எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திடுக்கிட வைக்கும் தகவல்

பி.ஜே.பி. ஆட்சி ஊழல்கள் அனைத்தும்

கண்காணிப்புத் துறை கணினியிலிருந்து அழிப்பு!

புதுடில்லி மார்ச் 19 பி.ஜே.பி. ஆட்சியில் நாடெங்கும் நடைபெற்ற ஊழல்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் கண்காணிப்புத் துறையின் கணினி யிலிருந்து அழிக்கப்பட்டு விட்டன என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

பதிவுகள் மற்றும் சான்றுகள்

மத்திய ஊழல் கண்காணிப்புக் கணினியில் இருந்தும் ஆணைய இணையதளத்தில் இருந்தும் மத்திய அமைச்சரவையில் நடந்த ஊழல் குறித்து கூறிய புகார்கள் மற்றும் அது தொடர்பான சான்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு  நடந்த ஊழல்களுக்கான பதிவுகள் மற்றும் சான்றுகள் அனைத்தும் இல்லாமல் போய்விட்டன.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய அலுவலகத்தின் ஹார்ட் டிஸ்க் (சேமிப்பு வட்டு)லிருந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனைத்துத் தகவல்களும் அழிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதன் இணைய தளத்தில் இருந்தும் அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டுள்ளது. ஊழல் ஆணைய இணையதளத்தை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வந்தது,  இந்த நிறுவத்துடனான ஒப்பந்தத்தை நீடிக்க மத்திய அரசு காலதாமதம் செய்ததால் அந்த தனியார் நிறுவனம் இணைய தளப் பராமரிப்பில் இருந்து விலகிவிட்டது. இதனை அடுத்து மத்திய அரசின் மத்திய இணைய சேவை அமைப்பான தேசிய தகவலியல் மய்யம் (என்அய்சி) மேற்கொண்டு வந்த நிலையில் இணையதளத்தில் இருந்தும் ஊழல் பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. இது தொடர்பாக ஊழல் கண்கானிப்புத் துறை  ஆணையர்கள் ராஜிவ், பாசின், செயலாளர் நீலம் சாவ்னி, கூடுதல் செயலாளர் சலிம் ஹக், இயக்குநர் ஜோதி திரிவேதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் சரிவர தகவல்களைத் தர மறுத்து விட்டனர். மேலும் தகவல்கள் அழிந்து போனது எப்போது என்ற கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை. இதனால், பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் பெறப்பட்ட ஊழல் புகார் குறித்த தகவல்கள் முற்றிலும் அழிந்துபோனது. இனிமேல் புதிதாக பெறப்படும் புகார்கள் தொடர்பான தகவல்கள் மட்டுமே ஊழல் கண்காணிப்பு அலுவலகத்தின் வசம் இருக்கும்.

மத்திய ஜவுளித் துறை

அமைச்சர்

அதிகப்படியான ஊழல் நடந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கட்டுப்பாட்டில் உள்ள தேசிய ஜவுளிக் கழக வழக்கு உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சரவையில் நடந்த நூற்றுக்கணக்கான ஊழல்கள் அடங்கியுள்ளன. மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோசியா என்பவர் ஊழல் புகார்கள் குறித்து மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் கேள்வி கேட்ட போது இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கோசியா என்டிசி பாதுகாப்பு மற்றும் ஊழல் பிரிவு துணை மேலாளராக இருந்தவர். இவர் பதவி வகித்த காலத்தில் பல ஊழல்களை வெளி கொண்டு வந்தார்.  இதனால், இவர் 2016 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். முக்கியமாக ஸ்மிருதி இரானி அமைச்சரவையின் கீழ் வரும் தேசிய ஜவுளித்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள  கட்டடம்  ஓம் வாஸ்து சாந்தி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.75 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த பரிமாற்றம் முறைப்படி ஏலம் கோரப்பட்டு நடைபெறவில்லை. அமைச்சகம் மற்றும் வாரிய இயக்குநர்கள் அனுமதி பெறாமல் வழங்கப் பட்டது.

மிகப் பெரிய அளவில் ஊழல்

இந்தப் புகாரில் தற்போதைய தேசிய ஜவு ளித்துறை  தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிசி வைஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் அப்போது தேசிய ஜவுளித் துறையின் நிதிப் பிரிவு இயக்குநராக இருந்தார். இந்த கட்டடம் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் இதில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது.

இந்த ஊழல் வழக்கு தொடர்பாக சில தகவல்களை பெற முயன்றபோது ஊழல் கண்காணிப்பு ஆணையம் தொடர்ந்து மழுப் பலான பதிலையே கூறிவந்தது. இந்த நிலையில் தகவல்களை தராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த பிறகு ஊழல் கண்காணிப்பு ஆணையம் தகவல்கள் அனைத்தும் அழிந்துவிட்டது என்று கூறிய சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சிக்குரியது

மோடி டிஜிட்டல் இந்தியா என்று முழங்கிக் கொண்டு வரும் நிலையில், ஊழல் கண்காணிப்பு ஆணையமே தன்னிடம் இருந்து அனைத்துத் தகவல்களும் யாராலோ அழிக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளது. இணைய தளத்தையும் யாரோ முடக்கி அனைத்துத் தகவல்களையும் அழித்து விட்டனர் என்று கூறியுள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சிக்குரியது.

பழைய தகவல்களை மீண்டும் எடுக்கும் வகையில் இரு தரப்புக்கும் இடையே எவ்வித ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தமும் இல்லை. இதன் பின்னால் பெரிய சதி இருக்கிறது. பிரதமர் இதில் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோசியா தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner