எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநில உரிமை, மதச் சார்பின்மை, சமூக நீதியை முன்னிறுத்தி

ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு உருவாக்கம்

மாநிலம் தழுவிய அளவில் முதற்கட்டமாக

எட்டு  நகரங்களில் பரப்புரைப் பிரச்சார மண்டல மாநாடுகள்!

திராவிடர் கழகம் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

தி.மு.க. காங், கம்யூ, த.மா.கா. மு.லீக், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு

சென்னை, மார்ச் 27 மாநில உரிமை, மதச் சார்பின்மை, சமூகநீதி இவற்றை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட திராவிடர் கழகம் சார்பில் கூட்டப்பட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டத்தில், தமிழ்நாடு தழுவிய அளவில் 8 இடங்களில் மண்டல மாலை நேர மாநாடுகளை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மாநில உரிமை, சமூகநீதி,  மதச் சார்பின்மை என்ற மூன்று முக்கிய விழுமிய பிரச்சினைகளில் மத்தியில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மக்கள் விரோத போக்குடன் நடந்து கொண்டு வருவதால் இவை குறித்து கலந்துரையாடவும், இதன் மேல் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தக்கதோர் முடிவினை எட்டும் வகை யில், சென்னை பெரியார் திடலில் இன்று  (27.3.2017) காலை 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பல்வேறு அரசியல் கட்சிகளின், சமூக அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

தமிழ்நாட்டின் உரிமை வளர்ச்சி என்கிறபோது மத்திய பிஜேபி அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும்  செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

(அ) நதி நீர்ப் பிரச்சினைகளில் (காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி நதிகள் உட்பட) தமிழக நலன்களுக்கு எதிரான முடிவுகள் - நடவடிக்கைகள்.

(ஆ) மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் விவசாயம் பாதிப்பு.

(இ) நிதி உதவி வழங்குவதில் அலட்சியம் - பெயரளவிற்குச் சிறிய அளவில் அறிவிப்பு.

(ஈ)        சிவகங்கையையடுத்த கீழடி தொல் பொருள் ஆய்வு முடக்கப்படுதல்.

(உ)       தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும் என்று அறிவித்து அதனைச் செயல்படுத்தாமை.

(ஊ)      இரயில்வே திட்டங்களில் அலட்சியம் -  வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடிகள்.

(எ) சேலம் உருக்காலை தனியார்மயம் ஆக்கப்படுதல்.

(ஏ)         தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற் படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தாலும் அதற்கான நிரந்தரப் பரிகாரம் தேடுவதில் அலட்சியம்.

(அய்) இலங்கைத் தீவில் இறுதி கட்டப் போரில் பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலையில், இந்த இனப்படுகொலை நடந்து ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதுகுறித்து விசாரணையை நடத்திட மேலும் இரண்டாண்டுகள் தேவை என்ற இலங்கை அரசின் நியாயமற்ற தீர்மானத்தை உரிய வகை யில் மனித உரிமை ஆணையத்தின் முன் எடுத்துக் கூற இந்திய அரசு தவறியுள்ளது. எல்லா வகைகளிலும் மத்திய பிஜேபி அரசு தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு விரோதமாகவே தொடர்ந்து நடந்து வருகிறது.

மதச் சார்பின்மை

மதச் சார்பின்மைக்கு விரோதமாக மத்தியில் பிஜேபி தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், பிஜேபியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கோட்பாட்டின் அடிப்படையிலும் செயல்பட்டு வருகிறது.

1) பிரதமராக இருக்கக் கூடியவரும், மத்திய அமைச்சர்களுமே ராமராஜ்ஜியம் அமைப்போம், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம்  என்று வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்படுகின்றன. மக்களின் உணவுப் பிரச்சினையிலும் தலையிட்டு மாட்டுக்கறி சாப்பிடுவது ஒரு பெரிய குற்றச் செயலாகப் பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.

செக்குலர், சோஷலிஸ்ட் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் (Pre Amble) முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ள கொள்கை வாசகங்களைக்கூட நீக்கி, குடியரசு தின அரசு விளம்பரமாக வெளியிடச் செய்கின்றனர்.

சிறுபான்மையினர்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்தும் வகையிலும், கீழ்த்தரமான ஆபாச மான பிரச்சாரத்திலும், நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தலித் மக்களுக்கு எதிராக நாடெங்கும் அநீதிகள் திட்டமிட்டு இழைக்கப்படுகின்றன. அவர் களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் குறைக்கப்பட்டு வருகின்றன.

அயோத்தியில் 151 கோடி ரூபாய் செலவில் 25 ஏக்கர் பரப்பில் இராமாயண அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில்  கன்னியாகுமரியில் அத்தகைய கண்காட்சியை  ரூ.15 கோடி செலவில்  அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்துத்துவாவைக் கல்வித் திட்டத்தில் புகுத்தி வருகின்றனர்.

சமூகநீதி

சமூகநீதி என்று எடுத்துக் கொண்டாலும் மத்திய அரசும் சரி, சங்பரிவார்களும் சரி, பிஜேபியும் சரி எப்பொழுதுமே எதிர் நிலைக்கொள்கை உடையவர்களே.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு. மோகன்பகவத் வெளிப்படையாகவே இடஒதுக்கீடுக் கொள்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும், பெண்கள் கணவனைவிட அதிகம் படித்தால், சம்பாதித்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும் என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்.. (4.7.2014 - நாக்பூரில்)

தேசிய புதிய கல்விக் கொள்கை என்ற ஒரு திட்டத்தை தேசிய அளவில் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வியாளர் இல்லாத ஒரு குழுவை நியமித்து, மாநில அரசுகளின் கருத்துக்களைக் கூடக் கேட்டுப் பெற்றுக் கொள்ளாமல், தான் தோன்றித்தனமாக இந்துத்துவாவை மய்யமாகக் கொண்டு அத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம், இந்தி திணிப்பு, வேதம், குருகுலம், 5ஆம் வகுப்புக்குமேல் இரு முறை தேர்வில் தோல்வி அடைந்தால், அச்சிறுவர்களை தொழில் கல்விக்கு அனுப்புதல் (அந்த வயதில் குலத் தொழிலுக்குத்தானே செல்ல முடியும்!) போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு 'நீட்' என்னும் நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர் மற்றும் கிராமப்புறங் களைச் சேர்ந்த இருபால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று தெரிந்திருந்தும், உயர்ஜாதி ஆதிக்க நலன் சார்ந்த நோக்கத்தோடு  'நீட்' கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம், பாடத் திட்டம்  இல்லாத போது சி.பி.எஸ்.இ. முறையில் 'நீட்' தேர்வு நடத்தப்படும் என்பது இதன் நோக்கத்தை அம்பலப்படுத்தக் கூடியதாகும்.

மத்திய பிஜேபி ஆட்சி என்பது சமூகநீதிக்கு எதிராக திட்டமிட்டு செயல்படக் கூடியது என்பது வெளிப்படையே! - இவற்றையெல்லாம் முறி யடிக்கும் வகையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தன்மையில் நாட்டின் பொதுத் தன்மையையும், நலன்களையும் உத்தேசித்து மாநில உரிமை, மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய மூன்று முக்கிய விழுமிய நோக்கங்களை முன்னிறுத்தி  இவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பிற்கு "ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு" என்று பெயர் சூட்டப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் இருப்பார்கள்.

முதற் கட்டமாக நாடு தழுவிய அளவில் பரப் புரைப் பிரச்சார மண்டல மாநாடுகள் நடத்தப்படும்.

1) கோவை அல்லது திருப்பூர், 2) சேலம் அல்லது தருமபுரி, 3) விழுப்புரம் அல்லது காஞ்சிபுரம், 4) திருச்சி, 5) திருவாரூர், 6) மதுரை, 7) திருநெல்வேலி அல்லது நாகர்கோயில் 8) சென்னை  ஆகிய எட்டு இடங்களில் மாலை நேர மண்டல மாநாடுகளாக நடத்தப்படும்.

பிரச்சாரம் பொதுக் கூட்டங்கள் மட்டுமின்றி சிறு சிறு வெளியீடுகள் அவற்றை மக்கள் மத்தியில் பரப்புவது - சமூக வலை தளங்கள், இணைய தளங்களைப் பெரும் அளவில் பயன்படுத்துவது என்பதும் உள்ளடக்கமாகக் கொண்ட பிரச்சாரமாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வருகை தந்தோர்

1.            கி. வீரமணி (திராவிடர் கழகம்),

2.            வி.பி. துரைசாமி (தி.மு.க.),

3.            சு. திருநாவுக்கரசர் (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

4.            தா. பாண்டியன் (தேசியக்குழு உறுப்பினர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)

5.            பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)

6.            டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன் (மாநிலத் துணைத் தலைவர், த.மா.கா.),

7.            நா. பெரியசாமி (மாநில செயற்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),

8.            முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)

9.            மு. முகமது யூசுப் (பொருளாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

10.          சுப. வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

11.          பி.எஸ். ஹமீது (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்)

12.          கே.கே.எஸ்.எம். தேகலான் பாகவி (எஸ்.டி.பி.அய். கட்சி),

13.          கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

14.          வீ. அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

15.          வீ. குமரேசன் (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்)

16.          பாலாஜி (துணைப் பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

17.          அ. இராமசாமி (தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)

18.          ந.க. மங்களமுருகேசன் (செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)

19.          பெ. விஸ்வநாதன் (இந்திய தேசிய காங்கிரஸ்)

20.          உ.பலராமன் (இந்திய தேசிய காங்கிரஸ்).

Comments  

 
#1 s.Udayakumar 2017-03-27 20:57
இன்றைய காலகட்டத்திற்கு அனைவரையும் ஒன்றினைப்பது அவசியம் ஆகும்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner