எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அயராது பணியாற்ற அற்புத உற்சாக மருந்தைத் தரும்

அரும் மருத்துவர் போன்ற எம் இயக்கத் தோழர்களுக்கும் - நிறுவனப் பொறுப்பாளர்களுக்கும் - ஆசிரியர்களுக்கும்  நன்றி! நன்றி!! நன்றி!!!

எம்கடன் பெரியார் பணி முடிப்பதே!

தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி நவிலும் அறிக்கை

‘ஜனநாயகம் வாழ்க' என்று கூறிய பிரதமர் மோடியின் விளையாட்டு

எம்கடன் பெரியார் பணி முடிப்பதே என்ற உறுதியை உங்கள் அனைவருக்கும் வழங்கி, ஒத்துழைப்பை யாசிக்கும், உங்களை என்றும் நேசிக்கும், பெரியாரை சுவாசிக்கும் உங்கள் தொண்டன், தோழன் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நடந்து வந்த ஈரோட்டுப் பாதையை சற்று திரும்பிப் பார்க்கிறேன்.

ஒருபுறத்தில் திகைப்பு - மறுபுறத்தில் மலைப்புடன் கூடிய மகிழ்ச்சி; உற்சாகம் - எல்லாம்!

சரியாக 10 வயதில் கடலூரில் எனது ஆசிரியர் மானமிகு ஆ.திராவிடமணியால், மேடையேற்றப்பட்டு, கொள்கைப் பயிற்சி அளிக்கப்பட்ட பெரியார் தொண்டனாக வளர்க்கப்பட்டேன்.

எனது குருதிக் குடும்பத்தினர் அன்றும் சரி, இன்றும் சரி - எனது இயக்கப் பணிக்கு இடையூறாக இருந்ததேயில்லை.

மாறாக, என்னை ஊக்குவித்து, இயக்கப் பணிக்கே ‘தண்ணீர்த் தெளித்து' விட்டு விட்டார்கள்!

இயக்க கொள்கைக் குடும்பம்தான் என்னை வாழ வைக்கிறது!!

அறிவு ஆசானின்

வாழ்நாள் மாணவனாக...

எனது ‘ஞானத்தந்தை’ அறிவு ஆசானின் வாழ்நாள் மாணவனாக இன்றும் பயின்று, பயன்பெற்று, பாடம் கற்று வருபவனாகவே வாழ்ந்து வருகிறேன்.

தான் பெற்றால் ஒரு மகனுக்கு எப்படி தாய் பாசம் காட்டி, பக்குவப்படுத்தி, பணிக் களத்தில் சலிப்பின்றி, எதிர்ப்பு ஏள னத்தை எதிர்கொள்ளும் மனோ திடத்தை தருவார்களோ, அதுபோன்று  தாயும் (அன்னையார்), ஞானத்தந்தையும், நம்பிக்கை வைத்து சில பொறுப்புகளை - பதவிகளை அல்ல - தந்தார்கள்.

இன்றளவும் நாணயக் குறைவு அதற்கு ஏற்படாமல் பணிபுரிந்தே வருகின்றேன் - வருகிறோம் கூட்டுக் குழுவினராக!

1944 ‘ஜஸ்டீஸ் கட்சி’ ‘‘திராவிடர் கழகமாக’’ சேலம் மாநாட்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, அக்கழகத்திற்கு அறிஞர் அண்ணாவையும், எனது ஆசிரியர் ஆ.திராவிடமணியையும் இரண்டு செயலாளர்களாக அறிவித்தார்கள்.

1960 இல் அய்யா அவர்கள் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தில், ஆனைமலை திரு.ஏ.என். நரசிம்மன் பி.ஏ., அவர்களையும், என்னையும் திராவிடர் கழகத்தின் இரண்டு செயலாளர்களாக நியமித்து அறிவித்தார்கள்.

என்னை அய்யா அறிவித்தது சற்றும் எதிர்பாராதது - எனக்கு!

பெரியார் தந்த புத்தி எனக்கு

அன்றும் இன்றும் உதவியது - என்றும் உதவும்!

1962 இல் ‘விடுதலை’யின் பொறுப்பை என்மீது சுமத்தினார்கள் - எப்படி எழுதவேண்டும் என்ற அறிவுரையையும் தந்து, ‘ஆசிரியர்’ நாற்காலியில் அமர்த்தியதோடு, ‘‘ஆசிரியராக’’ உலகறிய செய்தார் அய்யா அவர்கள்.

அதுவே நிலைத்துவிட்டது இன்று!

அய்யா, அம்மா காலத்திற்குப் பிறகு தனித்ததோர் சுமையை - பொறுப்பை - இயக்கம் - அறக்கட்டளை என்பது போன்ற பெருஞ்சுமைகளை நான் சுமந்தபோது, பெருமூச்சு விட்டாலும், ‘பெரியார் தந்த புத்தி’ எனக்கு அன்றும் இன்றும் உதவியது - உதவுகிறது - என்றும் உதவும்.

அன்னையார் மறைந்து (1978, மார்ச் 16) அதன் பின் அவர் வகித்த பொறுப்புகளும் கூடுதல் சுமையாக ஏற்றப்பட்டன. எளியவனால் இயலுமா என்று எண்ணிப்பார்த்து, சற்று தயங்கியபோது, துணிச்சல் தானே என் உள்ளத்தில் பாய்ந்தது!

நாம் தனியே இல்லையே! லட்சோப லட்சம் நன்றியுள்ள, உறுதியுள்ள இருபால் தோழர்களைக் கொண்ட இயக்கக் குடும்பம், சுமைகளைத் தாங்கும் - நம்மை தூக்கிப் பிடிக்கும் என்ற நம்பிக்கையால்!

அய்யா - அம்மா ஆகியோரின்

எதிர்நீச்சல் பாடங்கள்

எல்லாவற்றிற்கும் அய்யாவின் வழிகாட்டல், அன்னையாரின் பழி ஏற்றிடும் பக்குவம் - இருவரின் எதிர்நீச்சல் பாடங்கள் - சோதனைகள் பல வந்தபோதிலும், அதிலிருந்து இயக்கமும், கொள்கைகளும் காப்பாற்றப்பட்டதோடு, பாதுகாக்கப்படுவதோடு, பரவவும் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது!

இதற்கு இயக்கத்திலும், அறக்கட்டளைகளிலும், நிறுவனங் களிலும் எம் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து அயராது பணியாற்ற அற்புத உற்சாக மருந்தைத் தரும் அரும் மருத்துவர் போன்ற எம் இயக்கத் தோழர்களுக்கும், கல்வி, மருத்துவ நிறுவனப் பொறுப்பாளர்களுக்கும், இயக்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் அருமைத் தோழர்களுக்கும், சான்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், பெரியார் பற்றாளர் களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

பெரியாரை சுவாசிக்கும் உங்கள் தொண்டன், தோழன் உறுதிமொழி

எம்கடன் பெரியார் பணி முடிப்பதே என்ற உறுதியை உங்கள் அனைவருக்கும் வழங்கி, ஒத்துழைப்பை யாசிக்கும், உங்களை என்றும் நேசிக்கும்,

பெரியாரை சுவாசிக்கும்,  உங்கள் தொண்டன், தோழன்,

 

கி.வீரமணி
தலைவர்,      திராவிடர் கழகம்.

சென்னை, 18.3.2017

குறிப்பு: 1978, மார்ச் 18 ஆம் தேதி திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக, ஆயுள் அறக்கட்டளை செயலாளராக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 40 ஆம் ஆண்டு தொடங்குகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner