எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

‘ஜனநாயகம் வாழ்க' என்று கூறிய பிரதமர் மோடியின் விளையாட்டு

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற் படையால் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது. மத்திய அமைச்சருடன் தமிழக மீனவர்ப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே, தமிழக மீனவர்கள்மீது தாக்குதலை இலங்கைக் கடற்படை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, முக்கிய பிரச்சினைகள்மீது முடிவு எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக மீனவர்கள்மீது இலங்கைக் கடற் படையின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தியப் பெருங்கடல், உலகின் மிகப்பெரிய அளவில் மீன்களைப் பிடிக்கின்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. அதாவது மொத்த உலகின் மீன் பிடிக்கும் பகுதியில் 15 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலில் உள்ளது. (ஆண்டிற்கு சுமாராக 9 மில்லியன் டன்) இந்தப் பகுதிகளில், பெரும் பகுதிகளில் தமிழக- ஈழ மீனவர்கள் நெடுங்காலம் மீன்பிடித்து வருகிறார்கள்.

தீர்வு கிடைக்கவில்லை

இந்தியாவிற்கும் - இலங்கைக்குமான எல்லை களின் தூரம் வெறும் 12 கடல் மைல்கல்தான். இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதுபற்றி இலங்கை அரசிடம் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும், எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக்கொள்வோம். 2006 ஆம் ஆண்டு இலங்கைக் கடற்படை கச்சத்தீவு பாக் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது ஒருவர் காயமடைந்தார்; 12 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். செப்டம்பர்  8, 2006 அன்று இலங்கைக் கடற்படை கன்னியாகுமரி அருகே நான்கு மீனவர்களின் வலையை அறுத்து, அவர்களை உயிர் தப்பிக்க கடலில் குதித்து நீந்தச் சொல்லியிருக்கிறது.

தாக்குதல் தொடர்கதை!

2011 ஆம் ஆண்டு நாகை, இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 62 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

2014 ஆம் ஆண்டு 110 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

2015 ஆம் ஆண்டு 57 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்; 38 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டன.

2016 ஆம் ஆண்டு 83 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 படகுகளை இலங்கைக் கடற்படையினர் இழுத்துச் சென்றனர்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய இந்த மூன்று மாதங்களிலும் 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 படகுகள் பிடிபட்டுள்ளது; ஒருவரை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொலை செய்துள்ளது.

மீனவர் கொலை

ஜனவரி 12, 2011 அன்று நடந்த நிகழ்வு ஒன்றில், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள்மீது நடத்திய தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அலுவல் முறை எதிர்ப்பிற்குப் பிறகும் மற்றொரு மீனவர் மிகக் கொடூரமான முறையில் ஜனவரி 22, 2011 அன்று இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளில், 530 மீனவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி பாம்பனைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கைக் கடற்படையால் கொலை செய்யப்பட்டார்.

மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவ ராஜை 15 பேர் கொண்ட மீனவர்கள் குழு கடந்த 21 ஆம் தேதி சந்தித்துப் பேசியது. இதில் 6 பேர் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள்.

மத்திய அமைச்சர் சுஷ்மாவுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் மீனவர் குழுப் பிரதிநிதி அருளானந்தம் கூறியதாவது:

பிரிட்ஜோ கொலைக்கு நீதி வேண்டும். இலங்கையில் இருக்கின்ற 139 படகுகளை விடுவிக்கவேண்டும். நிரந்தரத் தீர்வு ஏற்படு வதற்கான தீர்வு வேண்டும் உள்ளிட்ட பிரச் சினைகள் குறித்துப் பேசியுள்ளோம். மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை குறிப்பிட்ட காலத்திற்கு இலங்கைக் கடற்பகுதியில் அல்லது ராமேஸ்வரம் தொடங்கி நாகை வரை மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். நாங்கள் கூறியதை எல்லாம் விளக்கமாக மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார். நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார் என்று அருளானந்தம் கூறினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் உடன் இருந்தார்.

பேச்சுவார்த்தை நடக்கும்போதே தாக்குதல்

இதில் என்ன கொடுமை என்றால், மத்திய அமைச்சருடன் தமிழக மீனவர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே மறுநாள் இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. 21 ஆம் தேதி பேச்சுவார்த்தை - 22 ஆம் தேதி 26 மீனவர்கள் கைது; 131 படகுகள் பறிமுதல் நடந்திருக்கிறது. தமிழக எல்லையில் மீன் பிடித்தாலும் அத்துமீறி நம் பகுதிக்கு வந்தும்கூட  கைது செய்கின்றனர்.

முதலமைச்சர் கடிதம் எழுதுவதும், தமிழக மீனவர்கள் மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் எல்லாம் அன்றாட மவுடிக சடங்குகளாகி விட்டன.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக!

கேரளாவைச் சேர்ந்த இரு மீனவர்களை இத்தாலிய கப்பல் படையினர் சுட்டுக் கொன்றபோது, மத்திய அரசு எப்படியெல்லாம் துடிதுடித்துச் செயல்பட்டது. இதுவரை 530 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் இருந்தும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்தது உண்டா? உரிய நடவடிக்கை எடுத்ததுதான் உண்டா?

எல்லா வகைகளிலும் தமிழர்களும், தமிழ்நாடும் வஞ்சிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒரு முடிவு காணவேண்டும் என்று வலியுறுத்துகிறோம், வலியுறுத்துகிறோம்!

 

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்


24.3.2017  
சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner