எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடக் கட்சிகள் வேண்டுமானால், பலகீனம் அடைந்ததைப்போல தோற்றமிருக்கலாம்;  தோற்றம் வேறு - உண்மை வேறு!

திராவிடக் கொள்கைகள் பலகீனமாகவில்லை

தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

தஞ்சை, மார்ச் 25- திராவிடக் கட்சிகள் வேண்டுமானால், பலகீனம் அடைந்ததைப்போல தோற்றமிருக்கலாம்;  தோற்றம் வேறு - உண்மை வேறு! திராவிடக் கொள்கைகள் பலகீனமாகவில்லை என்று செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கூறினார்.  தஞ்சையில் நேற்று (24.3.2017)  தமிழர் தலைவர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவரது பேட்டி வருமாறு:

அ.தி.மு.க. பெயரையும் - இரட்டை இலை சின்னத்தையும் முடக்கியதுபற்றி...

செய்தியாளர்: இந்திய தேர்தல் ஆணையம்  இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க. கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி முடக்கியதுபற்றி...?

தமிழர் தலைவர்: தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சட்டத்தின்படி உள்ள ஒரு சுதந்திரமான அமைப்பு. அது எந்த முடிவையும் அறிவிக்கப்படக் கூடிய ஒரு வாய்ப்பு - அதனுடைய முடிவுகள் பற்பல நேரங்களில், நீதிமன்றங்களால்கூட மாற்றப்பட முடியாத முடிவுகள் என்ற அளவிற்கு அந்த ஆணையத்திற்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த ஆணையம் இந்த முடிவினை அறிவித்திருக்கிறார்கள் என்றால், இது அ.தி.மு.க.வை பொருத்தவரையில் இது முதன் முறையல்ல. ஏற்கெனவே 28 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பின் இப்படி நடந்திருக்கிறது என் றாலும், ஒரு வேறுபாடு இப்பொழுது என்னவென்று சொன்னால், 28 ஆண்டுகளுக்கு முன்பு - தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்று மத்தியில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சிக்காரர்கள் யாரும் அறிவிக்கக்கூடிய நிலையில் இல்லை. இப்பொழுதுதான் தமிழ்நாட்டில் விசித்திரமாக, வழக்குக் கொடுக்கப்பட்ட உடனே, இது முடக்கப்படும் என்று, தமிழ்நாட்டிலுள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த இரண்டு, மூன்று தலைவர்கள் சொன்னார்கள்; தேர்தல் ஆணையமும் அதையே சொல்லிற்று. எனவே, ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு - caesar’s wife must be  above suspicion  - என்று. ஆனால், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்று தமிழில் மொழி பெயர்த்து சொல்லலாம்.

அப்பேர்ப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்திற்கே ஒரு சிக்கல் உண்டாக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த எண்ணம் பரவலாக, பல கட்சிக்காரர்கள் மத்தியிலும் கேட்கப்படுகிறது. இது விரும்பத்தக்கதா? இது ஏற்கத்தக்கதா? அதுமட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தினுடைய முடிவுகளை, தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாத ஒரு கட்சி - மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஆசைப்படுகிறோம்; கழகங்களே இல்லாத ஒரு தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த விஷயத்தில் என்ன சொன்னார்களோ, அதே முடிவினை தேர்தல் ஆணையமும் அறிவிக்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறதே தவிர, மற்றபடி தேர்தல் ஆணையத்தின் முடிவு என்பது அதற்குரிய வாய்ப்பாகும்.

அ.தி.மு.க.விற்கு பின்னடைவை ஏற்படுத்துமா?

செய்தியாளர்: இரட்டை இலை சின்னத்தை முடக்கியது என்பது, அ.தி.மு.க.விற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்துமா?

தமிழர் தலைவர்: பின்னடைவை ஏற்படுத்தாது; இடைத்தேர்தல் நடைபெறுவது சென்னையில் - கிராமம்கூட அல்ல. வெறும் சின்னத்தை மட்டும் பார்த்து வாக்களிக்கக்கூடிய வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், ஏற்கெனவே அந்த இயக்கத்திற்குப் பல காரணங்களால் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் நிச்சயம் தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் ஈடுபடுவீர்களா?

செய்தியாளர்: தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் ஈடுபடுவீர்களா?

தமிழர் தலைவர்: தாராளமாக, தேவைப்பட்டால், அழைத்தால், நாங்கள் பிரச்சாரம் செய்வோம். ஏனென்றால், தி.மு.க.வை ஆதரிக்கிறோம் என்று ஏற்கெனவே திராவிடர் கழகம் சொல்லியிருக்கிறது.

காரணம் என்னவென்று சொன்னால், தமிழ்நாட்டினுடைய உரிமைகள் பறிபோயிருக்கிறது. அண்மைக் காலத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி வலியுறுத்த முடியவில்லை.

ஏற்கெனவே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள், எதை எதையெல்லாம் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னார்களோ, அவையெல்லாவற்றிற்கும் கதவு திறந்து விட்டுவிட்டார்கள்.

நீட் என்பதற்கு ஒரு மிகப்பெரிய அளவில், நம்முடைய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய கன்கரண்ட் பட்டிய லில் தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய ஒரு தெளிவை - சட்டத்தை உருவாக்கி - எதிர்க்கட்சிகள் உள்பட ஒருமனதாக சட்டமன்றத்தில் அதனை நிறைவேற்றினாலும், இன்னமும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல், இன்றைக்கு செய்தி வெளிவருகிறது, தமிழ்நாட்டில் மேலும் மூன்று இடங்களில் நாங்கள் பயிற்சி கொடுப்போம் என்று மத்திய அமைச்சர் சொல்கிறார் என்றால், என்ன அர்த்தம்? தமிழ்நாட்டை துச்சமாக மத்திய அரசு கருதுகிறது.

அதுமட்டுல்ல, நதிநீர்ப் பிரச்சினை - 39 ஆயிரம் கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு வறட்சி மாநிலம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த வறட்சிக்கு எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்றால், 2 ஆயிரம் கோடி கொடுத்திருக்கிறோம் என்று சொன்னால், யானைப் பசிக்கு சோளப்பொறி என்று சொல்லக்கூடிய அந்த நிலையில்தான் இருக்கிறது.

எனவேதான், மாநிலத்திற்குரிய உரிமை முழுக்க முழுக்கப் பறிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்று ஒருபக்கத்தில் ஆசை இருந்தாலும்கூட, அப்படி ஊன்ற முடியாது என்ற எண்ணம் உள்ளுக்குள் அவர்களுக்கு இருக்கின்ற காரணத்தால், தமிழ்நாட்டைவிட மற்ற மாநிலங்களுக்கு நாம் வசதி செய்தால், அங்கே சுலபமாக வந்துவிடலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இந்த அரசாங்கம் தொடர்ந்தால் தமிழக உரிமைகள் பறிபோகுமா?

செய்தியாளர்: இந்த அரசாங்கம் தமிழ்நாட்டில் தொடர்ந்தால், தமிழ்நாட்டினுடைய உரிமைகள் பறிக்கப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

தமிழர் தலைவர்: நிச்சயமாக! ஏனென்றால், இந்த இரண்டு பேரையும் அவர்கள் மிரட்டி வைத்துக்கொண்டு, தங்களுடைய காரியங்களை சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்த இரண்டு பேரும் ஒரு வலிமையான ஆளுங்கட்சி அல்ல. அதனால், அவர்களை மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறது.

ஆனால், அதேநேரத்தில், இளைஞர்கள், மற்றவர்கள், பொதுவானவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை, சென்னை மெரீனா கடற்கரையும், நெடுவாசலும் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

இது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலை. எனவே, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்கிற நிலையை மாற்றி தமிழகத்தில் உரிமையைப் பெறுவறத்கு ஒரு புதிய நிலையை உருவாக்கி இருக்கிறது.

நாங்கள் ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்து ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

மதச்சார்பின்மைக்கு ஆபத்து, சமூகநீதிக்கு ஆபத்து, அதேபோல, மாநிலங்களுடைய உரிமைகள் பறிப்பு - இந்த மூன்று ஆபத்துகளும் இப்பொழுது தமிழ்நாட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கின்றன. அதிலிருந்து தமிழ்நாட்டை பாதுகாக்கவேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, இதில் ஒத்தக் கருத்துள்ளவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்கிற முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

திராவிட இயக்கங்களின் எதிர்காலம் எப்படி இருக்கிறது?

செய்தியாளர்: கடந்த 50 ஆண்டுகளாக திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்சிக்கு வரக்கூடிய சூழ்நிலை இருந்தது; ஆனால், இப்பொழுது தேசிய கட்சிகளுடன் சேரவேண்டும் என்றும் - மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பக்கூடிய நிலையில், திராவிட இயக்கக் கொள்கைகளின்மீது மக்களுக்கு ஈடுபாடு எப்படி இருக்கிறது - திராவிட இயக்கங்களின் எதிர்காலம் எப்படி இருக்கிறது?

தமிழர் தலைவர்: திராவிடக் கட்சிகள் வேண்டுமானால், பலகீனம் அடைந்ததைப்போல தோற்றமிருக்கலாம்; திராவிடக் கொள்கைகள் பலகீனமாகவில்லை. அது பரவலாக எல்லோர் மத்தியிலும் இருக்கிறது.

நிறைய பேருக்கு ஆசை இருக்கும்; ஆட்சிக்கு வரவேண்டும், வரவேண்டும் என்று யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். மிஸ்டு கால் கட்சியே ஆசைப்படும்பொழுது, சொந்தக்கால் கட்சிகள் எல்லாம் பலகீனமாகவில்லை.

ஆளுங்கட்சி இரண்டு, மூன்று பிரிவாகப் பிரிந்திருக்கிறது என்பதால்,  அதனைப்  பயன்படுத்தலாம் என்று சிலர் நினைத்தால், ஆளுங்கட்சிக்கு வேண்டுமானால், தோல்வியாகலாமே தவிர, திராவிட கொள்கைகள் தோல்வியடையாது.

அண்ணா அவர்கள் பிரிவினையைக் கைவிடும்பொழுது ஒரு கருத்தை சொன்னார். அதற்கான காரணங்களைப்பற்றி யோசிக்கவேண்டும் என்று சொன்னார்.

மீண்டும் சொல்கிறேன், சமூகநீதிக்கு, நீட் போன்ற தேர்வுகளை உள்ளடக்கி செய்கின்ற ஆபத்து, அதேபோன்று விவசாயிகள் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை இவையெல்லாவற்றையும்விட, மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டிருக்கிற ஒரு பெரிய அச்சுறுத்தல்.

உத்தரப்பிரதேசத்தில் அப்படி நடக்கிறது என்றால், அதே உத்தரப்பிரதேச அரசாங்கத்தைத் தமிழ்நாட்டில் கொண்டு வர முடியாது.

குஜராத்திற்கு அடுத்து உத்தரப்பிரதேசம், மூன்றாவது முயற்சியாக தமிழ்நாட்டை நாங்கள் குறி வைத்திருக்கிறோம் என்று சொல்வதற்கு அடையாளமாகத்தான், 92 ஆண்டுகளாக இல்லாத  நிலையில், இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். கமிட்டியை கோவையில் நடத்தியிருக்கிறார்கள்.

இது ஒரு மிகப்பெரிய சவால். எனவே, மதச்சார்பின்மை போன்ற ஒத்தக் கருத்துள்ள கூட்டமைப்புகள் இங்கு உருவாகும். அது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, கொள்கை ரீதியாக இருக்கும். அதற்கான அறைகூவல் என்பது மிக முக்கியமான தருணமாகும் தமிழ்நாட்டிற்கு.

கோவை படுகொலையை கண்டித்து...

செய்தியாளர்: கோவை பாரூக் படுகொலையை நீங்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தீர்களே...?

தமிழர் தலைவர்: ஆமாம்! அதில் இன்னொரு நல்ல திருப்பம் என்னவென்றால், இஸ்லாமிய சமுதாயத்துக்காரர்கள் எல்லோரும் அப்படி இருக்கிறார்கள் என்பதல்ல. அதில் யாரோ சில பழைமைவாதிகள் - எந்த மதத்திலும் உள்ள fundamentalism ஆபத்து என்பதற்கு அதுதான் அடையாளம்.

அதாவது மதவெறி எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டும். மதவெறிக்குப் பிராண்டு கிடையாது. யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து; மனிதனுக்கு மதம் பிடித்தால் அதைவிட ஆபத்தாகும்.

ஒரு நாகரிக சமுதாயத்தில் நாம் வாழுகிறோமோ என்கிற சந்தேகம்தான் ஏற்படுகிறது. தபோல்கருக்கு நடைபெற்றதையே நாம் கேள்வி கேட்கிறோம். இவ்வளவு பண்படுத்தப்பட்ட மண்ணில்கூட, இன்னும் ஒரு சில ஆட்கள் அதுபோல் இருக்கிறார்கள் என்பது, வருத்தத்திற்கும், வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது.

நல்ல வாய்ப்பாக, அதை அந்த சமுதாயத்து மக்கள் பெரும்பாலோர் ஏற்கவில்லை. அதனை நாங்கள் மறுக்கிறோம் என்று அவர்கள் சொன்னது மிகப்பெரிய ஒரு நல்ல திருப்பமாகும்.

தேசிய சமூகம் கல்வியில்

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

செய்தியாளர்: மத்திய அரசு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைக் கலைத்துவிட்டு, தேசிய சமூகம் கல்வியில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்று உருவாக்க முனைகிறார்களே, அதுபற்றி...?

தமிழர் தலைவர்: அதாவது,  இதில் பத்திரிகைகாரர்கள் உள்பட தொடர்ந்து Socially and Educationally
என்பது அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. அதனை மிகச் சாமர்த்தியமாக Socially and Educationally
என்பதை Socially and Economically என்று பொருளாதாரம் என்று திருப்பினார்கள். அதனை நாங்கள் கண்டித்தோம்.

இப்பொழுது வந்திருக்கின்ற ஒரு நல்ல செய்தி - அது பாராட்டவேண்டிய செய்தி.

Scheduled caste Commission - National Commission    அதேபோன்று,  Scheduled Caste - Parliamentary Commission - Backward Commission இல்லாமல் இருந்தது. அதனைப் போராடி வாங்கியாயிற்று. ஆனால், அதற்கு அரசியல் சட்டத்தில் உள்ள அதிகாரத்தைக் கொடுக்கவில்லை. இதுவரையில் போராடி வந்திருக்கின்றோம். இப்பொழுது மத்திய அமைச்சரவையில், அந்த உரிமையைக் கொடுத்திருக்கிறார்கள். அது வரவேற்கத்தகுந்ததுதான்.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner