எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநில உரிமை, மதச்சார்பின்மை, சமூகநீதிக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தை திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருப்பது சரியானதாகும்

இந்த அமைப்பை அகில இந்திய அளவிலும் விரிவுபடுத்த திராவிடர் கழகம் முனையவேண்டும்

ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தலைவர்கள் கருத்துகள்

மாநில உரிமை, மதச்சார்பின்மை, சமூகநீதி இம்மூன்றுக்கும் இன்றைய காலகட்டத்தில் அறைகூவல் ஏற்பட்டுள்ளதால், அவற்றை முறியடித்து - இவற்றைப் பாதுகாக்கவும், ஒருங் கிணைக்கப்பட இந்தக் கூட்ட அமைப்பாளரான ஆசிரியர் வீரமணி அவர்கள் இந்திய அளவில் எடுத்துச் செல்லவேண்டும் என்றும், இதனை ஒருங்கிணைக்கவும், செயல்படுத்தவும் தேர்தல் அரசியலில் ஈடுபடாத திராவிடர் கழகம், அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொருத்தமானவர் - வெற்றியோடு அதனை முடிப்பார் - அதற்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என்றும், அரசியல் கட்சி, சமூக அமைப்புகளின் தலைவர்கள் கருத்துரைத்தனர்.

இதற்கான தொடக்கக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று (27.3.2017) காலை 11 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாநில உரிமை - சமூகநீதி - மதச்சார்பின்மை - இவைகளுக்கு மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சி பெரும் அறைகூவலாகவே இருக்கிறது.

நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது உத்தரப்பிரதேசத் தில் அதிக இடங்களை வெற்றியாகக் கொடுத்தால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோவில் கட்டுவோம் என்று சொன்னவர் நரேந்திர மோடி - (அப்பொழுது அவர் பிரதமராகக்கூட இல்லை).

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உ.பி.யில் மிகப் பெரிய வெற்றியை எட்டிய நிலையில்,  மிகுந்த இறுமாப்புடன், அயோத்தியில் ராமன் கோவிலை எழுப்புவோம் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றமும் அயோத்தியில் ராமன் கோவில் கட்டும் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டது.

உ.பி.யில் 312 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலிலேயே போட்டியிடாத யோகி ஆதித்யநாத் என்கிற கோவில் பூசாரியைத் தேடித் தேர்ந்தெடுத்து முதல மைச்சராக ஆக்கியிருக்கின்றனர்.

இவருடைய திருக்கல்யாண குணங்கள் யாவை என்று பட்டியலிட்டால் மிகப்பெரிய அளவில் விரியத்தான் செய்யும்.

எத்தகைய வெறியர் - அருவருப்பானவர் என்பதற்கு ஒன்றை மட்டும் சொன்னாலே போதுமானது. மரணமடைந்து புதைக்கப்பட்ட முசுலிம் பெண்களைத் தோண்டி வெளியே யெடுத்து புணரவேண்டும் என்று சொல்லக்கூடிய ஒருவரை ஒரு குடிமகனாகக் கூட எண்ணிப் பார்த்திட மனம் கூசுகிறது. அத்தகைய ஒருவரை முதலமைச்சராக ஆக்கியுள்ளனர் என்றால், அதற்குக் காரணமானவர்களை என்னவென்று சொல்லுவது. காரணமானவர்கள் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார் என்று எண்ணுகிறபோது வெட்கத்தால் தலை குனியத்தானே செய்யும்.

உ.பி.யில் ஆட்சி அமைக்கப்பட்ட சில நாள்களிலேயே மசூதி களில் ஏறிக் காவிக் கொடியை ஏற்றியுள்ளனர். மாட்டுக்கறிக் கசாப்புக் கடைகளைத் துவம்சம் செய்துள்ளனர். அரசு ரீதியாகவும் அத்தகைய கடைகளின் உரிமங்களை ஒரே வரியில் ரத்து செய்துவிட்டனர். காவல்துறையில் பணியாற்றும் முசுலிம் அலுவலர்களை, அதிகாரிகளை வேலை நீக்கம் செய்துள்ளனர்.

உ.பி. முதல்வரின் கைக்குட்டைகூட காவியில்தானாம். தங்கும் விடுதிகளின் ஜன்னல் திரைகள்கூட காவி நிறத்தில் இருக்கவேண்டுமாம். அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? ஏற்கெனவே இருந்த திரைச்சீலைகளைக் காவி நிறமாக (டையிங்) மாற்றுகிறார்களாம்.

குஜராத் மாநிலத்தை இந்துக்களின் சோதனைச் சாலையாக ஆக்கிய கூட்டம் அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் பசுவதைத் தடையைக் கொண்டு வருகிறது. மாட்டுக்கறி சாப்பிடுவதைத் தடை செய்ய முனைகிறது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மிகவும் சரியாகவே சொன்னதுபோல, எண்ணும் உரிமை, உண்ணும் உரிமைகூட, பி.ஜே.பி. ஆட்சியில் காவு கொடுக்கப்பட்டு விட்டது.

குடியரசு நாள் விளம்பரத்தில்கூட செக்குலர், சோசலிஸ்ட் என்ற சொற்கள் நீக்கப்படுகின்றன.

சமூகநீதி என்று எடுத்துக்கொண்டாலும், பல்வேறு எதிர் நடவடிக்கைகள் - பி.ஜே.பி. ஆட்சியில் ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வு - மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு.

1) ‘நீட்’ என்னும் அகில இந்திய மருத்துவ தேர்வுக்கான நுழைவுத் தேர்வு

2)  மாநிலக் கல்வி உரிமையில் தலையீடு

3) சி.பி.எஸ்.இ. முறையில் தேர்வு அமைவதால் மற்ற பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்குக் கடும் பாதிப்பு.

குஜராத் முதல் அமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது ‘நீட்’ தேர்வை எதிர்த்தவர் என்பது நினைவூட்டத்தக்கதாகும்.

இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் கல்வி முறை இல்லாதபோது  - இந்தியா முழுமைக்கும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட முறையில் ‘நீட்’ தேர்வு நடத்துவது ஒரு சார்பு நிலையே!

முதுநிலை மருத்துவக் கல்வியில் ‘நீட்’டைத் திணித்தால் அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

‘நீட்’ தேர்வு இல்லாமல் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துக் கல்லூரி சேர்க்கை அமைந்தால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களும் பயனடைவர்; இந்த அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று மருத்துவர்களாகப் பணியாற்றுவோர் எந்த வகையில் தரம் குறைந்தவர்கள்?

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் இயற்றப்பட்டு, அது நீதிமன்றத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, அதற்கு மாறாக  ‘நீட்டை’த் திணிப்பது - மத்திய அரசு மாநில அரசின் மீது தன் அதிகாரத்தைத் திணிப்பது எந்த வகையில் நியாயம்?

2015-2016 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் திறந்த போட்டிகளுக்குரிய இடங்கள் 884 - இதில் வெறும் 68 இடங்கள்தான் முற்பட்டோருக்குக் கிடைத்தன. மீதமுள்ள 816 இடங்களும், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முசுலிம் பிற் படுத்தப்பட்டோர், அருந்ததியர் ஆகியோருக்குக் கிடைத்த னவே (BC - 599, MBC 159, SC - 23, ST - 1 முசுலிம் (பி.சி.) 32 அருந்ததியர் 2)

‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டால் இந்த வாய்ப்பு முற்றிலும் தகர்க்கப்படும்.

தேசிய புதிய கல்விக் கொள்கை

1) இந்தியாவுக்கென்று ஒரே மாதிரி கல்வி என்பது பொருந்தாது.

2) பல இனங்கள், பல மொழி, பல கலாச்சாரங்கள், பல தட்ப வெப்ப நிலையில் உள்ள ஒரு துணைக் கண்டத்திற்கு ஒரே மாதிரியான கல்வி என்பது எப்படிப் பொருந்தும்?

3) தமிழ்நாட்டைப் பொருத்தவரை இரு மொழிகள்தான்; ஆனால் தேசிய புதிய கல்வியில் மூன்று மொழிகள்; முக்கியமாக சமஸ்கிருதம் கட்டாயம்.

4) அனைத்துப் பள்ளிகளிலும் ஆன்மிக வகுப்புகள் இதன் பொருள் இந்து மதப் பிரச்சாரம்தான்.

5) பாடத் திட்டங்கள் சுதேசிமயம் (அதாவது காவிமயம்)

6) 5ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்வு. அதற்குமேல் இரண்டு முறை தோல்வி அடைந்தால் -தொழில் கல்விக்கு அனுப் பப்படுவார்கள். 10 வயதில் தொழில் கல்வி என்றால் பெரும்பாலும் அப்பன் தொழில்தான் - குலக்கல்விதான். அதாவது ராஜாஜி  1954-இல் கொண்டு வந்த குலக்கல்வி.

7) ஆண் - பெண் சேர்ந்து படிக்கக் கூடாது.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

1) கை விடப்பட்ட மீத்தேன் திட்டம் மீண்டும் வருகிறது.

2)ஹைட்ரோகார்பன்திட்டம்-தொடர்போராட் டங்களுக்குப் பிறகும்கூட மத்திய அரசு கைவிடப் பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

3) காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் அதனை அமைக்குமாறு கூறுவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று மத்திய பிஜேபி அரசு கூறும் போக்கு.

காவிரி டெல்டாவில் 20 ஆண்டுகளுக்கு முன்வரை 1.10 லட்சம் ஹெக்டேரில் குறுவை, 4 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடிகள் நடைபெற்றன. (ஒரு ஹெக்டேர் 2.47 ஏக்கர்).

நடுவர் மன்ற தீர்ப்பின்படி கருநாடக மாநிலத்தில் விவசாய பாசனப் பரப்பை 10 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது. ஆனால் 19 லட்சம் ஏக்கர் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கருநாடக அமைச்சரே அறிவித்தார். 2006 டிசம்பருக்குள் மேலும் 6 லட்சத்து ஏழாயிரம் ஏக்கர் பாசனப் பரப்பை விரிவுபடுத்திடத் தீவிரமாக செயலில் இறங்கியது கருநாடகம். இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5500 கோடி.

அதே நேரத்தில் தமிழ்நாட்டின் நிலை என்ன? மேட்டூர் அணை உருவாக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு 28 லட்சம் ஏக்கர் ஆகும். 2000 ஆண்டிலே பதினேழரை லட்சம் ஏக்கராகக் குறைந்து போனது. 2005இல் 16 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர். இந்த நிலை தொடருமானால் தமிழ்நாட்டில் 30 விழுக்காடு பாசனப் பரப்பு காணாமற் போய்விடும் என்கின்றனர் வல்லுநர்கள். தமிழ்நாட்டுக் கிராமப் பகுதிகளில் 49 சதவிகிதம் பகுதியினர் விவசாயிகள். இவர்களில் தாழ்த் தப்பட்டோர் 86.25 விழுக்காடாகும். விவசாயத்தில் ஆண்டுக்கு 70 நாட்களுக்குக்கூட வேலை கிடையாது. இதுதான் தமிழ்நாட்டின் பரிதாப நிலை!

4) பாலாற்றுப் பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருந்தும், அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல் தடுப்பணையின் உயரம் 5 அடி யிலிருந்து 12 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பாலாற்றை நம்பி தமிழ்நாட்டில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. பல நகரங்களுக்குக் குடிநீர் வழங்குவதும் பாலாறுதான். அதுவும் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை. வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்கள் குடிநீருக்கு பாலாற்றை நம்பித்தான் இருக்கின்றன. இவற்றிற்குப் பேராபத்து.

5) கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணையைக் கேரளத்தில் கட்டும் முயற்சி யில் பிடிவாதமாக உள்ளது.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே முக்காலியில் அணை கட்ட கேரள அரசு முடிவு. சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கை கேரள அரசால் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதியையும் கேரளா பெற்று விட்டது.

முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கம் - 152 அடியி லிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டதால் தென் மாவட்டங்களில் தரிசான நிலம் 38 ஆயிரம் ஏக்கர்; இரு போகம் - ஒரு போகமாக மாறிய நிலம் - 26 ஆயிரம் ஏக்கர். ஆற்றுநீர் குடியிலிருந்து நீர் வரத்து இல்லாமையால் ஆழ் குழாய் சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர். விவசாய உற்பத்தி இழப்பு ஆண்டு ஒன்றுக்கு 500 கோடி ரூபாய். மின் உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு 3531 கோடி ரூபாய்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள பாண்டியாற்றின் நீர் முழுவதும் கேரளாவுக்குச் சென்று, புன்னம்புழா ஆற்றுடன் கலந்து கடலில் சங்கமம் ஆகிறது. இந்த நீரைத் தமிழகத்திற்குப் பயன்படும் வகையிலும், மின் உற்பத்தி செய்யவும் பாண்டியாறு - புன்னம்புழா நீர் மின் திட்டம் 1969ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. கேரளாவைப் பழி வாங்க தமிழ்நாடு நினைத்தால் கேரளாவின் ஜீவ நதியான சாலியார் ஆற்றில் நீர் வரத்து அடியோடு நின்று விடும் என்பது கவனிக்கத்தக்கது.

6) தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல்

1) இதுவரை 530 தமிழக மீனவர்கள் கொல்லப் பட்டனர்.

2) தமிழக மீனவர்கள் கைது - இலங்கையில் சிறையில் அடைப்பு - தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் என்பதெல்லாம் தொடர் கதையாகவே உள்ளன.

3) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் தமிழக மீனவர்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண் டிருக்கும் கால கட்டத்திலேயே தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல், சிறை பிடிக்கப்படுதல் படகுகள் பறிமுதல் என்பவை எல்லாம் சர்வ சாதாரணமே.

7) தமிழ்நாட்டுக்கு வறட்சி நிதியாக ரூ.39695 கோடி நிதியை அளிக்குமாறு தமிழ்நாடு அரசு மத்திய அரசைக் கோரிய நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ளதோ வெறும் ரூ.1748.28 கோடியே.

8) சிவகங்கையை அடுத்த கீழடி அகழ்வாராய்ச்சியில் கிமு 2ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய திராவிடர் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் உண்மைகள் வெளியில் வந்தால் ஆரிய நாகரிகத்திற்கு முந்தையது திராவிடர் - தமிழர் நாகரிகம் என்பது உறுதிப்படும் என்பதால் அந்த ஆய்வுக்கு முட்டுக்கட்டை போடப் பட்டு வருகிறது.

9) 2014-2015 ஆம் ஆண்டு மத்திய நிதி நிலை  அறிக்கையில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கை விடப்பட்டது. மாறாக குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரா மாநிலங்களில் அமைக்கப்படும் என்று மத்திய பிஜேபி அரசால் அறிவிக்கப்பட்டது.

10) ரயில்வே துறைப் பணி நியமனங்களில் தமிழ் நாட்டில் வடநாட்டுக்காரர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

2000 முதல் 2010ஆம் ஆண்டு வரை 7 தமிழ் அதிகாரிகளுக்கு 3 வட இந்திய அதிகாரிகள் என்ற விகிதத்தில் இருந்தது. 2011-2016 கால கட்டத்தில் இந்த விகிதாச்சாரம் 8 வட இந்தியர்களுக்கு 2 தமிழர்கள் என்ற நிலையாக மாறியுள்ளது.

அஞ்சல் துறையைப் பொறுத்தவரை அண்மையில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் (போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு பணிகளுக்கு) தமிழ்ப் பாடத்தில் அரியானாவைச் சேர்ந்தவர்கள் இருவர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். ஏராளமான அரியானா மாணவர்கள் 25-க்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழில் இடம் பிடித்துள்ளனர். இது நம்பத் தகுந்ததாக இல்லை. வட நாட்டு மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் இதில் ஊழல் நடந்திருப்பது வெளிப்படை.

ரயில்வே துறையில் குரூப் ‘டி’ பணியாளர்களுக்கான செய்யப்பட்ட விளம்பரத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் இரண்டரை லட்சம் தமிழக மாணவர்களின் விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்போர் இணைக் கும் சான்றிதழ்களுக்கு அரசு அதிகாரிகளின் சான் றொப்பம் (கிttமீstணீtவீஷீஸீ) தேவை என்று மத்திய அரசின் விளம்பரத்தில்  (ஆங்கில ஏடுகளில்). ஆனால் தமிழில் வெளியிடப்பட்ட  விளம்பரங்களில் அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை என்று வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த முரண்பாட்டின் அடிப்படையில் தமிழகத் தில் இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் நிரா கரிக்கப்பட்டுள்ளன. இதிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் களுக்கு வேண்டுமென்றே அநீதி இழைக்கப்பட்டது.

மாநில உரிமை, சமூகநீதி, மதச்சார்பின்மை என் னும் இம்மூன்றும் அரசமைப்புச் சட்ட ரீதியாகவே அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.

இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு. ஆனால், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந் துள்ள பி.ஜே.பி. தலைமையிலான நரேந்திர மோடி அரசு இவற்றைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப் படாமல், தானடித்த மூப்பாக இந்தியாவைக் காவி மயமாக்குவதில் மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது.

இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தவேண்டும். மாநில உரிமை, சமூகநீதி, மதச்சார்பின்மையைப் பாது காக்கவேண்டும் என்ற உயர்ந்த சிறந்த நோக்கத்தோடு - இதில் ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளை, சமூக அமைப்புகளை அழைத்துக் கலந்துரையாடி தக்கதோர் முடிவு எட்டப்படவேண்டும் என்ற அடிப்படையில், திராவிடர் கழகம் சார்பில், அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைப்பு ஒன்றினை அளித்தார்.

அதன் அடிப்படையிலேயே தி.மு.க., காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநிலக் காங்கிரஸ், முசுலிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க., எஸ்.டி.பி.அய்., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை, திராவிடர்  வரலாற்று ஆய்வு மய்யம் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள்,  பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்ட அழைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கூட்டத்தின் நோக்கம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் தொடக்கத்திலேயே எடுத்துக் கூறினார்.

மதவாத அடிப்படையிலும், சமூகநீதிக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான நிலையில், மத்திய பி.ஜே.பி. ஆட்சி செயல்படுவதை வரிசைப்படுத்தி எடுத்துக் கூறினார். இவற்றினை இந்திய அளவில் முறியடிக்க தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண் முன்னோடியாக இருக்கவேண்டும். அதற்கான ஆலோசனைகளைக் கூறுமாறும்  கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் துணைத் தலைவரும், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன் அவர்கள் தன்னுரையில், தமிழ்நாட்டில் கால்பதிக்க ஆர்.எஸ்.எஸ். முயலுகிறது. சரியான நேரத்தில் இந்தக் கூட்டத்தைத் திராவிடர் கழகம் கூட்டியிருக்கிறது. இந்த முயற்சிக்கு த.மா.கா. உறுதுணையாக இருக்கும். வளமையான தமிழகம், வலிமையான பாரதம் என்பதே த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அவர்களின் விருப்பம், நோக்கம் என்று எடுத்துக் கூறினார்.

பேராசிரியர் ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசி ரியர் ஜவாஹிருல்லா அவர்கள் தன்னுரையில் குறிப்பிட் டதாவது:

நம்முடைய பிரச்சாரம் சமூக வலைதளங்களில் வேகமாக இருக்கவேண்டும். நமது பிரச்சாரம் அடிமட்டம் வரையில் (Gross Route) சென்றாக வேண்டும். மத வாதப் பிரச்சினைகளையும் தாண்டி மத்திய அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. தவறான வகையில் இரயில்வே துறை பணிக்கான விளம்பரத்தை வெளியிட்ட காரணத்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் இரண்டரை இலட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று கூறிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள், திராவிடர் கழகத்தின் இந்த அரிய முயற்சிக்கு எங்கள் அமைப்பு ஒத்துழைப்புக் கொடுக்கும் என்றார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் குறிப்பிட்டதாவது:

பசுவை அவமதிப்போர் ‘பாரத் மாதாகி ஜெ‘ என்று சொல்லாவிட்டால், கையை வெட்டுவோம் என்கிறார் - ஊடகங்களின் முன்னிலையிலேயே இதனைச் சொல்லியிருக்கிறார்கள். பசுவைக் கொன்றால் தூக்குத் தண்டனை அளிக்கவேண்டும் என்கிறார் சு.சாமி. இவ்வாட்சியில், மாடுகள் வாழட்டும், மனிதர்கள் சாகட் டும் என்பதுதான் கொள்கையாக இருக்கிறது.

ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தவேண்டும். சிறுசிறு நூல்களாக வெளியிடவேண்டும். முக்கிய தொலைக்காட்சியில் அரைமணிநேரம் பெற்று நமது கருத்துகளை எடுத்துரைக்கவேண்டும் என்று கூறினார்.

நா.பெரியசாமி

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் நா.பெரியசாமி அவர்கள் தனது கருத்தாகக் கூறியதாவது:

இந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியதற்காக திராவிடர் கழகத்தையும், ஆசிரியரையும் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து திராவிடர் கழகம் இந்த அரிய பணியைச் செய்து வருகிறது. கல்வி நிறுவனங்களின் முன்கூட பிரச்சாரம் செய்து வருவது நல்ல பலன் அளிக்கக் கூடியது.

திராவிடர் கழகத்துக்கு வாக்கு கேட்கும் அவசியம் இல்லை.  அதன் முடிவுகளுக்கு அரசியல் நோக்கமும் கற்பிக்க முடியாது. அந்த நிலையில் இத்தகு ஒருங் கிணைப்பை திராவிடர் கழகம் எடுப்பதுதான்  சரியான தாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

மு.முகம்மது யூசுப்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொரு ளாளர் மு.முகம்மது யூசுப் அவர்கள் குறிப்பிட்டதாவது;

பல முக்கியமான காலகட்டங்களில் எல்லாம் நமது ஆசிரியர் அவர்கள் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர். இந்தக் கூட்டமும் அந்த வகையைச் சார்ந்ததுதான். எங்களுக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் உறுதுணையாக இருந்து வருகிறார். மதவாதத்தோடு ஜாதிய வாதங்களும் தலைதூக்குகின்றன.  அவற்றை முறியடிக்க இந்த ஒருங்கிணைப்பு நிச்சயமாக உதவும் என்று குறிப்பிட்டார்.

கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி

எஸ்.டி.பி.அய். தலைவர் குறிப்பிட்டதாவது: திரா விடர் கழகம் அனைவருக்குமே தாய் அமைப்பு என்று பலரும் கருதுகிறார்கள்.

தமிழ்நாடு பல வகைகளிலும் வஞ்சிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை இந்தியாவில் ஒரு மாநிலமாக மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. நாம் ஓரணியில் திரண்டு சக்தியைக் காட்டவேண்டியது அவசியமாகும். மண்டல வாரியாக மாநாடுகளை நடத்தவேண்டும் என்று கூறினார்.

பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்

இந்திய யூனியன் முசுலிம் லீக்கின் அகில இந்தியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது:

சரியான நேரத்தில் இந்தக் கூட்டத்தை நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் கூட்டியிருக்கிறார். நல்ல ஆவணங்களும் இங்கு நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ளன. திராவிடர் கழகம் என்பது சமூகப் பிரச்சினைகளுக்காகப் போராடி வெற்றி கண்ட இயக்கம்.

1950-களில் இட ஒதுக்கீட்டுக்காக அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதற்குப் பெரியார் காரணமாக இருந்தார்கள்.

மத்திய அரசு துறைகளில், கல்வியில், வேலை வாய்ப்பில் 27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கப் பெற, மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்திட, திராவிடர் கழகமும், அதன் தலைவரும் ஓயாத பிரச்சாரங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு உழைத்ததை மறக்க முடியாது. திராவிடர் கழகத்தின் முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே!

பிரசிடெண்ட் ஃபாம் ஆஃப் டெமாக்கிரசி கொண்டுவரத் துடிக்கிறார்கள்;

இதில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்; அதிகார மய்யம் டில்லிக்குச் செல்லப் பார்க்கிறது. நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம் இது என்று கூறினார்.

தோழர் தா.பாண்டியன்

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் குறிப்பிட்டதாவது:

அதிகார போதை தலைக்கேறியுள்ளது. அதனை அடக்கியாகவேண்டும். நாம் நமக்குள் எவ்வளவுக்கெவ்வளவு விலகி நிற்கிறோமோ அவ் வளவுக்கவ்வளவு அவன் உள்ளே நுழைவான்.

நமது மாநிலத்தின் பிரச்சினைகள் அகில இந்திய தலைமைக்குத் தெரிவதில்லை. முதற்கட்டமாக தமிழ் நாட்டில் ஒருங்கிணைவோம். அகில இந்திய தலைமைகளை இங்கே வரவழைத்துப் பேசுவோம் - அறைகூவல்களை வெற்றிகரமாக சந்திப்போம். முதற்கட்டமாக சென்னையில் பெரிய அளவு மக்களைத் திரட்டிக் காட்டுவோம் என்றார்.

சு.திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநா வுக்கரசர் அவர்கள் குறிப்பிட்டதாவது:

இந்தக் கூட்டத்திற்கான அழைப்பிலேயே சுருக்கமான அளவுக்குச் செறிவாகக் காரணங்கள் கூறப் பட்டுள்ளன.

மத்திய அரசு மதச்சார்பின்மைக்கு விரோதமாக மட்டுமல்ல ஜனநாயக விரோதமாகவும் செயல்பட்டுக் கொண்டுள்ளது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில், எப்படி எப்படியெல்லாம் மத்திய அரசு நடந்துகொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். தனிநபர்கள் பிரச்சினையல்ல - சட்டத்தின் நிலை என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.

வார்தா புயல், வறட்சி, 250-க்கும் மேற்பட்ட விவசாயி கள் மரணம், குடிநீர்ப் பஞ்சம் இவற்றிற்காக 88 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி உதவி தேவை என்கிறது தமிழ்நாடு அரசு - மத்திய அரசு கொடுக்க முன்வந்திருப்பதோ வெறும் ரூ.3000 கோடிதான்.

இந்தக் கூட்டத்தின் நோக்கம்பற்றிக் கூறும்போது மாநில உரிம¬யும் கூறப்பட்டு இருப்பதும் முக்கிய மானதாகும்.

முதற்கட்டம் பிரச்சாரம் - மாநாடுகள், அடுத்த கட்டம் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி என்று நமது நடவடிக்கைகள் தொடரவேண்டும்.

தேர்தல் ஆதாயம் பாராத திராவிடர் கழகம் முன்னெடுக்கும் முயற்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணையாக நிற்கும். காங்கிரசைப் பொறுத்தவரை இந்தியாவில் மதச்சார்பற்ற தன்மையைக் கட்டிக் காத்து வந்த கட்சியாகும் என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு தி.மு.க. சார்பில் நன்றி யையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தேர்தல் நேரம், ஒரு கடிதம்மூலம் இவ்வளவுப் பேர்களையும் ஒருங்கிணைத்துள்ள  ஆசிரியர் அவர்கள் தலைமையேற்று இந்த மூன்று பிரச்சினைகளிலும் நமது உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும்.

பிரச்சார அணி ஒன்றை ஏற்படுத்தவேண்டும். கருநாகம் நம்மைக் கடிக்க வருகிறது.

தென்னாட்டில்  ஆந்திரா, கேரளா, கருநாடகம், தமிழ்நாட்டை நாம் முதலில் ஒருங்கிணைத்தால் இந்த மதவாத சக்திகளை இந்திய அளவிலேயேகூட விரட்டியடிக்கலாம்.

இந்த  நாள் ஒரு முக்கியமான நாள். 100-க்கு 100 அல்ல; 200 சதவிகிதம் வெற்றிகரமாக நமது ஆசிரியர் அவர்கள் நம்மை அழைத்துச் செல்லுவார் என்பதில் அய்யமில்லை. என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

இந்த அமைப்புக்கு ‘‘ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு’’ என்று பெயர் சூட்டப்படுகிறது.

பரப்புரைக்கு முதல் இடம் - முதல் மண்டல மாநாடு அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான வரும் ஏப்ரல் 14 அன்று தொடங்கப்படும். இங்கு கலந்துகொண்டுள்ள அத்துணைக் கட்சித் தலைவர்களும், அந்நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும்.

இந்தக் கூட்டத்துக்கு வர வாய்ப்பில்லாதவர்கள் இதற்குப் பிறகும்கூட இந்த ஒருங்கிணைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

நம்மை எது இணைக்கிறதோ அதனை அகலப்படுத்துவோம்;

எது நம்மைப் பிரிக்கிறதோ அதனை அலட்சியப்படுத்துவோம் -

இதுதான் தந்தை பெரியார் அவர்களின் அணுகுமுறை.

பொதுக்கூட்டங்கள் மட்டுமல்ல, இணைய தளம் உள்பட ஓர் அமைப்பை உருவாக்கி வேகமாகச் செயல்படுவோம் என்று குறிப்பிட்டார்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் மார்ச் 27 விடியலை நோக்கிய மார்ச்சு என்று கூறிவிடலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner