிவிட்டனர்.

இதனை எதிர்த்துதான் தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண் இந்தியாவிலேயே எரிமலையாக அனல் குழம்பைக் கக்குகிறது.

தமிழக அரசும் “வேண்டாம் நீட்’’ என்னும் சட்டத்தையே கொண்டு வந்துவிட்டது. கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒரே குரலில் வேண்டாம் ‘நீட்’ என்று நீட்டி முழங்கிக் கொண்டுள்ளனர்.

அழுத்தங்கள் பல திசைகளில் இருந்து எழுந்தாலும், வீதியி லிருந்து அது கிளம்பவேண்டாமா? பாதசாரிகள் பகுதியிலிருந்து பாய்ந்து எழவேண்டாமா?

ஆம்! அதற்குத்தான் - அதற்குத்தான் - திராவிடர் கழக கருஞ்சட்டை இளைஞர் அணியினர், மாணவரணியினர் இரு சக்கர வாகனங்களில் சமூகநீதி சிப்பாய்களாகப் புறப்படுகின்றனர்; புறப்படுகின்றனர் - நாளை புறப்படுகின்றனர். ஆங்காங்கே ஆரத் தழுவுங்கள் - அன்பு உபசரிப்பைத் தாருங்கள்!

எங்களுக்காக அல்ல - உங்கள் பிள்ளைகளுக்காக - உங்கள் வீட்டிலிருந்தும் டாக்டர்கள் வரவேண்டாமா? டாக்டர்  படிப்பு பார்ப்பனர்களின் அப்பன் வீட்டுச் சொத்தா?

ஆதரவு தாரீர்! ஆதரவு தாரீர்!

உங்களுக்காகத்தான் - ஆம், உங்களுக்காகத்தான் இந்த ஆதரவுக் கோரிக்கை!

வெல்லட்டும் சமூகநீதி!  வீழட்டும் சமூக அநீதி!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner