எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட் தேர்வு பிரச்சினையாக இருந்தாலும் - விவசாயிகள் பிரச்சினையாக இருந்தாலும் - காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தாலும்

தமிழக அரசின் உரிமைகள் வஞ்சிக்கப்படுகின்றன -பறிக்கப்படுகின்றன!

நாகர்கோவிலில்  செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

நாகர்கோவில், மார்ச் 29- நீட் தேர்வு பிரச்சினையாக இருந்தாலும் சரி, விவசாயிகள் பிரச்சினையாக இருந்தாலும், காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தாலும் மாநில அரசினுடைய உரிமைகள் வஞ்சிக்கப்படுகிறது, பறிக்கப்படுகிறது என்று செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.

நாகர்கோவிலில் இன்று (29.3.2017) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா!

செய்தியாளர்: சென்னை ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் பிரச் சாரத்தின்போது ஆளுங்கட்சி பணப்பட்டுவாடா செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதுபற்றி...?

தமிழர் தலைவர்: தேர்தல் ஆணையம் என்கிற ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது என்பது குறித்து சந்தேகமாகத்தான் இருக்கிறது அங்கிருந்து வருகின்ற செய்திகளைப் பார்க்கும் பொழுது. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா மிகத் தாராளமாக நடைபெறுகிறது என்றும், பறக்கும் படை உதவியோடு நடைபெறுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. நான் இன்னும் ஆர்.கே.நகர் தொகுதிக்குச் செல்லவில்லை.

ஏற்கெனவே, பணத்தால் வெற்றி பெறலாம் என்கிற சூத் திரத்தை ஆளுங்கட்சியினர் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரையில் ஆம்புலன்சில் நோயாளிகள்தான் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் புதிதாக, ஆம்புலன்சில் நோயாளிகளுக்குப் பதில் நோட்டே பயணம் செய்யும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆகையால், இந்த இடைத்தேர்தலிலாவது தேர்தல் ஆணை யம் கொஞ்சம் விழிப்பாக இருந்து, காவல்துறையும், மற்றவர்களும் தங்களுடைய சட்டம் ஒழுங்கு முறையைக் காப்பாற்றுவதோடு, பணப் பட்டுவாடாவை தடுப்பது என்பது அவசியம்.

எதிர்க்கட்சிக்காரர்கள் தடுத்தால், அதனால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதிகாரிகளை மாற்றுவதன் நோக்கமே அதனடிப்படையில்தான். இதையெல்லாம் மீறி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

மத்திய அரசின் இரட்டை வேடம்

செய்தியாளர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளதே?

தமிழர் தலைவர்: மத்திய அரசு - மோடி அரசு எப்பொழுதுமே  இரட்டை வேடம் போட்டு - இரட்டைக் குரலில் பேசுவது அவர்களுக்கு வழக்கம்.

நெடுவாசலில் மக்கள் திரண்டு பெரிய போராட்டத்தினை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதேபோன்று வடகாடு மற்ற பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தினை நடத்திக் கொண் டிருந்தபோது, அவர்களிடம் என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டது என்றால், நாங்கள் உங்களுடைய அனுமதியில்லாமல் ஒப்பந்தம் போடமாட்டோம் என்று சொல்லப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், இதனை தமிழ்நாட்டில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் செயல்படுத்த விடமாட்டோம் என்று சட்டப்பேரவையிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசினுடைய கருத்தைப்பற்றி கவலைப்படாமல், மாநில அரசை மதிக்காமல், அது நீட் தேர்வாக இருந்தாலும், ஹைட்ரோ கார்பன் பிரச்சினையானாலும் சரி - மத்திய அரசு இதுபோன்ற போக்கைக் கடைபிடித்து வருகிறது.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பி.ஜே.பி. தலைவர், சும்மாதான் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்.

மத்திய அமைச்சர் ஒருவர், ‘‘மக்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டு, அதற்குப் பிறகுதான் இதனை அமல்படுத்துவோம்‘’ என்று சொல்கிறார்.

இதில் தமிழக அரசினுடைய நிலைப்பாடு - கடுமையான எதிர்ப்பை நாங்கள் தெரிவிக்கிறோம் என்பதையும், மக்களுடைய எதிர்ப்பு இருக்கிறது என்பதையும் மத்திய அரசுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும்.

தமிழக விவசாயிகள்

டில்லியில் போராட்டம் நடத்துவதுபற்றி...

செய்தியாளர்: தமிழக விவசாயிகள் டில்லியில் கடந்த பல நாள்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்களே?

தமிழர் தலைவர்: உத்தரப்பிரதேசத்திற்குச் சென்று விவசாயி கள் கடனை ரத்து செய்வோம் என்று தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். விவசாயிகளையெல்லாம் வாழ வைப்போம் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் சொல்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அப்படி அவர்கள் நடந்துகொள்வதில்லை.

தமிழக விவசாயிகள் கோவணம் கட்டிக்கொண்டு, மண்டை ஓடு மாலைகளை அணிந்துகொண்டு, பட்டினிப் போராட் டத்தினை நடத்திக்கொண்டிருக்கையில், அவர்களுக்கு ஆதர வாக மற்ற கட்சியினரும் திரளுகிறார்கள், அண்டை மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

மத்திய அரசை எதிர்த்து ஏன் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று மத்திய அமைச்சர் கேட்கிறார்.

மத்திய அரசை எதிர்த்து ஏன் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்ற நிலை வந்தது? மத்திய அரசுதானே அதற்கான நிதியினைக் கொடுக்கவேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் வறட்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 39,500 கோடி ரூபாயை வறட்சி நிதியாக மத்திய அரசே கேட்ட நிலையில், 1700 கோடி ரூபாய்தான்  நிதியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. யானைப் பசிக்கு சோளப் பொரி என்கிற பழ மொழிக்கேற்ப இது இருக்கிறது.

ஜி.எஸ்.டி. போன்றவை வந்த பிறகு, நிரந்தரமாகப் பிச்சை பாத்திரத்தை ஏந்திதான் மாநிலங்கள் வரவேண்டிய சூழ்நிலை - அதுவும் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், இருக்கின்ற நிதி ஆதாரங்கள் எல்லாம் மிகவும் சங்கடமாக இருக்கிறது என்பதை நிதித்துறை செயலாளரே சொல்லியிருக்கிறார்.

இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால், தமிழக நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் மூன்றே நாள்களில் முடிந்து விட்டது. இது உலக அதிசயங்களில் ஒன்றாகவே இருக்கிறது. மானிய கோரிக்கைகள்மீது விவாதம் ஒரு மாதம்வரையிலும் நடைபெறுவது வழக்கம்.

நிதித்துறை செயலாளர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார், எங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்ன வென்றால், மத்திய அரசு திட்டங்களுக்கு நாங்கள் பணத்தை செலவழித்திருக்கிறோம். ஆனால், அந்தப் பணத்தை மத்திய அரசு எங்களுக்கு இதுவரையில் கொடுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

இது சாதாரணமானதல்ல - மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மத்திய அரசு கூர்ந்து கவனித்து, நிவர்த்தி செய்யவேண்டிய மிகப்பெரிய ஒன்றாகும் இது.

ஆகவே, தமிழ்நாட்டு நிலவரத்தைப் பொருத்த வரையில், நிரந்தரமான ஆட்சி இருக்கிறதா? நிரந்தர மான ஆளுநர் இல்லை. ஆறு மாதங்களுக்கு மேலாக பொறுப்பு ஆளுநர்தான் இருக்கிறார். அதே போன்று பொறுப்பு அரசாங்கம். அதேபோன்று, உயர்நீதிமன்றத்திற்குப் பொறுப்பு தலைமை நீதிபதிதான்.

பொறுப்பு, பொறுப்பு, பொறுப்பு என்கிற நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது. இது மிகவும் வேதனைப்படவேண்டிய, துன்பப்படவேண்டிய - ஒரு காலத்தில் இந்தியாவிற்கே முதல் மாநிலமாக வழிகாட்டிக் கொண்டிருந்த ஒரு ஆட்சி - இன் றைக்குக் ஒரு கேள்விக் குறியாக ஆகக்கூடிய அவலம் ஏற்பட்டிருக்கிறது.

மத்திய பி.ஜே.பி. அரசுதான்

காரணமா?

செய்தியாளர்: இந்தப் பொறுப்பு, பொறுப்பு, பொறுப்புகளுக்குக் காரணம் மத்திய பி.ஜே.பி. அரசுதான் என்று நினைக்கிறீர்களா?

தமிழர் தலைவர்: நிச்சயமாக! ஆளுநரை நியமனம் செய்பவர்கள் யார்? அவர்கள்தானே! தமிழ் நாட்டில் மிக முக்கியமான அரசியல் பிரச்சினைகள் நடக்கின்றபொழுது, அவர் வேறு எங்கேயோ சென்றிருந்தார்.

பண்டிகைகளுக்கு வாழ்த்து செய்தி அனுப்புவது மட்டும்தான் ஆளுநரின் வேலையா?

நிரந்தர ஆளுநர் இல்லை என்றால், மக்களுடைய பிரச்சினையை யாரிடம் போய் சொல்வார்கள்?

ஒரு நிரந்தர அரசாங்கம் என்று மதிக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் இல்லை. நீட் தேர்வு தேவையில்லை என்று  வலியுறுத்தினாலும், அதனை மத்திய அரசு மதிக்கவில்லை.

ஆகவேதான், மாநில அரசின் உரிமைப் பறிப்பு;  சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்து - அது போலவே, மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் - இவை அத்தனையும் சேர்ந்து ஒத்தக் கருத்துள்ளவர்களை சேர்த்து - ‘‘ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு’’ என்கிற அமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.

அது தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சூழ்நிலையில், திராவிடர் கழகம் அரசியல் கட்சி அல்லாத ஒரு பொது அமைப்பாக இருந்து அழைத் ததினால், திராவிட  முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.அய்., திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை என்று இதுவரையில் ஒரு 10 அமைப்புகள் ஒன்றாக இணைந்திருக்கின்றன.

அதனுடைய பணிகள் வேகமாக தமிழக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைகளை செய்யும். முதல் கட்டமாக எட்டு மண்டலங்களில், இங்கே நீங்கள் கேள்வி கேட்ட அத்தனை பிரச்சி னைகளுக்கும் தீர்வு காணுவதற்கு மக்களை ஆயத் தப்படுத்துகின்ற பணியை, வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று தொடங்குகின்றோம்.

விவசாயிகளின் போராட்டத்தில்

மாநில அரசு ஒதுங்குகிறதே!

செய்தியாளர்:  தமிழக விவசாயிகளின் போராட்டம் மத்திய அரசுக்கு எதிராகத்தான் நடைபெறுகிறது என்று, மாநில அரசு ஒதுங்குகின்ற நிலை இருக்கிறதே, இது சரியா?

தமிழர் தலைவர்: அப்படி ஒதுங்கினால், மாநில அரசு செயல்படவில்லை என்றுதான் அர்த்தம். விவசாயிகள் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, நீட் தேர்வு பிரச்சினையாக இருந்தாலும் சரி, தங்களுடைய உரிமையை மாநில அரசு நிலை நாட்டவேண்டும். எதற்காக மக்கள் அவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்? ஒரு அரசு செயல்பட்டால்தான், அது அரசு. இல்லையானால், இந்த அரசுக்கும், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கும் என்ன வேறுபாடு உள்ளது?

நீட் தேர்வு குறித்து தங்கள் கருத்து!

செய்தியாளர்: நீட் தேர்வுபற்றி...?

தமிழர் தலைவர்: நீட் தேர்வைப் பொருத்த வரையில், முழுக்க முழுக்க அது சமூகநீதிக்கு விரோதமானது. அதிலும் குறிப்பாக, மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியை, பொதுப் பட்டியலுக்கு மாற்றிய பிறகு, இன்னமும் மாநில அரசுக்குத் தனியே சட்டம் இயற்ற உரிமை உண்டு. 21 ஆண்டுகளுக்கு மேலாக நுழைவுத் தேர்வு கூடாது என்பதற்காகப் போராடி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும் சரி,  அனைத்து இந்தியா அண்ணாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும் சரி, கலைஞர் ஆட்சி காலத்திலும் சரி, ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, தனியே சட்டம் இயற்றப்பட்டு, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செல்லாது என்று உயர்நீதிமன்றத்தால் சொன்ன சட்டத்தை, நிபுணர் குழுவினரைக் கொண்டு ஆய்வு செய்து - மறுபடியும் நிறைவேற்றுங்கள் என்று சொன்னபொழுது, கலைஞர் அதனை செய்தார். உயர்நீதிமன்றமும் அந்த சட்டம் என்று சொல்லி, நடைமுறையில் நுழைவுத் தேர்வு நடத்தாத நிலை இருந்தது.

காரணம் என்னவென்று சொன்னால், பெரும் பாலான பள்ளிகள் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், சமச்சீர் கல்வி என்பது மட்டுமல்ல, மெட்ரிகுலேசன் பள்ளிகள், இங்கே சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் இருப்பது ஒரு 10 விழுக்காட்டிற்கும் குறைவானதுதான். அந்த சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை மய்யமாகக் கொண்டு, இந்தியா முழுவதும் ஏதோ ஒரே கல்வி முறை இருப்பதாகக் கருதிக் கொண்டு, இந்தியா முழுவதும் ஒரே கல்விக் கொள்கையும் இல்லை - கல்வித் திட்டமும் கிடையாது. அது பல்வேறு வகையாக இருக்கிறது. அதனால், நம்முடைய கிராமப்புற மாணவர்களும், மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் உள்ள அத்தனைத் தலைவர்களும், பா.ஜ.க.வை தவிர, நீட் தேர்வு தேவையில்லை என்று சொல்லி, எதிர்க்கட்சி -ஆளுங்கட்சி என்கிற பேதமில்லாமல், சட்டத் திருத்தமும் கொண்டு வந்து அதனை ஒருமனதாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து, மத்திய அரசு அடாவடித்தனம் செய்வது, சமூகநீதியை குழி தோண்டி புதைப்பதாகும்.

அதுமட்டுமல்ல, மக்களை ஏமாற்றுவதற்காக, தமிழிலும் தேர்வு எழுதலாம் என்று சொன்னார்கள்; அதைப் பார்த்து சிலர், தமிழிலும் எழுதலாம் என்று சொல்கிறார்கள். தமிழில் பாட புத்தகமே கிடையாது என்று இன்று செய்திகள் எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

ஆகவேதான், நீட் தேர்வு பிரச்சினையாக இருந் தாலும் சரி, விவசாயிகள் பிரச்சினையாக இருந்தாலும், காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தாலும் மாநில அரசினுடைய உரிமைகள் வஞ்சிக்கப்படுகின்றன, பறிக்கப்படுகின்றன.

இதேபோன்று மதச்சார்பின்மை என்பதும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கின்ற சூழல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner