எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘நீட்' - நம்மை ஒழித்துக்கட்டும் ஒரு கண்ணிவெடி

மோடி அரசே, தமிழக சட்டத்திற்கு ஒப்புதல் கொடு!

இல்லையேல் தமிழ்நாடே சிறையாகும்!

பரப்புரைப் பயணம் செய்த தோழர்களுக்குப் பாராட்டு!

விருத்தாசலம் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

- நமது சிறப்புச் செய்தியாளர்

விருத்தாசலம், மார்ச் 22 - கிராமப்புறத்துப் பிள்ளை களையும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரையும் மருத்துவக் கல்லூரியில் நுழைய தடை செய்யும் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு பிரதமரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் தரவேண்டும்; இல்லையென்றால் தமிழ்நாடே சிறைக்கூடம் ஆகும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கிராமத்துப் பிள்ளைகளும், நெடுங்காலமாக வஞ்சிக் கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்களாக ஆகக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் ஆழப் பள்ளங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முக்கியமானதுதான் இந்த ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வு.

கொடும் வெப்பத்திலும்

பரப்புரைப் பயணம்

இதனைத் தடுத்து நிறுத்த கொடுமையான வெப்பம் சுட்டு எரிப்பதையும் தாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனங்களில் பயணித்த தோழர்கள், ஒத்து ழைப்புக் கொடுத்தவர்கள், ஆங்காங்கே வரவேற்று உபசரித்து, வாழ்த்தி வழியனுப்பிய கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் - நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘குடிசெய்வார்க்கில்லை பருவம்‘ என்ற வள்ளுவர் வாக்கை செயல்படுத்திக் காட்டியுள்ளனர் எங்கள் தோழர்கள். கொட்டும் மழையாக இருந்தாலும், கொளுத் தும் வெயிலாக இருந்தாலும் இலட்சியத்திற்காக அவற் றைப் பொருட்படுத்தாத இயக்க வீரர்கள் எங்கள் தோழர்கள் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

கட்டுப்பாட்டுடன்  பயணம்

எந்தவித ஒரு சிறு விபத்தும் இல்லாமல், வழியில் எவ்விதப்பிரச்சினைக்கும்இடங்கொடுக்காமல்,கட்டுப் பாட்டுடன் ஒழுங்கு முறையோடு பயணித்து பெருவெற்றி யைத் தந்துள்ளதற்கு மேலும் பாராட்டுகள், வாழ்த்துகள்!

தலைக்கவசம் அணிவது, முறையான ஓட்டுநர் உரிமம், காப்பீட்டுத் திட்டம் என்று ஒவ்வொரு சிறு பிரச்சினை மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது - வரவேற்கத்தக்கதாகும்.

குறிப்பாக, தொடக்கம் முதல் நிறைவுவரை சிறந்த முறையில் ஒத்துழைப்புக் கொடுத்த காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி!

எங்கள் பயணம் வீண் போகாது!

எங்கள் இளைஞர்கள் மேற்கொண்ட இந்தப் பயணம், அரும்பணி வீண் போகாது. தங்களுக்காக அல்ல; உங்களுக்காக, நமது கிராமத்துப் பிள்ளைகளுக்காக - ஏர் பிடிக்கும் கைகள் ஸ்டெதஸ்கோப்பை ஏந்த வேண்டும் என்ற நோக்கிற்காக இந்தப் பெரும் பணியில் ஈடுபட்டனர் எங்கள் கருஞ்சட்டை வீரர்கள்.

கோரிக்கைகள் நிறைவேற  கோடி கைகள் உயரும்; எங்கள் பயணம் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் - இலட்சியம் நிறைவேறும்வரை!

நீதிபதிகளுக்கே

குழப்பம் வரலாமா?

‘நீட்’ பிரச்சினையில் சில நீதிபதிகளுக்கே குழப்பம் - ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து சமூகநீதி காரணமாக உயர்பதவிகளை அலங்கரிக்கக் கூடியவர்கள் நிதானத்துடன் கருத்துகளைக் கூற வேண்டாமா? தமது உயர்வுக்குத் தந்தை பெரியாரும், அவர்கள் தொண்டர்களின் உழைப்பும் எத்தகையது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

நாங்கள் எடுத்துக் கொடுத்தால், குரல் கொடுத்தால், போராடினால், அவற்றின் விளைவு அரசின் சட்டங்களாக மலரும் என்பதுதானே நம் நாட்டின் வரலாறு.

தந்தை பெரியார் அவர்களின் காலத்தில் மட்டு மல்ல; அவர்களின் மறைவிற்குப் பிறகும் அந்த நிலை தொடரவில்லையா? (முதல் சட்டத் திருத்தத்திற்கு தந்தை பெரியார் காரணம் என்றால், 76 ஆம் சட்டத் திருத்தத்திற்குக் காரணம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி என்பது தெரிந்த வரலாறே!)

நரைத்தவர்களும் அல்லர் - மறைத்தவர்களும் அல்லர்!

எங்கள் இளைஞர்கள் நரைத்தவர்களுமல்லர் - நரைத்ததை மறைப்பவர்களும் அல்லர். தேர்தலில் போட்டியிட்டுப் பதவிக்குப் போகலாம் என்ற ஆசை கொண்டவர்களும் அல்லர்.

இதே ஊரில் நான்கு ஆண்டுகளுக்குமுன் எனது வாகனத்தின்மீது கல்லெறிந்தவர்கள் இன்று அதே இடத்தில் வரவேற்புக் கொடுக்கிறார்கள் என்றால், அதன் பொருள் என்ன? அவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் டாக்டர்கள் ஆகவேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதற்காகப் பாடுபடக் கூடிய ஒரே இயக்கம் திராவிடர் கழகம் என்பதை அறிந்து வருகிறார்கள்.

நாம் எழுப்பும் கேள்வி என்ன?

ஏன் பதில் இல்லை?

இன்றைக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்தார்களே, அவர்களை நோக்கி நாங்கள் வைக்கும் அறிவுப்பூர்வமான வினா இதுதான்!

இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் இருக்கிறதா? அப்படி இல்லாதபோது சி.பி.எஸ்.இ. முறையில் ‘நீட்’ தேர்வு என்றால், இதனால் பலன் அடையப் போகிறவர்கள் அவர்கள்தானே - அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர் - சி.பி.எஸ்.இ. முறையில் பயிலாதவர்களோ இலட் சக்கணக்கில்.

மேல்தட்டு மக்கள்

பயன்பெறவா?

குறைந்த எண்ணிக்கையில் உள்ள மேல்தட்டு மக்கள் பலன் பெறுவதற்காகப் பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா? இதுதான் எங்கள் முதன்மைக் கேள்வி. எங்கள் பிரச்சாரம், போராட்டத்தின் நோக்கம் எல்லாம் இந்தக் கேள்வியில் அடங்கியிருக்கிறது.

கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தானே இருந்தது? நெருக்கடி நிலை காலத்தில் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டதால், மாநிலங்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாமா? கல்வி நிறுவனங்களை நடத்த மட்டும் மாநில அரசு - அதன்மீது அதிகாரம் செலுத்துவது மத்திய அரசா?

எல்லா மாநிலத்துக்கும் நாங்கள் நினைப்பதுதான் கல்வி என்பவர்கள், நாங்கள் சாப்பிடும் கோதுமை யைத்தான் நீங்களும் சாப்பிடவேண்டும் என்பார்களா?

ஜனநாயகம் ஒழுங்காக நடக்க ஜாதி ஒழிப்பு! உச்சநீதிமன்றம் சொன்னதே - என்னாயிற்று?

ஜனநாயகம் ஒழுங்காக நடக்கவேண்டும் என்றால், ஜாதி விரைவாக, அவசரமாக ஒழிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதே (உ.பி. அரசு/ ராம்சாஜீவன் வழக்கு 2010).

இதுவரை செயல்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? உயர்ஜாதிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், அதனை மட்டும்தான் அவசரமாக நிறைவேற்றிடத் துடிப்பார் களா?

தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த அமர்வு ‘நீட்’டை நிராகரிக்கிறது; இன்னொரு நீதிபதி (பார்ப்பனர்) தலைமையில் அமைந்த அமர்வு வேறு தீர்ப்பு என்றால், என்ன நீதி, என்ன சட்டம்!

பார்ப்பன நீதிபதிகள்முன்

பெரியார் கொடுத்த குரல்!

உயர்நீதிமன்றத்திலேயே பார்ப்பன நீதிபதிகள் முன்பே தந்தை பெரியார் கூறினார்களே ‘‘பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு - கடும் புலி வாழும் நாடு!’’ என்றாரே - அதுதானே நினைவிற்கு வருகிறது.

1901 இல் நம் மக்களின் கல்வி நிலை என்ன? மேனாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் எழுதி இருக்கிறாரே! 116 ஆண்டுகளுக்குமுன் 1901 இல் நம் தமிழர்கள் படித்த எண்ணிக்கை என்ன? ஒரு சதவிகிதம்தானே - மற்றவர்கள் எல்லாம் கைநாட்டுப் பேர்வழிகள்தானே!

நமது இளவரசர்களும் படிக்கவில்லையே!

அரசர்கள், இளவரசர்கள்கூட படித்திருக்கவில்லை என்று எழுதி இருக்கிறாரே! நமது சேரர்களும், சோழர்களும், பாண்டியர்களும், பார்ப்பான் படிக் கத்தானே கொட்டிக் கொடுத்தார்கள்; நிலங்களைத் தானமாகக் கொடுத்தனர்!

இன்றைக்கு நிலை என்ன? நம் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியில் வேக வேகமாக வளர்ந்து வர வில்லையா?

திராவிடர் இயக்கம் சாதிக்கவில்லையா?

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று கேட்பவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா? (சென்னை பல்கலைக் கழகத்தில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் 1,45,450; 89 சதவிகிதம் - துணைவேந்தர் முனைவர் திருவாசகம் - நாள்: 20.11.2010).

நுழைவுத் தேர்வு என்று சொல்லும்பொழுது என்ன சொல்லுகிறார்கள்? சம வாய்ப்பு என்கிறார்கள். சம வாய்ப்பு என்பதே மோசடியானதே!.

கிங் காங்கையும் - என்னையும் மோதவிடுவது சம வாய்ப்பா? ஜாதியின் காரணமாக பல தலை முறைகளாகக் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு தருவதுதான் சமூகநீதி அதனைத் தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நம்மை ஒழித்துக்கட்ட கண்ணிவெடிகள்!

நம்மை ஒழித்துக்கட்ட கண்ணிவெடிகளைப் பதுக்கி வைத்துள்ளனர். நுழைவுத் தேர்வு, புதிய தேசிய கல்வி என்பதெல்லாம் அதுதான். எங்கே கண்ணிவெடிகளைப் பதுக்கி வைத்துள்ளனர் என் பதை ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் துல்லியமாகத் தெரியும்.

எங்கள் தோழர்கள் பரப்புரைப் பயணம் செய்து வந்துள்ளனர். இப்பொழுது ஒரு இடைவெளிதான் அடுத்தடுத்துத் திட்டங்கள் தயார் - அவை செயல்படுத்தப்படும்.

நெடுவாசல் போய்

தெருவாசல் வரவில்லையா?

அடுத்து சிறைவாசல்தான்!

சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் ‘நீட்’ விலக்குச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தெரிவிக்கவேண்டும் - கையொப்பம் இடவேண்டும்.

நாங்கள் கேட்பது பிச்சையல்ல - உரிமை! மாநில அரசும் சத்தம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இதுவரை முடிவு வரவில்லை.

தமிழ்நாடே சிறையாகும்!

மோடி அரசே,

தாமதிக்காதே,

ஒப்புக்கொள்.

கையொப்பமிடு!

இல்லையென்றால்

தமிழ்நாடே சிறைக்கூடமாகும்.

சமூகநீதிக்காக ரத்தம் சிந்தவும் தயார்!

குலக்கல்வியை ஒழித்தவர்கள் நாங்கள்

பெரியார் கொடுத்த ‘ஆயுதம்‘ எங்களிடம் இருக்கவே இருக்கிறது - அலட்சியப்படுத்த நினைக் காதீர்கள் என்று எழுச்சியுரையாற்றினார் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner